தமிழகத்தில் உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்திடுக

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், 2018 செப்டம்பர் 22-24 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2;

தமிழகத்தில் உடனே உள்ளாட்சித் தேர்தலை நடத்திடுக

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்திட உயர்நீதிமன்றம் கெடு விதித்தும், அதற்கு செவிமடுக்காமல், தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வரும் அதிமுக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், ஒவ்வொரு நாளும் அடிப்படை பிரச்சனைகள் மலைபோல் குவிந்து வருகின்றன.

ஆனால், மறுபுறத்தில் உள்ளாட்சிகளில் அதிரடியாக தமிழக அரசு உள்ளாட்சி விதிகளுக்கு மாறாக நிர்வாக உத்தரவு மூலம் 100 சதவிகிதம் சொத்துவரி உயர்வை தன்னிச்சையாக அறிவித்து அமலாக்கியுள்ளது.  இது உள்ளாட்சி சட்ட விதிகளுக்கு எதிரானது மட்டுமல்ல அப்பட்டமான பகல் கொள்ளையும் கூட. இதனால் வீடுகள், கடைகள், சிறு-குறு நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்கள் அமைந்த காலத்திலிருந்து இப்படி நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக உள்ளாட்சிகளில் வரி உயர்வு உள்ளிட்டவை எப்படி இருக்கலாம் என அரசு, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும்; உத்தரவு போடாது. அந்த வழிகாட்டுதலை உள்ளாட்சி பிரதிநிதிகள் விவாதித்து, அந்தந்த பகுதிகளின் தன்மைக்கு ஏற்றவாறு பொருத்தமான வரியைத் தீர்மானிப்பார்கள்.

எனவே, தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி, தேர்வு செய்யப்பட்ட மன்றங்கள் பொறுப்பேற்கும் வரை அநியாய வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும்; 100 சதவிகித உயர்வு எனும் நிர்வாக உத்தரவை ரத்து செய்திட வேண்டும்.

மேலும், தமிழகம் முழுவதும், உள்ளாட்சிகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் எடுப்பது தான் முடிவு என்ற நிலை உள்ளது. பணிகள் நடப்பதாக கணக்கு காட்டப்பட்டு பணம் சூறையடப்படுகிறது. மிக அதிகமாக ஊழல் நடக்கும் இடமாக உள்ளாட்சி மன்றங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய போதிய நிதியும் கிடைக்காத நிலை உள்ளது.

இச்சூழலில் தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...