ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு பாஜக அரசே காரணம்

அலங்கா நல்லூரில் அமைதி திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி, மாநிலத்தின்  பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லுhரிலும் இப்படிப்பட்ட போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு தமிழக அரசு காவல்துறையை ஏவி தடியடி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்,  நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியிலில் இருந்து காளையை நீக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் தொடர்ந்து வலிபுறுத்தி வந்துள்ளனர். ஆனால், இதற்கான கடுகளவு முயற்சியைக் கூட மத்திய பாஜக அரசு எடுக்கவில்லை. மத்திய அரசின் இந்த அலட்சியம்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமைக்கு முக்கிய காரணமாகும்.

தமிழக அரசும், கடந்த ஆண்டு ஜல்லிக்கடடு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்ட உடனேயே, தொடர் முயற்சிகளை மேற்கொள்ளாமல் மிகத் தாமதமாக பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த நிலையில் பெயரளவுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதும் இப்போது ஏற்பட்டுள்ள மோசமான நிலைமைக்கு காரணமாகும்.

அலங்காநல்லூரில் தமிழகம் முழுவதிலுமிருந்த ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ள நிலையில், அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அலங்காநல்லுhர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, உடனடியாக தலையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேசி அமைதியை எற்படுத்துவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...