ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்த்து சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை எதிர்த்து

சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.. கண்டன ஆர்ப்பாட்டம்

08-07-2017

ஜூன் 30 நள்ளிரவில்  நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ஜி.எஸ்.டி  ஏழை எளிய மக்களுக்கு பலன் தரும் என்றார். ஆனால், ஜி.எஸ்.டி.யால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்திருக்கிறது. உணவகங்களில் உணவுப்பொருட்கள் விலையேறியுள்ளன. தண்ணீர் கேன் விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது.  நோட்டுப்புத்தகங்கள், பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்கள் மீது 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரைப்பட டிக்கெட்டுகள் மீது ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் கட்டணம் உயர்ந்துள்ளது. இவையெல்லாம் அனைத்துத்தரப்பு மக்களையும் மிகக்கடுமையாக பாதிக்கிறது.

இதுவரை வரிவிதிப்பு இல்லாத 500 பொருட்களின் மீது வரி ஏற்றப்பட்டுள்ளது.  உயிர்காக்கும் பல மருந்துகளுக்கு வரி 9 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.  கிரைண்டர்கள் மீதான வரி 4 சதவீதமாக இருந்தது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜாப் வொர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  தீப்பெட்டித் தொழில் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரில் தையல் மையங்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன. சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் வரும் 21 ஆம் தேதியிலிருந்து போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.  இதுவரை ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் செய்கின்ற நிறுவனங்கள் கலால் வரி வரம்பிற்குள் வரவேண்டும் என்றிருந்த நிலையில், ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் அந்த வரம்பு ரூ. 20 லட்சமாக்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட  1.62 லட்சம் மற்றும் பதிவு செய்யாத பல லட்சம் சிறு-குறு நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். செல்லா நோட்டு அறிவிப்பால் சிறு குறுந்தொழில்களும், வணிகர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள சூழலில்  ஜி.எஸ்.டி. அமலாக்கமும், கால்நடைச் சந்தைகள் மீதான கட்டுப்பாடும், சிறுகுறு உற்பத்தியாளர்கள் மற்றும் முறைசாரா துறைகள் மீதான தொடர் தாக்குதலாக வந்திருக்கின்றன.

பாஜக அரசின் கீழ் கார்பரேட் நிறுவனங்களுக்கு சொத்து வரி ஒழிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும்  ஊக்குவிப்பு என்ற பெயரில் பல லட்சம் கோடி ரூபாய்கள் சலுகையாகத் தரப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் வராக்கடன்களானபோது, கார்பரேட் கடன்கள் (தள்ளுபடி) ‘ரைட் ஆப்’ செய்யப்படுகின்றன. இத்தனை சலுகைகளும் இப்போதும் தொடர்கின்ற நிலையில்,  சாமானிய சிறு குறு நிறுவனங்கள் தான் வரி ஏய்ப்புச் செய்துவருவதாக அரசால் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை, சுய தொழில் வாய்ப்புகளை அழித்து அந்தச் சந்தைகளையும் கார்பரேட்டுகளின் கைகளில் வழங்குவதே பாஜக அரசின் நோக்கம்.

ஒரே நாடு, ஒரே வரி என்ற அறிவுப்பு வெற்றுப் பகட்டேயாகும். ஜி.எஸ்.டி. விகிதங்கள் மாறுபடுவதால் பெட்ரோல் மீது 57 சதவிகிதம், டீசல் மீது 55 சதவிகிதம் வரிவிதிக்கும் மத்திய மாநில அரசுகள் இவற்றை ஜி.எஸ்.டி.யின் கீழ் ஏன் கொண்டுவரவில்லை? அடக்க விலையை விட அதிகமாக வரி உறிஞ்சப்படுகிறது.   கார்ப்பரேட்டுகளின் நலன்களை மனதில் கொண்ட அரசு, சிறுகுறுந்தொழில்கள் குறித்தும், மாநிலங்களின் உரிமை குறித்தும் கவலைகொள்ளவில்லை.

ஜி.எஸ்.டி. கவுன்சிலில்  மத்திய அரசுக்கு 3 இல் ஒரு பங்கு வாக்கு இருக்கிறது. இது  மாநிலங்களின் உரிமைகளை கடுமையாக பாதிக்கும். மாநிலங்கள்  வரியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் ஜிஎஸ்டி கவுன்சிலின் ஒப்புதலை பெற வேண்டும். மத்திய அரசின் கையே கவுன்சிலில் ஓங்கி இருக்கிறது.  வரிகளை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தின், சட்டமன்றங்களிடமிருந்து இப்பொழுது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு போய்விட்டது. ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளை நாடாளுமன்றத்தின் இறுதி முடிவுக்கு உட்படுத்தாதது  ஜனநாயக மறுப்பாகும்.

எனவே, ஜிஎஸ்டி-யால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறு-குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இவற்றையெல்லாம் நீக்க வேண்டுமென மக்கள் நலக்கூட்டமைப்பு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14.07.2017 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஐ (எம்), சிபிஐ, வி.சி.க. ஆகிய கட்சிகளின் சார்பில் கூட்டாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், சிறு,குறு தொழில் முனைவோரும், வர்த்தகர்களும் கலந்து கெள்ள வேண்டுமெனவும், பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

 

ஜி. ராமகிருஷ்ணன்                    இரா. முத்தரசன்               தொல். திருமாவளவன்

மாநிலச் செயலாளர்-சிபிஐ (எம்)        மாநிலச் செயலாளர்-சிபிஐ     தலைவர்-விசிக

Check Also

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக! மக்கள் நலக்கூட்டியக்கம் பிப்.28 கண்டன ஆர்ப்பாட்டம்!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக! மக்கள் நலக்கூட்டியக்கம் பிப்.28 கண்டன ஆர்ப்பாட்டம்!!   புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் ...