தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் தலித் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகள்

 • கொலைகள் 14 மலக்குழி மரணம் – 4
 • பாலியல் வல்லுறவு – 5
 • சாதி ஆணவப் படுகொலைகள் – 2
 • சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல் – 5
 • தலித் ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை – 3
 • அம்பேத்கர் சிலைக்கு அவமதிப்பு – 2
 • கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு – 1
 • மயாணம், மயாணப் பாதை பிரச்சினை – 2
 • அரசுப் பணியாளர்கள் மீது பாரபட்சம் – 3
 • கொத்தடிமை – 1
 • தாக்குதல்கள் – 41

உரத்து குரலெழுப்புவோம்…
சமூக ஒடுக்குமுறைகளைக் களைவோம்…
சமத்துவத்தை நிலை நாட்டுவோம்…

தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகள் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கள ஆய்வு அறிக்கை

கொலைகள்

 1. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த பலவேசம் என்பவர், சண்முகசுந்தரம் என்ற ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவரிடம் பத்திரத்தை அடகு வைத்து 40 ஆயிரம் வட்டிக்கு வாங்கி அசலையும் வட்டியையும் கொடுத்துவிட்டார். பத்திரத்தை திருப்பி கேட்டதற்காக பலவேசமும் அவரது மருமகனும் 7.5.20 அன்று உடையார்குளம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர், சிபிஐ(எம்) ஆழ்வார் திருநகரி ஒன்றியச் செயலாளர் இரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர். தலையீடுகள் செய்து வருகிறோம்.
 2. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் மேலப்பாளையூர் கிராமம் தலித் இளைஞர்களான ராஜூ மற்றும் இருவர் மருந்துக் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது சாதியவாதிகள் சிலர் தாக்கியுள்ளனர். இதில் கொடுங்காயங்கள் ஏற்பட்டு ராஜூ மரணமடைந்துள்ளார். மற்ற இருவர் மருத்துவமனையில் உள்ளனர். சிபிஐ(எம்) விருத்தாசலம் வட்டச் செயலாளர் தோழர் அசோகன், விசிக மண்டல செயலாளர் தோழர் திருமாறன் உள்பட ஏராளமான தோழர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக உரிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 3. கன்னியாகுமரி ஆனந்தா நகர், காந்தி காலனியில் தலித் இளைஞர் வினோத் என்பவரை கடந்த 2.5.20 அன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஜெனிஸ்டன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
 4. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், புதுக்கடை காலணிக்கு அருகில் பொடியபுரத்தில் உள்ள சாதி இந்து இளைஞர்கள் சிலர் குடி போதையில் புதுக்கடை காலணியில் புகுந்து தகராறு செய்துள்ளனர். தலித் மக்கள் அவர்களை பிடித்து வைத்துக் கொண்டு சுமார் மாலை 6.45 மணிக்கு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். ஆனால் இரவு 8.45 வரை காவலர்கள் வரவில்லை. இந்நிலையில் பொடியபுரம் மற்றும் காமலாபுரத்தை சேர்ந்த சாதி இந்து இளைஞர்கள் பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி டி.செந்தில்குமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் புதுக்கடை தலித் குடியிருப்பில் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்குகிறார்கள். சத்தம் கேட்டு வெளியில் வந்து எட்டிப்பார்த்த விஷ்ணுப்பிரியனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி சாய்க்கிறார்கள். (இவர் எம்.சி.ஏ படிப்பை முடித்து சென்னையில் பொறியாளராக வேலை செய்து கொண்டிருப்பவர் ஊரடங்கு காரணமாக கிராமத்திற்கு வந்து பெற்றோர்களுடன் தங்கியிருந்தவர்) தீபஸ்ரீ  என்பவரோடு திருமணமாகி 61 நாட்களே ஆன நிலையில் கடந்த 8.5.2020 அன்று கொலை செய்யப்பட்டுள்ளார். தடுக்க வந்த அவரது தம்பி நவீன்குமாருக்கு கொடுங்காயங்கள் ஏற்பட்டது. இவர் பொறியியல் பட்டம் பெற்றவர். கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் கடினமான சூழலில் படிக்க வைத்து இப்படி பலி கொடுத்த அதிர்ச்சியில் உள்ளனர். தகவல் அறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல், சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, வடக்கு மாநகரச் செயலாளர் பிரவின் குமார், ஓமலூர் வட்டச் செயலாளர் அரியாக் கவுண்டர் ஆகிய தோழர்கள் அவரது இல்லத்திற்கும் மருத்துவமனைக்கும் சென்றனர். தலையீடு செய்து வருகிறோம்.
 5. நாமக்கல் நகரில் உள்ள சி.எம் மருத்துவமனையில் பணி செய்து வந்த தலித் சமூகத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற செவிலியர் 29.5.20  மர்மமான முறையில் மருத்துவமனையிலேயே இறந்துள்ளார். தகவல் அறிந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் தங்கமணி மற்றும் சிபிஐ(எம்) மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி ஆகியோர் இரவு 12 மணி வரை காவல்துறையினரொடு பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். தலையீடு செய்து வருகிறோம்.
 6. திருப்பூர் மாவட்டம், அந்தியூர், வாகைமரத்து கொடிக்கால் கிராமம் தலித் பெண் கார்த்திகா என்பவரை புகழேந்தி என்கிற சாதி இந்து காதலிப்பதாக ஏமாற்றி, புகைப்படங்கள் எடுத்து, வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால் கார்த்திகா கடந்த 13.05.20 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
 7. விழுப்புரம் மாவட்டம், சேமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த பால்முருகன் என்பவரை கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ரெட்டிக்குப்பம் என்ற கிராமத்தில் சாதிய வாதிகளில் சிலர் கொலை செய்து, மின்சார ஒயர் மீது வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
 8. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தோப்பூர் கிராமத்தின் தலித் மக்களை 24.3.20 அன்று பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வெட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 9. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர் தனியார் அடுக்ககத்தில் (apartment) இரவுக் காவலராக பணிசெய்து வந்த நடராஜன் என்கிற தலித் 25.04.2020 அன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமடைந்துள்ளார்.
 10. தஞ்சாவூரில் மணி என்கிற குறவர் சமுகத்தைச் சார்ந்தவரை தஞ்சை டி.எஸ்.பி. சீதாராமன் தலைமையில் 2 வேன்களில் ஏற்றிச் சென்ற காவலர்கள் அடித்து, அரிவாளால் அவரது முதுகில் வெட்டியுள்ளனர்.உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடிய மணியின் சடலம் அன்றய தினமே 10.06.20 அன்று தேவாரி ஆத்தங்கரையில் தூக்கு மாட்டி தரையில் நின்ற நிலையில் கிடைத்தது. வாக்கிங் போன டாக்டர் தம்பதியினர்களிடம் 11 பவன் நகை பறித்ததாக போலீஸ் சொல்கிறது. வாக்கிங் போகிறவர்கள் 11 பவுன் அணிந்து செல்வார்களா? கையில் ஒரு லட்சம் கொண்டு செல்வார்களா? சரி போலீசையே வெட்டிவிட்டு ஓடுகிறவர் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் சின்னை பாண்டியன், மாநில துணை தலைவர் தோழர்கள் எம்.சின்னத்துரை, மாவட்ட தலைவர் கே.அபிமன்னன், சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் ஜி.நீலமேகம் ஆகியோர் மற்றும் witness for justice, குறவர் பழங்குடி அமைப்பினர், சசி ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதிக்காக போராடி வருகின்றனர்.
 11. சேலம் மாநகரம் பட்டகோவில் காய்கறி மார்க்கெட்டில் எலுமிச்சை பழ வியாபாரம் செய்து வரும் தலித் வகுப்பைச் சேர்ந்த வேலுமணி என்பவரை காவல்துறையினர் ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து காவல்நிலையம் சென்ற வேலுமணியின் தாயார் பாலாமணியை அங்கிருந்த காவலர்கள் அனைவரின் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்ததால் வயதான பாலாமணி காவலர்கள் ஒவ்வொருவருடைய காலில் விழுந்து விழுந்து வணங்கிய போது மயக்கமடைந்து இறந்து போனார்.  பாலாமணியின் மரணத்திற்கு காரணமான சேலம் நகர் காவல் நிலைய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு 27.04.20 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 
 12. சேலம் மாநகரம் திருவகவுண்டனூர் சுகுமாரன் நகரைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி சரவணன் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கும் மற்றொருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சரவணனை பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதிலும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் மறுநாள் இறந்துபோனார். சரவணின் மர்ம மரணத்திற்கு காரணமான சேலம் பள்ளப்பட்டி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி 21.05.20 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேல் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஞானசௌந்திரி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். 
 13. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டம், ஸ்ரீராமன் கிராமத்தைச் சார்ந்த தலித் பெண் தனலட்சுமி 6.7.20 அன்று சாதியவாதிகளால் பாலியல் வன்புணர்வு செய்து அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், நீதி மற்றும் நிவாரணம் கோரியும் முற்றுக்கைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கன மக்கள்  ஈடுப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ததீஒமு சார்பில் சிபிஐ(எம்) மாவட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  மாவட்டத் துணைத் தலைவருமான  தோழர் பிரகாஷ், வட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் வெற்றிவீரன், விஜயகுமார், பொன்னம்பலம், கே.பி.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மண்டல செயலாளர் திருமாறன், காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் வெற்றிவேந்தன், மாணவரணி செயலாளர் நீதிவளவன் மற்றும் ஊர் பொதுமக்கள்  உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
  போராட்டம் 7ம் தேதியும் தொடர்ந்தது. உறுதியான போராட்டத்திற்குப் பிறகே சந்தேக மரணம் என்பதற்கு பதிலாக வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி பழனி கைது செய்யப்பட்டுள்ளான். அவரது மகன்கள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் உடனடியாக தரப்பட்டது.
 14. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் வட்டம், ஏம்பல் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை 2.7.20 அன்று காணவில்லை. இரவு வரை தேடிய நிலையில் முட்புதருக்குள் கொடுங்காயங்களுடன் சடலமாக சிறுமியின் உடல் கிடைத்தது.
  அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜா என்ற சாமுவேல் என்பவனே குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது. மறுநாள் புதுக்கோட்டை நகரில் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்ற மறியல் நடைபெற்றது. தலித் கிறித்தவர் கூட்டமைப்பின் வழக்கறிஞர் ஜஸ்டின், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி, விதொச மாநில பொருளாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா, டிஒஎப்ஐ மாவட்ட செயலாளர் துரை நாராயணன், மக்கள் முன்னேற்ற கழகத்தின் செந்தமிழ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் நிவாரண நிதி 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்கிறது.

மலக்குழி மரணங்கள்

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் செப்டிக் டேங்கில் கழிவுகளை அகற்றுவதற்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28), ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேர்களை 2.7.20 அன்று வேலைக்கு அமர்தியுள்ளார். மேற்கண்ட 4 பேரும் மூச்சுச் திணறி  அநியாயமாக இறந்துவிட்டனர். கையால் மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 அமுலுக்கு வந்த பிறகும் எவ்வித அச்சமும் இன்றி இதுபோன்ற தடை செய்யப்பட்ட ஒரு வேலையில் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். மேற்படி இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் பார்வையிட்டார்.

மறுநாள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் வைக்கப்பட்டிருந்த போது தமிழ்புலிகள் அமைப்பினர் நீதி மற்றும் நிவாரணங்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்தனர். சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் அவர்களோடு இணைந்து அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி நீதி கிடைக்க பங்களிப்பு செலுத்தினார்.

பாலியல் வல்லுறவு குற்றங்கள்:

(பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை குறிப்பிடவில்லை)

 1. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம் தியாகரசனபள்ளியைச் சேர்ந்த தலித் பெண்ணை 13.5.20 அன்று ரமேஷ், மது, ராஜா ஆகிய சாதி இந்துக்கள் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
 2. மதுரை மாவட்டம், எருவார்பட்டி கிராமம் மனநலம் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணை போதுராஜா என்ற சாதி இந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார்.
 3. திண்டுக்கல் மாவட்டம் பெரியார் நகரைச் சேர்ந்த 19 வயது பிரியங்கா என்ற தலித் இளம் பெண்ணை கே.ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற சாதி இந்து இளைஞர் காதலித்து கர்ப்பவதியாக்கி திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டான். பிரியங்கா வற்புறுத்தியதால் அவரை கொலை செய்ய முயற்சித்த பிரச்சனைகளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் டி.முத்துச்சாமி மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் தோழர்களும் தலையீடுகள் செய்து காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்த அடிப்படையில்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு நடைபெற்று வருகிறது.
 4. விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கோட்டைக்கரை கிராமத்தில் சதீஷ் என்ற சாதி இந்து 18 வயதுக்கு குறைவான தலித் மைனர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பவதியாக்கி ஏமாற்றியுள்ளான். சிபிஐ(எம்) ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் நேரடியாக தலையீடுகள் செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 5. திருவள்ளுவர் மாவட்டம், திருத்தணி வட்டம், நல்லாட்டூர் கிராமம் தலித் சமூகத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் மணிமேகலை என்பவரை அதே பகுதியைச் சார்ந்த தாழவேடு கிராமம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த முனிரத்தினத்தின் மகன் ராஜ்குமார் என்பவர் நான்கு ஆண்டுகளாக காதலித்து தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டது மட்டுமல்லாது தனது உறவினர்கள் மூலமாக தற்கொலைக்கும் தூண்டியுள்ளார். இந்நிலையில் 13.6.20 அன்று மணிமேகலை தற்கொலை செய்து கொண்டார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் த.கன்னியப்பன், சிபிஐ(எம்) ஒன்றியச் செயலாளர் அப்சல், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் வழக்கறிஞர் அந்தோணி, ரீசர், பாலாஜி, பொற்கொடி ஆகியோர் மணிமேகலையின் இல்லம் சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொருளாளர் இ.மோகனா, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எழிலரசன், மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

சாதி ஆணவப்படுகொலைகள் – சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் மீதான தாக்குதல்கள்

 1. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், மொரப்பன் தாங்கல் கிராமம், ஒட்டர் (BC) சமூகத்தைச் சார்ந்த சுதாகர் என்பவரை, இதே வட்டம் ஒண்டிக்குடிசை கிராமம் மூர்த்தி (MBC) என்பவரின் மகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் 29.3.20 அன்று சுதாகரை இரும்பு கம்பியால் மூர்த்தி அடித்து கொலை செய்துள்ளார். இப்பிரச்சினையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.செல்வன் தொடர்ந்து அதிகாரிகளோடு பேசி தலையீடுகள் செய்துள்ளார்.
 2. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் இடையவலசை கிராமம் சாவித்திரி (BC) தோப்புக் கொல்லை கிராமம் விவேக் (BC) இருவரும் திருமணம் செய்து கொள்ள 7.6.20 அன்று கோயம்புத்தூர் செல்லும் வழியில் குளித்தலை காவலர்கள் வழிமறித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் 11.6.20 அன்று சாவித்திரியை அவரது பெற்றோர்கள் கொலை செய்துள்ளனர். இப்பிரச்சினையில் புதுக்கோட்டை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீடுகள் செய்து வருகிறது. விவேக் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பது, புகார் செய்தது, வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்வது போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.

  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் அன்புமனவாளன், சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் கவிவர்மன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி மற்றும் டிஒஎப்ஐ மாவட்ட செயலாளர் துரை நாராயணன் எஸ்எப்ஐ மாவட்ட செயலாளர் ஜனார்த்தன் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

  மூத்த வழக்கறிஞர் திரு.பொ.ரத்தினம் அவர்களும் தானே முன்வந்து நீதிக்காக போராடி வருகிறார். சாதி ஆணவப்படுகொலையைக் கண்டித்தும் குளித்தலை காவல்துறை மீது வழக்கு பதிவு செய்திட வலியுறுத்தியும் புதுக்கோட்டையில் 24.6.20 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தோழர்களோடு ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் த.செல்லக்கண்ணு மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
 3. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் கிளியூர் கிராமம் தலித் இளைஞர் இளங்கோவன் என்பவரும், அருகிலுள்ள பூவனூர் கிராமம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சுகன்யா என்பவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டனர். பூவனூர் மற்றும்  கிளியூர் கிராமத்தை சார்ந்த சாதி இந்துக்கள் கிளியூர் தலித்பகுதியினரைக் கிராமக்கூட்டத்திற்கு வரவழைத்து ஜூன் 12 ம் தேதி மாலை 6 மணிக்குள் சுகன்யாவை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.சுகன்யாவை ஒப்படைக்காததால் ஜூன் 12 அன்று மாலை 6 மணிக்கு மேல் 150 க்கும் மேற்பட்ட சாதியவாதிகள் தலித் குடியிருப்பிற்குள் தாக்குதல் நடத்த சென்றுள்ளனர். பாதுகாப்பிற்காக அங்கிருந்த காவல்துறையினர் தடுக்கவே ஆத்திரமுற்ற வன்முறையாளர்கள் காவலர்களைத் தாக்கியுள்ளனர்.இதில் பெண் காவல் ஆய்வாளர் உள்பட காவலர்கள் தாக்கப்பட்டனர். பின்னர் அதரடிப்படையோடு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளரையும் தாக்கியுள்ளனர்.

  மேற்படி கிளியூர் கிராமத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ஆர்.சீனிவாசன், மற்றும் ஏழுமலை, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பூமாலை, மாவட்ட துணை செயலாளர் சிவகிருஷ்ணன், எஸ்.எப்.ஐ மாவட்ட செயலாளர் ஸ்ரீபத் ஆகியோர் நேரில் சென்று தலித் மக்களை சந்தித்தனர். அரசு அதிகாரிகளையும் சந்தித்தனர்.
 4. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கோட்டைபட்டி கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் தமிழ்செல்வன் என்பவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த கவிதா என்பவரும் திருமணம் செய்து கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி பெரியகுளம் பகுதியில் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை எடுத்து கொண்டு 22.4.20 அன்று கோட்டைபட்டி கிராமத்திற்கு வந்த நிலையில், கவிதாவின் உறவினர்கள் பயங்கர ஆயுதங்களுடன் 27.4.20 அன்று குடியிருப்புக்குள் புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் 15க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுங்காயங்கள் ஏற்பட்டன.
 5. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்த தலித் இளைஞர் முருகானந்தம் என்பவரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த பானுப்பிரியா என்பவரும் 21.4.20 அன்று திருமணம் செய்து கொண்டதால், முருகானந்தத்தை கடுமையாக தாக்கி பானுப்பிரியாவை கடத்தி சென்றுள்ளனர். பிறகு மீண்டும் பானுப்பிரியா மீட்கப்பட்டார்.
 6. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி, 23 (மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு) கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன், 25 (தலித்) ஆகியோர் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது சுயமரியாதைத் திருமணம் காவலாண்டியூரில் 09.03.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனையறிந்த மணமகள் உறவினரான சாதி வெறிக்கும்பல் 40க்கும் மேற்பட்டோர் தோழர் காவை ஈசுவரன் வீட்டிற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து கடுமையாக தாக்கி கடத்திச் சென்றுவிட்டனர். அதேபோல வேறு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த மணமக்களையும் தேடிச் சென்று பலவந்தமாக கடத்திச் சென்று, மூவரையும் அடையாளம் தெரியாத பகுதிக்கு அழைத்துச் சென்று  கடுமையாக தாக்கியுள்ளனர். மூவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் இரவில் கடத்திச் சென்றிருப்பது தெரியவருகிறது.  இதனையறிந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் கொளத்தூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டதால் தோழர் ஈஸ்வரனும், மணமகன் செல்வனும் மீட்கப்பட்டனர். காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரையும் தீண்டாமை ஒழிப்பு முண்ணனியின் மாநில துணைப் பொது செயலாளர் தோழர் யு.கே. சிவஞானம், மாவட்ட தலைவர் ஆர்.குழந்தைவேலு, மாவட்ட செயலாளர் தோழர் வீ.இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டூர் தாலுகா செயலாளர் வசந்தி, மற்றும் தோழர்கள் செல்வகணபதி, AIDWA தாலுகா செயலாளர் S.M.தேவி, K.சண்முகம், மல்லிகார்ஜுனன், K.S.பிரபு பாலாஜி, அண்ணாதுரை ஆகியோர் சந்தித்து ஆறுதலையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தனர். தோழர் கொளத்தூர் மணி அவர்களும் சந்தித்து ஒருமைப்பாட்டை தெரிவித்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மணமகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தனது பெற்றோர்களுடன் செல்வதாகக் கூறிச் சென்றுவிட்டார்.
 7. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் அனைக்கரை விநாயகம் தெருவைச் சேர்ந்த நதியா வயது 22, தபெ நடராஜன் (மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம்) அரியலூர் மாவட்டம் வடவாறு கிராமம் தலித் இளைஞர் அருண்குமார் வயது 23 த/பெ ராஜா இருவரும் காதலித்து 19.04.20 திருமணம் செய்து கொண்டதுடன் பாதுகாப்பு கேட்டு 21.04.20 திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆய்வாளர் கவிதா நதியாவிடம் கீழ் சாதிப் பயலை ஏன் காதலித்தாய் என மிரட்டியும், அடித்தும் இருக்கிறார். SP CID மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறையினர் வன்னிய சாதி பெருமையை பேசியும், நதியா கழுத்தில் இருந்த தாழியை அறுத்தெரிந்தும் பலவந்தமாக காதல் தம்பதியினரை பிரித்து நதியாவை பெண் வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளனர். நீலப்புலிகள் அமைப்பினர் தலையிட்ட பின்னர் டிஎஸ்பி நதியா அருண்குமாரை ஆகியோரை விசாரித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.

பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஊராட்சித் தலைவர்களுக்கு அவமரியாதை

 1. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரியாகுஞ்சூர் ஊராட்சி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி ஆகும். தற்போது ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் என்பவர்.  அக்கிராமத்தில் இறந்த ஒருவரின் சடலத்தைப் புதைப்பதற்கு 2.6.20 அன்று குழி வெட்ட வைத்துள்ளனர். தாங்கள் குழிவெட்ட வற்புறுத்தவில்லை என பிற்படுத்தப்பட்ட மக்கள் தெரிவித்தாலும் குழி வெட்டுவதை அனுமதித்துள்ளனர் என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது.

  தகவல் அறிந்து சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், செங்கம் வட்ட செயலாளர் லட்சுமணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.ரவி, மாவட்ட செயலாளர் பி.செல்வன், ராமதாஸ் ஆகியோர் நேரில் சென்று விபரங்களைக் கேட்டறிந்து செங்கம் ஒன்றிய ஆணையரிடம் மகஜர் அளித்ததோடு, மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
 2. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா தாரமங்கலம் ஒன்றியம் டி.கோணகப்பாடி ஊராட்சி தலைவர் அம்சவள்ளி தலித் அருந்ததியர் சமூகத்தை சார்ந்தவர். இவரையும் இவருடைய கணவர் சதிஸ்குமர் என்பவரையும் தலித் என்பதால் மக்கள் பணி செய்யவிடாமல் அந்த ஊராட்சியின் முன்னால் தலைவரும்  அத்திக்காட்டனூர் அதிமுக  மோகன் என்பவன்  சாதியை சொல்லி ஆபாசமாக திட்டியும் தாக்கியதைக் கண்டித்தும் உடனடியாக SC/ST சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 24.04.20 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. 
 3. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கவுண்டச்சி புதூர் ஊராட்சித் தலைவரான தலித் சமூகத்தைச் சேர்ந்த செல்வி என்பவரை கடந்த 4.5.20 அன்று சாதி இந்துவான குப்புசாமி என்பவர் பணி செய்யவிடாமல், சாதிய ரீதியாக இழிவாகப் பேசி தாக்கவும் முயன்றுள்ளார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலையீட்டில் தாராபுரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் தீண்டாமை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் இடையர்காடு தி.தி.அ.க நல்மேய்ப்பர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300 குழந்தைகள் படித்து வருகிறார்கள். அதில் தலித் குழந்தைகளை பள்ளிக்கூடத்தை பெருக்க வைப்பது, தலித் மாணவர்களை ஆசிட் வைத்து  கழிவறையை சுத்தம் செய்ய வைப்பது, புல் அகற்ற வைப்பது, குப்பை அள்ளச் செய்வது என சாதிய பாகுபாட்டுடன் தலைமை ஆசிரியர் நீண்ட காலமாக நடந்து வந்திருக்கிறார். இவ்வாறு மார்ச் மாதத்தில் தலித் மாணவர்களை ஆசிட் வைத்து கழிவறை சுத்தம் செய்ய சொல்லி இருக்கிறார். அப்போது ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டதில் 2 தலித் மாணவர்கள் துத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்தவுடன் தீண்டாமை ஒழிப்பு முண்ணனி மாவட்ட தலைவர் கே.காசி, மாவட்ட செயலாளர் பா. புவிராஜ், திருவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சுவாமிதாஸ், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தலையீடுகள் செய்து வருகின்றனர்.

மயானப் பிரச்சனைகள்

 1. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கே.அய்யம்பாளையம் ஊராட்சி, முத்தாண்டிபாளையம் அருந்ததியர் குடியிருப்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சண்முகத்தின் மனைவி சசிகலா (35) உடல் நலக்குறைவு காரணமாக 22.4.20ல் இறந்துவிட்டார். முத்தாண்டிபாளையத்தில் சுடுகாடு இருந்தும், அது பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டுமே பயன்படுத்தும் சுடுகாடு என்பதால், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தவர்களின் இறந்த உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை. எனவே, இவர்கள் காலம்காலமாக முத்தாண்டிபாளையம் சாலையோரமாகவே இறந்தோரின் உடல்களைப் புதைத்துள்ளனர். சசிகலாவின் உடலை, சாலையோரம் புதைக்கச் சென்றபோது அங்குள்ள சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். வருவாய்த்துறை  மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர், இது பட்டா நிலம், இங்கு உடலைப் புதைக்கக் கூடாது; மின் மயானம் கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தியுள்ளனர். ஏற்காத மக்கள், போராட்டத்தில் இறங்கியதோடு, புதைகுழிகளைத் தோண்டிக் காட்டியுள்ளனர். எலும்புகள் வெளிவரவே, வேறு வழி இல்லாமல் சசிகலாவின் உடலைப் புதைக்க அனுமதித்துள்ளனர். மக்களுக்கு மயானத்திற்கு நிலமும், இறந்துபோன சசிகலா, சண்முகம் ஆகியோரின் மகனுக்கு அரசு உதவித் தொகையுடன் இலவசக் கல்வியும் அளிக்க வேண்டும்.
 2. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம் ராஜகோபாலபுரம் கிராமத்தில் தலித் மக்களுக்கு மயானம் இல்லை. 4.6.20 அன்று இறந்த பெரியவரின் உடலை வைத்துக் கொண்டு மயானம் கேட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிபிஐ(எம்) ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் வட்டாட்சியரிடம் கவனப்படுத்த அவர் அலட்சியமாகப் பேசியதால், மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சமூக வலைத்தளங்களில் செய்தியாக்கப்பட்டது. எனவே உடனடியாக கிராமத்திற்கு வருவாய் மற்றும் காவல்துறையினர் வந்திருந்து தற்காலிகமாக பாதை அமைத்துக் கொடுத்தனர். தற்போது மயாணம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சிபிஐ(எம்) ஒன்றிய செயலாளர் எஸ்.வி.சசிக்குமார், நகரச் செயலாளர் வி.ஜெயக்குமார், மாவட்டக்குழு மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.திருமலை, சி.ஜோதிலட்சுமி மற்றும் பல தோழர்கள் பங்கேற்றனர்.

டாக்டர் அம்பேத்கருக்கு அவமரியாதை

 1. கடலூர் நகர், மஞ்சக் குப்பம், அம்பேத்கர் சிலைக்கு சமூக விரோதிகள் சிலர் 1.5.20 அன்று செருப்பு மாலை போட்டு இழிவு செய்துள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வி.சுப்பராயன் மற்றும் சிபிஐ(எம்), விசிக தோழர்கள் தலையீடுகள் செய்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
 2. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரில் சமூக விரோதிகள் சிலர் அம்பேத்கர் உருவப்படத்தை சாணம் பூசி இழிவுபடுத்தியது குறித்து வெளிச்சம் தொலைக்காட்சி நிருபர் ஆதி சுரேஷ் (தலித்) என்பவர் தொலைக்காட்சியில் செய்தியாக்கியதற்காக 23.4.20 அன்று தாக்கப்பட்டார். இப்பிரச்சினையில் சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை தலைவர் ஜி.ஆனந்தன் மற்றும் சிபிஐ(எம்), விசிக தோழர்கள் தலையீடுகள் செய்தனர்.

அரசு பணியாளர்களின் பாரபட்சம்…

 1. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், தென்பட்டிணம் கிராமம் தலித் இளைஞர் மணிகண்டன் என்பவர் 13.4.20 அன்று மருந்து வாங்க இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூவத்தூர் உதவி ஆய்வாளர் சரவணன் மணிகண்டனை அடித்து அவரது கிராமத்துக்கு அருகாமையில் சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன் மற்றும் எஸ்.ரவி, பிகே.முத்து ஆகியோர் நேரடியாகச் சென்று தலையீடுகள் செய்தனர். தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது.
 2. திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில் நகராட்சி, சொரியங்கிணத்துப் பாளையம் அருந்ததிய மக்கள் குடியிருப்பில், கடந்த 11.04.20 சனியன்று இரவு, வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் சசிகலா, சோதனை என்ற பெயரில், அருந்ததிய மக்கள் மாடு அடித்து மாட்டுக்கறி குழம்பு வைத்திருப்பதாக வீடுவீடாகச் சென்று, கதவைத் தட்டி சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகளிலிலிருந்து சோறு மற்றும் குழம்பு ஆகியவற்றை வீட்டிலிருந்து தூக்கி வந்து வெளியில் கொட்டியுள்ளார். இதனை எதிர்த்து கேட்ட பெரியவர்களை, பெண்களை  சாதிய ரீதியாகப் பொதுமக்கள் மத்தியில் திட்டியுள்ளார்.  மேலும், 14.04.20 செவ்வாயன்று காலை மீண்டும் “சொரியங்கிணத்துப் பாளையத்தை கொரோனோ பாதித்த பகுதியாக முடக்கி விடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்பு திருத்தச் சட்டம் 2018ன் படி, வழக்குப் பதிந்து, கைது செய்ய அளிக்கப்பட்ட புகாரின் மீது மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியுள்ளார். ஆனால், இதுவரை அவர்மீது மாவட்ட  நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எஸ்.நந்தகோபால் உள்ளிட்ட தோழர்கள் தொடர்ந்து தலையீடுகள் செய்து வருகின்றனர்.
 3. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர் தோக்கவாடி பகுதியை சார்ந்த தலித் இளைஞர் கௌதம பிரியன்   த/பெ. ஆறுமுகம் என்பவர் தனக்கு அறிமுகமான மிகவும் பிற்படுத்தப்பட்ட பெண்ணுடன் பேசியதற்காக,இதே வட்டம் புதுப்பாளையம் காவல்நிலைய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த காவலர் ஈஸ்வரன் என்பவர் 31.03.20 அன்று தெருவில் முட்டி போட வைத்து, கௌதம பிரியன் அணிந்திருந்த அம்பேத்கர் படம் அச்சிடப்பட்ட பணியினை  கிழித்து, வயரால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இப்பிரச்சினை மாநில அளவில் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக மாறியது. விசிக தலைவர் கௌதம சென்னா, எவிடன்ஸ் கதிர், சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.செல்வன், வெற்றி சங்கமித்ரா ஆகியோர் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். விசிக வழக்கறிஞர்கள் வழக்கை நடத்தி வருகிறார்கள்.

கொத்தடிமைத்தனம்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், சொட்டமாயனூர் தலித் தொழிலாளி நந்தகோபால் என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் கந்து வட்டியாக, ரூபாய் 25 ஆயிரம் பெற்று, 1 லட்சத்திற்கு மேல் திருப்பி கொடுத்துள்ளார். மேலும் 1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று நந்தகோபாலை கடத்திச் சென்று பண்ணை தோட்டத்தில் கொத்தடிமையாக  வேலைக்கு வைத்துள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.முத்துச்சாமி தலையிட்டு காவல்துறை உதவியோடு நந்தகோபாலை விடுவித்துள்ளனர்.

தாக்குதல்கள்

 1. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், சூரியந்தாங்கல் தலித் குடியிருப்பில் 25.3.20 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி இளைஞர்கள் புகுந்து தாக்கியதில் ஐந்து இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, மூன்று வீடுகள் மற்றும் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தனசேகர், அலமேலு, ரவி, சின்னப்பையன் ஆகியோரை  கொடூரமான முறையில் தாக்கியும் உள்ளனர். இப்பிரச்சினையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.செல்வன், முன்னுரிமை கூட்டமைப்பின் ஏழுமலை, சிபிஐ(எம்) ஒன்றியச் செயலாளர் வாசுகி ஆகியோர் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்ததோடு, அதிகாரிகள் மட்டத்திலும் தலையீடுகள் செய்தனர்.
 2. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், கீழ்பாஞ்சார் கிராமத்தில் தலித் அருந்ததியர் மக்களின் பயன்பாட்டில் இருந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு லம்பாடி என்கிற பிற்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த ரவீந்திரன் மற்றும் பலர் 24.4.20 அன்று தலித் மக்களைத் தாக்கியதில் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் இப்பிரச்சினையில் தலையீடு செய்து வருகின்றனர்.
 3. விழுப்புரம் மாவட்டம், அரசூரில் 8.5.20 அன்று விசிகவைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் காரில் இருந்த கட்சிக் கொடியை மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த அருள் என்பவர் குடிபோதையில் சேதப்படுத்தியுள்ளார். பாக்கியராஜையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார். அருள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 4. விழுப்புரம் மாவட்டம், டி.எடையார் கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர்கள், தொட்டிக்குடிசை என்ற கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி ஒரு மரத்தடியில் குடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தொட்டிக்குடிசையைச் சேர்ந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி இளைஞர்கள் இங்கே ஏன் குடிக்கிறீர்கள் என்று அவர்களைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
 5. விழுப்புரம் மாவட்டம், மேலமங்கலம் கிராமத்தில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து விட்டு ஊர் திரும்பியவர்களை கிராமத்திற்குள் அனுமதிக்கும் பிரச்சனையில் 7.5.20 அன்று தகராறு ஏற்பட்டு ராஜவேணி என்ற தலித் பெண் கடுமையாக தாக்கப்பட்டார்.
 6. கடலூர் மாவட்டம் நல்லூர் வட்டம் என்.புதூர் ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரையின் மணல் கொள்ளையை எதிர்த்ததால் மேமாத்தூர் கிராம தலித் இளைஞர்கள் 8.5.20 அன்று தாக்கப்பட்டனர்.
 7. காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், இல்லீடு கிராமத்தில் காட்டுநாயக்கர் சமூகத்தினர் ஏரியில் தண்ணீர் எடுக்கும் போது பிற்படுத்தப்பட்ட (யாதவர்) சமூகத்தில் உள்ள சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சினையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் கே.வாசுதேவன் மற்றும் எஸ்.ரவி ஆகியோர் தலையீடுகள் செய்து வருகின்றனர்.
 8. திருவள்ளூர் மாவட்டம், கம்லூர் தலித் குடியிருப்பை ஒட்டிய சாலையில் கொரோனா அச்சம் காரணமாக தடுப்பு ஏற்படுத்தியதற்காக 7.5.20 அன்று 25க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட தரப்பினர் தலித் குடியிருப்பில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். தலித் மக்கள் அவ்வழியேதான் சென்றுவர வேண்டும் என்ற அச்சத்தில் சமாதானம் செய்து கொண்டனர்.
 9. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் அய்யாபட்டி கிராமம் தேவராஜ், ஹரிஹரன் ஆகிய தலித் சமூகத்தவர்கள் 24.4.20 அன்று ஸ்ரீரங்கம்பட்டி சென்று கொண்டிருந்த போது ராஜேஸ்வரன் என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட ஒரு கும்பல் தாக்கியுள்ளது.
 10. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் லிங்கவாடி கிராமம், பாலகிருஷ்ணன் என்ற தலித்தின் மாந்தோப்பில் 28.4.20 அன்று சுப்பையா என்பவர் உள்ளிட்டு 4 பேர் மாங்காய்  திருடியதோடு பாலகிருஷ்ணனையும் தாக்கியுள்ளனர்.
 11. தேனி பொம்மையா கவுண்டமன்பட்டியைச் சேர்ந்த கவியரசன், ஆனந்த், ஆகிய தலித் இளைஞர்கள் 24.5.20 சாதி இந்துக்கள் தெருவில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தார்கள் என்பதற்காக ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தலையீடுகள் செய்தனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் காவல்துறை பாதிக்கப்பட்ட நபர்கள் மீதும் பொய்யான புகாரை பெற்றுக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 12. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், மானகசேரி கிராமம் பட்டியலினத்தை சார்ந்த மாரிமுத்து என்பவர் வீட்டிற்கு அருகில் இருந்த இடத்தை பயன்படுத்துவது தொடர்பான பிரச்சனையில் கருப்பணத்தேவர் மகன் காளிராஜ் என்பவர் மாரிமுத்து மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரை கடுமையாக தாக்கியுள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார், சி.பி.எம் ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாரிமுத்துவிற்கு ஆறுதல் தெரிவித்து,பிரச்சினையில் தலையீடு செய்து வருகின்றனர்.
 13. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், அழகு தேவேந்திரபுரம் கிராமம் பட்டியலினத்தை சார்ந்த பூலான், ஜெயக்குமார் ஆகியோர்களை 18.5.20 அன்று ரஞ்சித் குமார், சுரேஷ், கருப்பசாமி, அருண், மாதவன், சச்சின், ராஜா, ரஞ்சித், வீரணன், மணி ஆகிய ஆதிக்க சமூகத் தரப்பினர் அரிவாளால் வெட்டி படுகாயப்படுத்தியுள்ளனர். தகவல் அறிந்து புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர், புதிய தமிழகம் வழக்கறிஞர் செல்வக்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ், சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுனன், நகர செயலாளர் வி.ஜெயக்குமார், ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.திருமலை உள்ளிட்டோர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
 14. திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம் கருக்கங்குடி கிராமத்தில் 19.5.20ம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவரை சாதியவாதிகள் தடுத்து டூவிலர் சாவியை எடுத்ததுடன் இழிவாக பேசி தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட  காளிதாசை சாதி வெறியர்களான கணேசன், ரமேஷ்குமார், ராஜமாணிக்கம், முருகையன், மாதவன், சீனிவாசன், சுரேஷ் உள்ளிட்டோர் வீடேறி வந்து வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயப்பட்டு மருத்துவமனையில் இருந்தவர்களை சிபிஐ(எம்) தலைவர்கள் ஐ.வி.நாகராஜன், சுந்தரமூர்த்தி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர்கள் தமிழ்மணி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்த பின்னரே SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் பாதிப்புக்குள்ளான தலித் மக்கள் மீதும் காவல்துறை பொய்வழக்கு புனைந்துள்ளது.
 15. திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையத்தில் 7.5.20 ஞாயிறன்று தலித் அருந்ததியர் லோகனாதனின் (25) ஆட்டுக்குட்டி, சாதி இந்து திருமூர்த்தி தோட்டத்துக்குள் சென்றதற்காக, லோகநாதன், தங்கை மாலதி இருவரையும், திருமூர்த்தி மகன் பிரவீன் (21), தாய், பாட்டி ஆகியோர் சாதியைக் குறித்து இழிவாகப் பேசியும் தாக்கியுள்ளனர். இதனையொட்டி, ஊர்க்கவுண்டர் கோபாலகிருஷ்ணன் (சுதாமா ஹொசைரீஸ் உரிமையாளர்) தலைமையில், ஆர்.எஸ்.எஸ் இன் கோவை கோட்டச் செயலாளர் பழனிச்சாமி (ஆர்ம்ஸ்ட்ராங் நிட்டிங் உரிமையாளர்), எஸ்.கே.செந்தில்குமார் (முன்னாள் பழங்கரை ஊராட்சித் தலைவர்) உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர், சாதி கட்டப் பஞ்சாயத்து நடத்தி, லோகனாதன் குடும்பத்தினரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டுமென மிரட்டியுள்ளனர். காளிமுத்து உள்ளிட்ட சொந்த மக்கள் மூலமே, தொடர்ந்து நான்கைந்து நாட்கள் அச்சுறுத்தி வந்த நிலையில் அவினாசி காவல்நிலையத்தில் 13.5.20ல் புகார் அளித்தார். சாதி ஒழிப்பு கூட்டியக்கத் தலையீட்டுக்குப் பிறகு 15.5.20ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கூடவே, லோகனாதன் மீதும் 2 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில் ஒரு வழக்கில் அவரைக் கைது செய்து சிறையிலடைத்து, பின் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தலையீடு செய்து வருகிறோம்.
 16. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் சின்னார் பாளையம் கிராமத்தில் 7.5.20 அன்று மாவு அரைப்பதற்காக சென்ற தலித் இளைஞர்கள் தினேஷ்குமார், குமரேசன் ஆகியோரை பூபதிராஜா, செல்லம், வெற்றிவேல் ஆகிய ஆதிக்க சாதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். வழிவிடுங்கள் என்று கேட்டதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தாங்கள் தாக்கப்பட்டதற்கு ஆதிக்க சாதி கிராம பெரியவர்களிடம் முறையிட சென்றபொழுது மீண்டும் தாக்கப்பட்டுள்ளனர்.
 17. நாமக்கல், வகுரம்பட்டி தலித் வழக்கறிஞர் சசிகுமார் என்பவர் மீது கடந்த 9.5.20 அன்று கோபிநாத் உள்ளிட்ட சாதி இந்து வன்கொடுமைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
 18. நாமக்கல் மாவட்டம், பிலிப்பாகுட்டை சமத்துவபுரத்தைச் சேர்ந்த தலித் பெண் அனிதா என்பவர் மீது 15.4.20 அன்று சாதி இந்துக்களான சரசு மற்றும் அவரது கணவர் ரவி ஆகியோர் தாக்குதல் தொடுத்துள்ளனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் உள்ளிட்ட தோழர்கள் தலையீடுகள் செய்தனர்.
 19. புதுக்கோட்டை மாவட்டம், கரம்பவிடுதி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடியிருப்பிற்கு அருகே வேகத்தடை அமைத்ததற்காக தலித் சமூகத்தைச் சார்ந்த மனோகரன் உள்ளிட்ட மூன்று பேரை கடந்த 7.5.20 அன்று சாதி இந்துக்களான பால்ராஜ் உள்ளிட்டவர்கள் தாக்கி கொடுங்காயங்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கறம்பக்குடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 20. புதுக்கோட்டை மாவட்டம், வேப்பன்பட்டி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் சாதி இந்து பெண் வீரலட்சுமி என்பவரை கடந்த 6.4.20 அன்று திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமி பெற்றோர்கள் தம்பதியரின் மிரட்டினர் இதுகுறித்து காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
 21. புதுக்கோட்டை மாவட்டம், கன்னியான் கொல்லை கிராமத்தில் தலித் குடியிருப்பின் அருகில் வேகத்தடை அமைத்ததால் ஆத்திரம் அடைந்த சாதி இந்துக்களான ரமேஷ் உள்ளிட்டவர்கள் 21.5.20 அன்று தலித் மக்களைத் தாக்கியுள்ளனர்.
 22. திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் வட்டம் வேப்பன்பாடு கிராமத்து தலித் இளைஞர்களை கடந்த 27.4.20 அன்று சுபாஷ் உள்ளிட்ட சாதி இந்துக் கும்பல் மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர்.
 23. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை வட்டம், செல்வமருதூர் கிராமம் செந்தூரபாண்டி உள்ளிட்ட 3 தலித் இளைஞர்களை 16.5.20 அன்று அரவிந்த் உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட சாதி ஆதிக்கவாதிகள் அரிவாளால் வெட்டித் தாக்கியுள்ளனர்.
 24. கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழகம் அருகே வசிக்கும் தலித் வழக்கறிஞர் ஈஸ்வரன் என்பவரை கடந்த 7.5.20 வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் சாதி ரீதியாக இழிவாகப் பேசி லத்தியால் தாக்கியதில் இடது முழங்கை முறிப்பு ஏற்பட்டுள்ளது.
 25. கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கரவழிமாதப்பூர் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி என்கிற தலித் அருந்ததியர் சமுகத்தை சார்ந்தவர். கடந்த 17.5.20 அன்று அதே பகுதியில் வசிக்கும் வளையர் சமூகத்தை சார்ந்த ராஜன் மகன் சிவகுமார் மற்றும் அவருடைய தம்பி விஷ்ணு ஆகிய இருவரும் பழனிச்சாமியை கன்னத்தில் முதுகிலும்  அறைந்தும் அடித்தும்  உள்ளார்கள். இதை பார்த்த பழனிச்சாமி மனைவி கவிதா, மாமனார் கருப்புசாமி,  கருப்புசாமியின் மகள் பாலாமணி ஆகியோர் தடுக்க சென்றனர். அப்போது சிவக்குமாரின் தாயார் மணி மற்றும் மாமா பழனிச்சாமி ஆகியோரும் சேர்ந்து பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியள்ளார்கள்.
 26. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் செங்கோட்டை கிராமம் தலித் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரை பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சார்ந்த ராமு உள்ளிட்ட கும்பல் 3.4.20 அன்று தாக்கியுள்ளனர்.
 27. சிவகங்கை மாவட்டம், மூங்கில் ஊரணி, லட்சுமி மற்றும் அவரது கணவர் பாக்கியராஜ் ஆகிய தலித்துகளை 5.4.20 அன்று சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்கியுள்ளது.
 28. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் நடுவலசை கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் உள்ளிட்ட 3 தலித் இளைஞர்களை கடந்த 21.05.2020 அன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பிரசாந்த் உள்ளிட்ட 4 பேர் கொண்ட வன்கொடுமை கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளது.
 29. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் விசவனூர் கிராமத்தில் தலித் இளைஞர்கள் மீது சாதியவாதிகள் வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 30. சிவகங்கை மாவட்டம் சோமாத்தூரில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
 31. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியம் விக்னேஷ் நகர் மருதமுத்து என்பிற தலித்தின் மீது 13.5.20 அன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெருமாள் உள்ளிட்ட இருவர் தாக்கியுள்ளனர்.
 32. கரூர் மாவட்டம், மலைப்பட்டி கிராமம் தலித் சமூகத்தை சார்ந்த ருக்குமணி உள்ளிட்ட 3 பேரை கடந்த 20.5.20 அன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த தங்கமணி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கும்பல் தாக்கியுள்ளது.
 33. மதுரை மாவட்டம், அயோத்திபட்டி கிராமம் தலித் சமூகத்தைச் சார்ந்த பெரியகருப்பன் என்பவர் மீது கடந்த 24.5.20 அன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பாஸ்கரன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது.
 34. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா (தலித்) என்பவர் கடந்த 27.5.20 அன்று பேருந்து நிழற்குடையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்டோர் வீடு புகுந்தும் தாக்கியுள்ளனர். சிவன்ராஜின் பற்கள் உடைக்கப்பட்டதோடு உடம்பு முழுமையும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.முருகன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.காசி, குருசாமி ஆகியோர் தாக்குதலுக்குள்ளான சிவன்ராஜை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் தோழர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வரை நேரில் சந்தித்து உயர் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்தனர். தலையீடுகள் செய்து வருகிறோம்.
 35. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், வடக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கண்ணுச்சாமி என்பவரது மகன் சிவன்ராஜா (தலித்) என்பவர் கடந்த 27.5.20 அன்று பேருந்து நிழற்குடையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார் என்பதற்காக அதே கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் தாக்கியதோடு ஐந்திற்கும் மேற்பட்டோர் வீடு புகுந்தும் தாக்கியுள்ளனர். சிவன்ராஜின் பற்கள் உடைக்கப்பட்டதோடு உடம்பு முழுமையும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.முருகன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.காசி, குருசாமி ஆகியோர் தாக்குதலுக்குள்ளான சிவன்ராஜை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்ட செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் தோழர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வரை நேரில் சந்தித்து உயர் சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்தனர். தலையீடுகள் செய்து வருகிறோம்.
 36. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கீழ மாதரை கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட மூன்று பேர் மீது கடந்த 7.5.20 அன்று உள்ளூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆதிக்க சாதியினர் 8 பேர் மேற்கண்ட தலித் இளைஞர்களை வீட்டிற்குள் நுழைந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரும் படுகாயமடைந்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக நாம் தலையிட்டு SC/ST ஆணையம், மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு புகார் மனு அளித்து குற்றவாளிகள் மீது பிசிஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 37. சேலம் மாநகரில் அமைந்திருக்கக் கூடிய சேலம் சாரதா மகளிர் கலைக் கல்லூரியில் சமையலர்கள் மற்றும் காவலர்கள் பணிக்கு ஆட்கள் தேவை என்று பத்திரிக்கை விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் OC மற்றும் MBC வகுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று இருந்ததை கண்டித்தும் இதுபோன்று விளம்பரம் கொடுத்த கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று  மாவட்ட  ஆட்சியர் அவர்களுக்கு 19.3.20ல் புகார் மனு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கொடுக்கப்பட்டது.
 38. நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி தூய்மை பணியாளராக பணிபுரிந்த பாலன் (எ) பாலசுப்பிரமணி 6.5.20ல் பணியில் இருந்தபோது உடல்நலம் குன்றி மயக்கமடைந்திருக்கிறார். சக தொழிலாளர்கள் அவரை காப்பாற்ற அவசரத்துக்கு பேரூராட்சி குப்பை ஏற்றும் வாகனத்தில் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்த பாலனின் உடலையும் அதே குப்பை வண்டியில் நிர்வாகம் அனுப்பி வைத்திருக்கிறது. 15 ஆண்டுகள் தூய்மைப் பணியில் இருந்தவர் தலித் என்பதாலேயே மனித மாண்புக்கு எதிராக தீண்டாமையை கடைபிடித்துள்ளனர். புகார் கொடுப்பட்டும் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இப்பிரச்சனையில் சிஐடியு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்ப்புலிகள் ஆகிய அமைப்புகள் தலையீடு செய்து உள்ளன. சிபிஐ(எம்) சார்பில் பல்வேறு கோரிக்கைகளுடன் 225 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இக்கோரிக்கையும் ஒரு பிரதான பிரச்சினையாக வைத்திருந்தது. சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் ரகுராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிச்சாமி, தலைவர் அண்ணாத்துரை, சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், தோழர்கள் எஸ்.மாணிக்கம், ஏ.ஜெயக்குமார், எஸ்.மாணிக்கம் ஆகிய தோழர்கள் தலையீடுகள் செய்து வருகின்றனர்.
 39. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சி, பாப்பாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில், தமிழக அரசு அறிவித்த 1000 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் இலவச ரேசன் பொருட்களுக்கான டோக்கன், 2.4.20 வியாழன்று காலை அதிமுகவைச் சார்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது கண்டு, மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சக்திவேல் உள்ளிட்டோர் கேட்டதற்கு, (ஆட்டு வியாபாரி) சக்திவேல் சாதிய ரீதியாகத் திட்டி, கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். 3.4.20 அன்று காங்கயம் வட்டாட்சியரிடம் புகார் தெரிவித்த நிலையில். அன்றைய தினமே டோக்கன் கொடுத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. 4.4.20 சனியன்று மதியம் ஆட்டு வியாபாரி சக்திவேல் அருந்ததிய மக்களை அழைத்து வந்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி, கையெழுத்தும் வாங்கியுள்ளார். மேலும் சக்திவேல் உள்ளிட்ட ஐந்து குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தும், அவர்களுடன் யாரும் பேசக் கூடாது, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

  இக்கூட்டத்தில் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுதர்சனும் கலந்து கொண்டுள்ளார். அருந்ததியர் சக்திவேல், பால் வாங்கச் சென்றபோது பால் விற்பனையாளர், சக்திவேலை சாதியைச் சொல்லி திட்டியதால் ஏற்பட்ட பிரச்சனையின் மீதான புகாரில், ஆட்டு வியாபாரி சக்திவேல், பால் விற்பனையாளர் ஆகியோர் மீது வன்கொடுமைச் சட்டத்திலும், சக்திவேல் மீது இந்திய தண்டனைச் சட்டத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுதர்சன் மீதும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 40. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் ஒன்றியம் கிளிமங்களம் தலித் சமூகத்தைச் சார்ந்த சரண்யா த/பெ கருப்பையன் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரை அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியவாதியான அஜித்குமாரும் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியும் சாதி ரீதியாக இழிவுபடுத்தி அடித்துள்ளனர். இதில் வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 41. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் ராஜாக்கள் நல்லூர் தலித் மக்கள் அனுபவத்திலுள்ள குளம் மற்றும் 100 குழி திடலை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்த முருகன் ஆக்கிரமித்துள்ளார். இதை கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சிமன்றத் தலைவரிடம் தலித் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரப்பட்ட சாதியவாதிகள் கும்பலாக 21.5.20 அன்று இரவு தலித் மக்கள் குடியிருப்பில் தாக்குதல் நடத்த வந்துள்ளனர். காவல்துறை வந்ததால் வன்கொடுமை தாக்குதல் தடுக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறை, பாதிப்புக்குள்ளான தலித் மக்கள் மீதும் பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் சின்னைப் பாண்டியன் உள்ளிட்ட தோழர்கள் தலையீடுகள் செய்து வருகின்றனர். திரு.ஜான்பாண்டியன் அவர்களின் மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பும் தலையீடு செய்து வருகிறது.
 42. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் பனையக்கோட்டை கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை த/பெ அய்யாவு என்பவர் மளிகைக் கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது வழிமறித்து நின்றவர்களை வழியை விடுங்கள் என்று கேட்டதற்கு கள்ளர் சமூக்கத்தை சார்ந்த பஞ்சுகுமார் த/பெ பஞ்சநாதன் உள்ளிட்ட மூன்று பேர் வன்கொடுமை செய்து தாக்குதல் தடத்தியுள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துமனையில் அனுமதிக்கப்பவர்களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தும், இப்பிரச்சனையில் தொடர் தலையீடும் செய்து வருகிறது.
 43. திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டம், வடக்கு விஜயநாராயணம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பார்பரம்மாள் பதைக்கம் கிராமத்தில் சுமார் 40 தலித் குடும்பமும் சுமார் 200 நாடார் குடும்பமும் வசித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தலித் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் அதே கிராமத்தினை சார்ந்த நம்மாழ்வார் நாடார் மகன் குகானந்தம், ராஜகோபால், பிரேம் ஆனந் ஆகியோர் துணி துவைப்பது அதிகமான தண்ணீரை வீணாக்கியும் வந்துள்ளனர். மேற்படி குடிநீர் தொட்டி தண்ணீரை வீணாக்காதிருங்கள் மாசுபடுத்தாதிருங்கள் என்று தலித் மக்கள் அவ்வப்போது கண்டித்து வந்துள்ளனர்.

  இந்நிலையில் 3.7.2020ம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் பட்டியல் சாதியினரான சற்குணம் மகன் வேல்முருகன் தண்ணீரை வீண் செய்யாதீங்க என்று சொல்ல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவு சுமார் 9.30 மணியளவில் வேல்முருகன் அவர் தம்பி சுபாஷ் வேல்முருகன் மகன்கள் சதீஷ், முத்துசரவணன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்த போது மேற்படி எதிரிகள் குகானந்தம், ராஜகோபால், பிரேம்ஆனந்த் ஆகியோர் கையில் அருவாள் கத்தியோடு வந்து நிராயுத பாணியாக நின்ற சுபாஷ்சை வெட்டியுள்ளனர். அருகில் நின்ற வேல்முருகன் எதிரியின் அருவளை பிடுங்கியுள்ளார். மற்ற எதிரிகள் சுபாவை பிடித்துக் கொள்ள குகானந்தம் கத்தியால் சுபாவை வயிற்றில் குத்தி கிழித்துள்ளான். வேல்முருகனையும் முகத்திலும் அவரது மகன்கள் சதீஷ், முத்துசரவணன் ஆகியோரையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். வேல்முருகன் தாயார் தமிழ்ச் செல்வியையும் தாக்கி சேலையை உரிந்து மானபங்கம் செய்துள்ளனர்.

  உயிருக்கு பேராடிய நான்கு பேரையும் உறவினர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். காயம்பட்டவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாதிக்கப்பவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் மதுபாலா, மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம் இருவரும்  பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறியுள்ளனர்.
 44. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், சின்ன மலைப்பட்டி கிராமத்தில் தலித் பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் வராத காரணத்தால், சாதி இந்துக்கள் பகுதியில் இருந்த தண்ணீர் குழாயை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. 18.5.20 அன்று தலித் பகுதி குழந்தைகள் திணேஷ், லோகேஷ், ஆனந்த ஆகியோர் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது இங்கு ஏன் வந்தீர்கள் என சாதி இந்துவான வேல்முருகன் அடித்துவிடுகிறார். இதனைத் தொடர்ந்து கிராமக்கூட்டம் நடத்தி கூட்டத்திற்கு வரவழைத்து வீராச்சாமி, செந்தில்குமார், செல்வராஜ், ரெங்கசாமி, கோவிந்தசாமி ஆகிய தலித்துகளைக் கட்டி வைத்துத் தாக்குகிறார்கள். இதனைக் தட்டிக்கேட்ட ஆறு மாத கற்பிணியான ருக்மணி, தேன்மொழி, முத்துலட்சுமி, ஜோதி ஆகிய தலித் பெண்களையும் தாக்குகிறார்கள். காவல்துறை வழக்கம் போல் இருதரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்கிறது. சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர், குளித்தலை ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், கிருஷ்ணாபுரம் ஒன்றியச் செயலாளர் ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ராஜூ, மாவட்ட பொருளார் வழக்கறிஞர் சரவணன் மற்றும் கணேசன் ஆகியோர் நேரில் சென்று தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு இப்பிரச்சினையில் தலையீடு செய்து வருகிறார்கள்.
 45. கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் கிராமம், செல்லரபாளையத்தைச் சேர்ந்த வெளிச்சம் தொலைக்காட்சியில் நிருபராக உள்ள அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த கண்ணன் 24.5.20 அன்று, அவருடைய ஊரில் கொரோனா தொற்று பரவல் நிலையில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காத திருமணம் குறித்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்துள்ளார். இத்திருமணத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருவதாக இருந்துள்ளது. இந்நிலையில், செல்லரபாளையத்திற்கு வந்த அமைச்சர், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி, அவருடன் வந்தவர்களை தூண்டிவிட்டு தாக்கச் செய்துள்ளார்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, கரூர் ஒன்றியச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நியாயத்திற்காக அதிகாரிகளைச் சந்தித்து தலையீடுகள் செய்து வருகிறார்கள்.

கே.சாமுவேல்ராஜ்
பொதுச் செயலாளர், TNUEF
9443545398

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...