விருதுநகர், ஆக.10:
விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் தெருவில் தனியார் சிப்ஸ் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் வத்தல் நெடியால் கடும் அவதிப்படுவதால், அந்த ஆலையை உடனே அகற்ற வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் நகராட்சி 22 வது வார்டுக்கு உட்பட்டது பிள்iயார் கோவில் தெரு. இங்கு 500க்ம் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் சிப்ஸ் தயாரிக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையானது, குடியிருப்புகளுக்குள் புகுவதால், குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம், தலை வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது.
மேலும், சிப்ஸ் தயாரிக்கும் போது, மிளகாய் வத்தல் பொடியை அதிக அளவில் பயன்படுத்துவதால், வத்தல் நெடியுடன் சேர்ந்து வரும் புகையால் பொது மக்களுக்கும், சாலையில் செல்வோரும் கடும் அவதிப்பட்டு வந்தனர். எனவே, அப்பகுயினர் ஆலையை அகற்றக்கோரி, நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் மனு கொடுத்தனர். ஆனால், ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், வெகுண்டெழுந்த பொது மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நகராட்சி மேலாளர் ராமதிலகம், சுகாதார ஆய்வாளர் செந்தில் ஆண்டவர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், வியாழக்கிழமைக்குள் ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற போராட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் தலைமையேற்றார். துவக்கி வைத்து ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ராஜா பேசினார். முடிவில் நகர் செயலாளர் எல்.முருகன் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் வாலிபர் சங்க நகர் செயலாளர் மணிகண்டன், சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.