டெல்டா விவசாயிகளின் துயர் துடைக்க விரைந்து செயலாற்றுக! மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

இம்மாதம் 7-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்திற்கு வழிக்கறிஞர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பொது நல அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.

 
தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000/-, பயிரிடமுடியாத தரிசாக கிடக்கும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ. 15,000/-, வேலையிழந்து தவிக்கும் விவசாயத் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 10,000/-, தற்கொலை மற்றும் துயரத்தால் மாரடைப்பில் காலமான விவசாயிகளுக்கு ரூ. 10 லட்சம் இவற்றிற்கு உதவ மத்திய அரசு இடைக்காலமாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளுக்காக இப்போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டுகிறது.
 
மாநில முதல்வரின் அறிவிப்பு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி இந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசாங்கம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். கால தாமதம் செய்யக் கூடாது. மத்திய அரசும் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து துயர்துடைப்பு மற்றும் நிவாரண பணிகளை துவக்க உதவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
 
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு மட்டுமின்றி கரும்பு உள்ளிட்டு அனைத்து வகை பயிர் பாதிப்புகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென்றும், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் இதர பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
 

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply