டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி மாவட்டத் தலைநகரங்களில் சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்.!

பெட்ரோல் விலையைப் போன்று டீசல் விலையை நிர்ணயிக்கின்ற அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்தது. இதையொட்டி டீசல் விலை லிட்டருக்கு 55 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களே தன்னிச்சையாக விலையை உயர்த்திக் கொள்ளலாம் என்ற முடிவு மேலும் விலை உயர்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடும் விலைவாசி உயர்வினால் ஏற்கனவே அவதியுறும் ஏழை – நடுத்தர மக்கள் டீசல் விலை உயர்வினால் கடும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.

டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை மத்திய அரசு கைவிட்டது, எண்ணெய்க் கம்பெனிகள் மிகப் பெரும் அளவில் லாப வேட்டை நடத்திட வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கம்பெனிகள் இந்தியாவில் டீசல் விலையினை சர்வதேச விலைகள் அளவிற்கு உயர்த்த முயற்சிக்கின்றனர். இதற்கு எந்த நியாயமும் இல்லை. இந்தியா, இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயையும் உள்நாட்டு கச்சா எண்ணெயையும் சுத்திகரித்து டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவற்றினை உற்பத்தி செய்கிறது. இந்த பொருட்களின்  உற்பத்திக்கான செலவினைக் கணக்கிட்டால் இதற்கும் தற்போதைய சர்வதேச விலைகளுக்கும் தொடர்பில்லை.  எனவே, சர்வதேச விலை அளவிற்கு உயர்த்துவதற்கு எந்த தேவையும் இல்லை. மிகப்பெரும் லாபத்தை மக்களிடமிருந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். சமீபத்தில், காங்கிரஸ் கட்சி சிந்தனை அமர்வு என்ற பெயரில் நடத்திய மாநாட்டில் மக்கள் அனுபவித்து வருகிற விலை உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வு குறித்து எந்த புதிய சிந்தனையையும் முன்வைக்கவில்லை. மாறாக, மக்களை துன்புறுத்தக் கூடிய தாராளமய சீர்த்திருத்தங்களையே வேகமாக அமுலாக்கிட அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
 
மத்திய ஆட்சியாளர்கள் நிதிப்பற்றாக்குறையை குறைப்பது என்கிற பெயரால் தொடர்ச்சியாக ஏழை மக்களுக்கு அளிக்கிற மானியங்களை ஒவ்வொன்றாக குறைத்து வருகின்றனர். அதே நேரத்தில் பெரும் பணக்காரர்களுக்கு ஏராளமான வரிச் சலுகைகளை அளித்து வருகின்றனர். இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து உள்நாட்டு – வெளிநாட்டு ஏகபோக கம்பெனிகளின் நலன்களை பாதுகாக்கிற அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக-வும் பெயரளவில் டீசல் விலை உயர்வைக் கண்டித்துவிட்டு மறைமுகமாக மத்திய அரசின் முடிவுகளுக்கு துணை போகின்றது.
 
இத்தகு கொள்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக் கோரி மாவட்டத் தலைநகரங்களில் வருகின்ற ஜனவரி-23ம் தேதி மாலைநேர பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட கட்சி அணிகளுக்கு அறைகூவல் விடுகிறது.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply