தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்திடுக!

தமிழக முதல்வருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்திட அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாண்புமிகு. தமிழக முதலமைச்சருக்கு இன்று (10.03.2020) அனுப்பியுள்ள கடிதம்;

பெறுநர்

          மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
          தமிழ்நாடு அரசு,
         தலைமைச் செயலகம்,
          சென்னை – 600 009.

வணக்கம்.

பொருள்:- தமிழகத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலைகளை தடுத்திட அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவது தொடர்பாக:

இந்தியாவில் 2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள மாணவர் தற்கொலைகள் குறித்த விபரத்தினை தேசிய குற்ற பதிவு ஆணையம் வெளியிட்டுள்ளது. இவ்வாணையத்தின் அறிக்கை படி மேற்கண்ட நான்காண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தற்கொலையில் மரணமடைந்த மாணவர்கள் எண்ணிக்கையில் 6056 பேர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அடுத்ததாக 4552 மாணவர்கள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என என்.சி.ஆர்.பி. அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதாவது, சராசரி ஒரு ஆண்டுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலையில் மரணமடைவது மிகுந்த வேதனையளிப்பதாகும்.

குறிப்பாக, தேர்வுகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், வகுப்பறைகள் அல்லது கல்லூரிகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளால் நாடு முழுவதும் மாணவர்களது தற்கொலைகள் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை மனநிலையினை போக்குவதற்கும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முறையான ஆலோசனைகள் வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் தற்போது கல்வி வளாகங்களில் இல்லை என பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எனவே, தமிழக அரசு மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலை மனநிலையினை எதிர்கொள்வதற்கு உரிய ஏற்பாடுகளை உருவாக்குவது அவசர அவசியமான ஒன்றாகும். கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட உயர்மட்ட குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்தி குழுவின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தின் எதிர்காலமாக உள்ள மாணவர்கள், இளைஞர்களுக்கு உரிய மனநல பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்குவதற்கு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அளவிலும், ஒன்றிய அளவிலும் இதற்கான நிபுணர்களைக் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

இங்ஙனம்,
தங்கள் அன்புள்ள,
(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...