டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு உபயோகத்திற்கான கட்டுபாட்டை உடனடியாக ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

மத்திய அரசின் அரசியல் விவகாரத்துக்கான அமைச்சரவைக்குழு இன்று பிரதமர் தலைமையில் கூடி இன்று நள்ளிரவு முதல் டீசல் விலையை உயர்த்தியிருப்பது மற்றும் மாநிய விலையில் சமையல் எரிவாயுவின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.   அதிலும் குறிப்பாக டீசல் விலையை ரூ.5 என்று உயர்த்தியுள்ளதானது சாதாரண மக்களின் நுகர்பொருட்களாகிய உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே என்று குறைத்திருப்பது பல கூட்டுக் குடும்பங்களுக்கு மிகக் கடுமையான நெருக்கடியைக் உருவாக்கும்.

உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலை உயர்வு மக்களை கடுமையாக தாக்கிக் கொண்டிருக்கும் வேலையில் டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு உபயோகத்திற்கு விதித்திருக்கும் கட்டுப்பாடு இந்திய மக்களின் தலையில் பேரிடியாக வந்து இறங்கியுள்ளது. மத்திய அரசு எண்ணைக் கம்பெனிகளின் நஷ்டத்தைக் காட்டி பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் போது வரி விதிப்பின் மூலம் அரசு கஜானாவுக்கும் வருமானம் உயரும் என்பதை அரசு திட்டமிட்டு மறைக்கிறது. மேலும் சர்வதேச எண்ணை விலை மிகப் பெரிய அளவுக்கு மாற்றமில்லாமல் இருக்கும் போது, இந்திய எண்ணைச் சந்தையில் கடந்த 6 மாதங்களில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகிய அனைத்துப் பொருட்களின் விலையையும் செங்குத்தாக மத்திய அரசு உயர்த்தி வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இந்த விலை உயர்வு என்பது அரசாங்கம் கைக் கொண்டிருக்கக் கூடிய நவீன தாராளமய கொள்கைகளின் அப்பட்டமான விளைவு என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்ட விரும்புகிறது.   மத்திய அரசு உடனடியாக இந்த விலை உயர்வையும், அறிவிப்புகளையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. அரசின் இந்த மக்கள் விரோத தாக்குதலுக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் கிளர்ந்தெழுந்து தங்களது எதிர்ப்பை ஜனநாயகப் பூர்வமான போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்துவார்கள் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply