டிச. 3 மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தினம்

1992 முதல் ஐ.நா. சபையின் முடிவின்படி ஒவ்வொரு ஆண்டும் டிச.3ம் தேதி ஊனமுற்றோருக்கான சர்வதேச தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவிகிதம் பேர்  மாற்றுத்திறனாளிகளாக வாழ்வதாக ஐ.நா. வின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த சதவிகிதத்தின் படி இந்தியா போன்ற ஏழை நாட்டில் ஊனமுற்றவர்கள் அதிகமாகவே வாழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு செய்வது நிலைமையின் தீவிரத்தை உணர உதவும்.

பொதுவாக, மாற்றுத்திறனாளிகள் குறித்த சரியான பார்வை, இன்றைய சமூகச்சூழலில் குறைவாக உள்ளது. போதுமான ஆதரவு நடவடிக்கைகள் இல்லை. கல்வியும், வேலைவாய்ப்பும், போக்குவரத்தும் பெரும் சவாலாக நீடிக்கின்றன. பல அரசு அலுவலகங்கள், பொது இடங்கள் அவர்களது நடமாட்டத்துக்குச் சாதகமாக இல்லை. பொது கழிப்பறைகளும் அவர்களுக்கு உகந்த அமைப்புடன் இல்லை. இந்தப்பின்னணியில்,

* அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ள 3 சதவிகித ஒதுக்கீடு, சமரசமின்றி நிறைவேற்றப்பட வேண்டும்.

* நலத்திட்டங்களில் உள்ள தேவையற்ற நிபந்தனைகள் ரத்து செய்யப்பட வேண்டும். உதாரணமாக, தமிழநாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1000/- வழங்குவதாக அறிவித்திருந்தாலும், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், இதைப்பெறுவதில் பல தடைகளை ஏற்படுத்துகின்றன. இந்த உதவித்தொகையைப் பெற மாற்றுத்திறனாளிக்கு 45 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். சமீபத்தில்தான் இது 18 வயதாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊனத்துக்கும், வயதுக்கும் தொடர்பில்லை. கருவில் உள்ள குழந்தைக்குக் கூட ஊனம் உருவாகி விடுகிறது. எனவே வயது வரம்பை நீக்கி விட வேண்டும். அதேபோல்,  குடும்பத்தில் மொத்த சொத்தின் மதிப்பு ரூ.5000/-க்கு மேல் இருக்கக்கூடாது என்று வரம்பு வைக்கப்பட்டுள்ளது. மாறறுத்திறனாளி இடம் பெற்றுள்ள குடும்பத்தில் 18 வயது முடிந்த மகனோ, பேரனோ இருக்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிக்கு 60சதவிகிதம் ஊனம் இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறது. ஆனால் 1995-ஆம் ஆண்டு ஊனமுற்றோர் சமவாய்ப்புச் சட்டத்தின்படி 40 சதவிகிதம்  ஊனம் இருந்தாலே ஊனமுற்றோருக்கான சலுகைகளும், உதவிகளும் தரப்பட வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளம், கர்நாடகம், ஆந்திரா, புதுச்சேரி பிரதேசத்தில் 40சதவிகிதம்  ஊனம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

திரிபுரா மாநிலத்தில் இடது முன்னணி அரசு ஊனமுற்றோருக்கான சர்வேதச தினத்தைப் பொது விடுமுறையாக அறிவித்து இதனுடைய முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணரச்செய்கிறது. இவற்றையெல்லாம் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக் கொள்வதோடு, அனைத்துப் பொது மக்களும் இந்த நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களின் சட்டபூர்வ உரிமைகளைப் பெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறது.மாற்றுத் திறனாளிகளின் உரிமைப் போராட்டம் வெல்ல மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறது.

 

 

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply