டெல்டா பகுதி வறட்சியை பேரிடராக அறிவிக்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!

குறுவை சாகுபடி முழுவதும் பொய்த்துப்போன நிலையில் சம்பா சாகுபடியும் முழுமையாக அழிந்துவிட்டதால் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதி விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் இன்று முதல் தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மயிலாடுதுறை, அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 
முற்றிலும் கருகி அழிந்துபோன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ,25,000. தண்ணீர் இல்லாததால் தரிசு போடப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ,15,000, விவசாயம் பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.10,000, பயிர் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட மற்றும் அதிர்ச்சியில் மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூபாய் பத்து லட்சம், இந்த நிவாரணம் வழங்குவதற்கு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மத்திய அரசு தன் பங்காக பேரிடர் நிதியிலிருந்து ரூ,1000 கோடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
 
தமிழக அரசாங்கம் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள வறட்சி மேலாண்மை கையேட்டில் மழை குறைவால் விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தால் அறிக்கைக்காக காத்திருக்காமல் வறட்சிப் பகுதியாக அறிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெருமளவு மழை பொய்த்ததும் காவிரியில் நீர் திறந்துவிடாததால் பயிர்கள் கருகி விவசாயம் அழிந்திருப்பதும் கண்கூடாகவே தெரிகிற போது தமிழக அரசு  இந்த மாவட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசாங்கம் இதைப் பேரிடராக அறிவித்து மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு  ரூ.1000 கோடி  வழங்க வேண்டும். மாநில அரசு தன் பங்கிற்கான நிதியை ஒதுக்கீடு செய்து மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டுமென மத்திய-மாநில அரசுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
 
 
 

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply