அமெரிக்காவில் மோடியின் “டிஜிட்டல் இந்தியா” முழக்கம் யாருக்காக? தோழர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி

திருப்பூர், செப்.30 –

மேக் இன் இந்தியா என்று மோடி முழங்கிய பிறகு நோக்கியா நிறுவனம் மூடப்பட்டு நம் நாட்டின் 30 ஆயிரம் இளம் பொறியாளர்கள் வேலையிழந்தனர். இப்போது அமெரிக்காவிற்குச் சென்று “டிஜி்ட்டல் இந்தியா” என மோடி முழங்கியுள்ளார். இதனால் என்ன விளைவு ஏற்படுகிறது என்று பார்க்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

திருப்பூரில் புதன்கிழமை பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த சீத்தாராம் யெச்சூரி மேலும் கூறியதாவது;

மோடி பிரதமரான பிறகு 25வது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். முன்னெப்போதும், நமது நாட்டின் வேறெந்த பிரதமரும் இது போல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதில்லை. தற்போது அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்குச் சென்று “டிஜிட்டல் இந்தியா” என்ற முழக்கத்தை கொடுத்திருக்கிார்.

ஏற்கனவே நம் நாட்டில் டிஜிட்டல் இந்தியா உருவாகி வருகிறது. அப்படி இருக்க ஏன் அங்கு போய், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகள் முன்பாக இதைச் சொன்னார் என்று தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் நம் நாட்டு இளைஞர்கள், இளம் பொறியாளர்கள் உலகிற்கே முன்னணியாக இருக்கின்றனர். சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களிலும் நம் இளைஞர்கள்தான் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இப்போது மேற்குலகின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அங்கு போய் டிஜிட்டல் இந்தியா என்ற சொல்லிக் கொண்டிருக்கிறார். நம் இளைஞர்களுக்கு இன்னும் ஊதியத்தைக் குறைத்து பெரு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக அவர் இப்படிச் சொல்வது போல் தெரிகிறது.

ஏற்கனவே மேக் இன் இந்தியா என்று மோடி முழங்கினார். அதன் பிறகுதான் இங்குள்ள நோகியா நிறுவனம் மூடப்பட்டது. இதனால் படித்த திறமையான 30 ஆயிரம் இளம் பொறியாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். இப்போது டிஜிட்டல் இந்தியா என்று மோடி சொல்வதால் என்னாகும் என்று பார்க்கலாம்.

நிதிக் கொள்கையில் தற்போது மத்திய வங்கி இதர வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ஓரளவு குறைத்துள்ளது. இதனால் நுகர்வோரும், உற்பத்தி துறையினரும் ஓரளவு ஆதாயம் அடையலாம். அதே சமயம் நம் நாட்டின் தொழில் மற்றும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநரே கூறியிருக்கிறார். இந்திய தொழில் துறையில் மொத்த உற்பத்தித் திறனில் 70 சதவிகிதம் மட்டுமே தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 30 சதவிகிதம் திறன் செயல்படாமல் உள்ளதாக சிஐஐ., பிக்கி ஆகிய பெரிய முதலாளிகள் அமைப்பின் நிர்வாகிகள் கூறியுள்ளனர். வட்டி விகிதம் குறைக்கப்பட்ட பிறகும் இந்த 30 சதவிகித உற்பத்தித் திறன் செயல்படப் போவதில்லை என்றே அவர்கள் கூறியுள்ளனர்.

மோடி அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையின் திசைவழியை மாற்றாமல் நம் நாட்டுப் பொருளாதார மீட்சி என்பது சாத்தியமில்லை. மோடி அரசின் கொள்கைகளால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி அதிகரித்து வருவது ஆகியவற்றால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இந்த விசயத்தில் அரசு கவனம் செலுத்தாமல், விலைவாசியைக் குறைக்காமல், விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண பொது முதலீட்டை அதிகரிக்காமல், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்காமல் நம் நாட்டு உற்பத்தித் துறையில் வளர்ச்சி ஏற்படுத்த முடியாது. பொருளாதார மீட்சி ஏற்படாது.

இதற்கு மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையின் திசைவழி மாற வேண்டும். இந்த கொள்கை காரணாக கடந்த 10 ஆண்டு காலமாக வேலைவாய்ப்பை உருவாக்க முடியவில்லை.

உற்சாகமான மனநிலை நல்லதுதான். ஆனால் தொடக்கத்தில் ஏற்பட்ட உற்சாக மனநிலை தற்போது வடிந்துவிட்டது. அடிப்படை வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் மக்களின் சேமிப்புகளுக்கான வட்டியும் குறையும். எனவே சேமிப்பும் குறையும். எனவே பொருளாதார மீட்புக்கு வெளிநாட்டு மூலதனம் மற்றும் இந்தியாவின் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கை திசைவழியை அரசு கைவிட வேண்டும். அப்போதுதான் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதிகரிக்கும் மதவெறி மோதல்

நேற்று (செவ்வாய்ககிழமை) டெல்லி அருகே காத்திரி என்ற கிராமத்தில் வகுப்பு மோதல் ஏற்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது மகன் படுகாயம் அடைந்திருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் என்று சொல்லி அவர்கள் மீது வகுப்புவெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் வகுப்பு மோதல் ஏற்பட்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்த வந்த காவல் துறையினர் மீதும் வகுப்பு வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில் இஸ்லாமியர்கள் வீடுகளில் சோதனை நடத்தி மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இந்த கலவரம் தூண்டப்பட்டுள்ளது.

மோடி அரசு வந்தபிறகு வகுப்புவெறி உணர்வு தூண்டப்பட்டு, பதற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மோடி அரசின் மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மதவெறியைத் தூண்டும் விதத்தில் தொடர்ச்சியாகப் பேசி வருகின்றனர். கடந்த 16 மாத காலத்தில் இதுவரை மத துவேஷத்தைத் தூண்டிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது இந்த அரசு குறைந்தபட்சம் ஒரேயொருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை.

அது மட்டுமின்றி நேரு நினைவு நூலகம், பூனா திரைப்படக் கல்லூரி என்று மத்திய அரசின் பல நிறுவனங்களில் திட்டமிட்ட முறையில் ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் கொண்டவர்களை தலைவர்களாக நியமித்து வருகின்றனர். நாடு முழுவதும் திட்டமிட்ட முறையில் அவர்கள் வகுப்புவாத செயல்திட்டத்தை திணித்து வருகின்றனர். இதன் மூலம் நம் நாட்டின் சொந்த வரலாற்றை திரித்து, இந்துத்துவ புனைவை நம் நாட்டின் வரலாறாக கற்பிக்க முயன்று வருகின்றனர். ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பதை மறுத்து 6 ஆயிரம் ஆண்டுகளாக இங்கேயே இருந்துவருபவர்கள் என்றும், வேதங்களும் மிகப் பழமையானவை என்றும் நிறுவுவதற்காக அவர்கள் இத்தகைய செயலைச் செய்து வருகின்றனர். வகுப்புவாத பிளவை கூர்மைப்படுத்துவதன் மூலம் வகுப்புவெறி வன்முறையை உருவாக்கப் பார்க்கின்றனர்.

பீஹார் தேர்தல்

பீஹார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கும் வகுப்புவெறி உணர்வைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடையப் பார்க்கின்றனர். அவர்களை அங்கு தோற்கடிக்க வேண்டும், கடந்த 10 ஆண்டு காலமாக பீஹார் மக்கள் மீது சுமைகளைத் திணித்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். இதற்காக இடதுசாரி கட்சிகள் ஓரணியாக சேர்ந்து மாற்றுக் கொள்கையை வைத்து பீஹார் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் மற்ற சில கட்சிகளுடன் சேர்ந்து மக்களை கடுமையாக பாதிக்கும் பிரச்சனைகளில் இயக்கம் நடத்துகிறோம். ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், மக்களின் வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்சனைகளை எதிர்த்தும் ஒன்று சேர்ந்து இயக்கம் நடத்தி சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். எத்தகைய பலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

துணிச்சல் மிக்க நேர்மையான டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை செய்த வழக்கில் மாநில அரசின் கட்டுப்பட்டில் உள்ள சிபிசிஐடி விசாரணை நடத்துவதால் நியாயம் கிடைக்காது. எனவே இதில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த விசயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தும் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

இந்த பேட்டியின்போது மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த பேட்டியின்போது, தமிழகத்தின் மதுவிலக்கு அமலாக்கம் பற்றிய கேள்வியை நிருபர்கள் எழுப்பினர். அப்போது பதிலளித்த மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில அரசு மதுவிலக்கு முடியாது என்றால், அதை எப்படிக் குறைக்க முடியும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். எங்களைப் பொறுத்த வரை மதுவிலக்கு என்பது, முதலில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், இரண்டாவது கள்ளச் சாராயம் வருவது தடுக்கப்பட வேண்டும், மூன்றாவது, மது போதைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். நான்காவது குடிநோயாளிகளை மீட்பு மையங்கள் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...