டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது!

21.05.2017

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய

பெண்கள் மீது காவல்துறையினர் தடியடி, கைது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!!

வேலூர் மாவட்டம், அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய பெண்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அதிமுக 2016ம் ஆண்டு மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக அமலாக்குவோம் என்று அறிவித்து 1000 கடைகள் மூடப்பட்டன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள 3000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன.

மாநில அரசு தாங்கள் அறிவித்த படிப்படியாக மதுவிலக்கு கொள்கைகயை அமலாக்குவோம் என்ற முடிவுக்கு மாறாக மூடப்பட்ட கடைகளை திறப்பதற்கு முயற்சித்து வருகிறது. பள்ளிகள், கோவில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களுக்கு அருகில் இருக்கக் கூடிய டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென்று பெண்கள் மாநிலம் முழுவதும் போராடி வருகிறார்கள். இவ்வாறு போராட்டம் நடத்திய பெண்கள் மீது ஏற்கனவே திருப்பூரில் காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். தற்போது அழிஞ்சிக்குப்பம் கிராமத்தில் போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் கொடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் மீதே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஜி. ராமகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி அனைத்துக் கட்சி கூட்டத்தில் சிபிஐ (எம்) சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலைபாடு

தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 26.4.2021 அன்று காலை 9.15 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலை ...