தனியார் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைத்திட சிபிஐ(எம்) கோரிக்கை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (2.2.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தனியார் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மரணத்திற்கு சிபிஐ விசாரணை அமைத்திட – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் கிராமத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி மாணவிகள் 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளத்தை உருக்க வைக்கின்ற மாணவிகளின் இந்த சோக முடிவுக்கு உண்மையான பின்னணி என்ன என்பதை வெளிக்கொணர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருதுகிறது.

இந்த கல்லூரிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாதது மட்டுமல்ல; அங்கு படித்த மாணவ, மாணவிகள் அடிமைகளைப் போல மிக மோசமாக நடத்தப்பட்டுள்ளனர். இதையெல்லாம் எதிர்த்து அவ்வப்போது மாணவர்களும், மாணவர் அமைப்புக்களும் போராடி வந்துள்ளனர். உயிரிழந்த மாணவிகள் பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகியோர் நிர்வாகத்தின் அடாவடித்தனத்தினை எதிர்த்து வந்துள்ளனர். இது நிர்வாகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது. கல்லூரி நிர்வாகம் அவர்களுக்கு கடும் நெருக்கடி தந்ததால் அவர்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு இருந்துள்ள நிலையில் தான் இந்த மரண சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அக்கல்லூரியில் போதிய வசதிகள் இல்லாத நிலை கடந்த பல வருடங்களாக நீடித்து வந்தது. இதையொட்டி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் பலமுறை மனுக்கள் கொடுத்து முறையிட்டிருக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், பல்கலைக்கழகமும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை.

இந்தக் கல்லூரிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டில் அப்போதிருந்த தி.மு.க. அரசு தான் அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த மாவட்டத்தைச் சர்ந்த அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்துக் கொண்டிருந்த நிலையில் தான் கல்லூரி நிர்வாகத்தின் அநீதிகள் நிகழ்ந்திருக்கின்றன. அவர் நினைத்திருந்தால் உறுதியாகத் தலையிட்டு அக்கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முயற்சி எடுத்திருக்கலாம். ஆனால் அவரும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஆக மத்திய அரசு, மாநிலத்தில் ஆண்ட முன்னாள், இந்நாள் அரசுகளின் மெத்தனப்போக்கு அந்த கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கு ஊக்கமளித்திருக்கிறது. எதிர்கால கனவுகளோடு கல்லூரியில் பயின்று வந்த மூன்று மாணவிகளின் உயிர்கள் பறிபோனதற்கு அந்த கல்லூரி நிர்வாகமும், மாநில, மத்திய ஆட்சி பொறுப்புகளில் இருந்த அனைவரும் தாம் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த உண்மைகள் அனைத்தும் வெளியே வர வேண்டுமானால், மாநில அரசாங்கம் அமைத்துள்ள சிபிசிஐடி விசாரணை போதுமானதல்ல. மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நிச்சயித்து நாட்டு மக்களுக்கு உண்மைகள் வெளிக்கொண்டு வருவதோடு முறைகேடான கல்லூரி நிர்வாகத்தின் பின்னணியாக இருந்தோர் அனைவரையும் சட்டத்தின் முன்கொண்டு வந்து நிறுத்தி உரிய தண்டனை வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...