ஜூன் 3ல் திறக்கப்படும் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை உறுதிப்படுத்துக!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், ‘ஏற்கெனவே அறிவித்தபடி வரும் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லையென’ கல்வியமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளிகள் உரிய காலத்தில் திறக்கப்படுவது அவசியம்தான். ஆனால், அதேநேரத்தில் கடுமையான வறட்சியின் காரணமாக நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறந்தால் உரிய முறையில் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தரப்படுமா? என்கிற ஐயம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்துள்ளது.

ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கிற மாநில அரசு, அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வாயிலாக போர்க்கால அடிப்படையில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவது உட்பட நடவடிக்கைகளை மேற்கொண்டு, பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனில் சுகாதாரக்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும். ஆகவே பள்ளிகள் அனைத்திலும் தண்ணீர் வசதி செய்வதை உறுதிப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

மத்திய பாஜக அரசு அதிரடியாக குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது.