தமிழகத்தில் மதுவிலக்கு நடவடிக்கைகளை எடுத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழகத்தில் மதுவிலக்கு நடவடிக்கைகளை எடுத்திடுக; வைகோ மீதான பொய்வழக்கை திரும்ப பெறுக; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்கள் சில தினங்களாக பரவலாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமென்றும், தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள், உழைப்பாளி மக்களில் கணிசமான பகுதியினர் மதுப்பழக்கத்திற்கு ஆட்படும் நிலை அதிகரித்து வருவதால் தமிழக அரசு மதுவிலக்கு நடவடிக்கைகளை படிப்படியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு பல கட்சிகளும், மாணவர்கள், இளைஞர்கள், மாதர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

மதுவிலக்கு ஆர்வலர் சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தும் போராட்டங்கள் மேலும் வலுத்துள்ளன. சசிபெருமாளின் உறவினர்கள் அவரது உடலை பெறமறுத்து ஒரு வயதுக்குழந்தை உட்பட மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மறியல் செய்தனர். மறியல் செய்தவர்களை காவல்துறை கைது செய்தது. மேலும் அதைக் கண்டித்து போராட்டம் நடத்திய வாலிபர் சங்கத் தோழர்களையும் தாக்கியது. காவல்துறையின் இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது,

நேற்று (2.8.2015) கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. தொல். திருமாவளவன் ஆகியோரும், கலிங்கப்பட்டி பொதுமக்களும் பங்கேற்று நடந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி தாக்குதல், கண்ணீர் புகைக் குண்டு வீச்சு நடத்தி பொதுமக்களை விரட்டியடித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற திரு. வைகோ, அவரது தம்பி ரவிச்சந்திரன் உட்பட 52 பேர் மீது இன்று (3.8.2015) கொலை முயற்சி வழக்கு உள்ளிட்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்த நடவடிக்கை மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தி போராடும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது திட்டமிட்டு தொடுக்கப்படும் தாக்குதலாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதே போல் சென்னை, அமைந்தைகரை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராடிய மாணவர் – மாணவியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் மாணவர் – மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் இத்தகைய வன்முறை தடியடித் தாக்குதலையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

திரு. வைகோ மீதும், கலிங்கப்பட்டி பொதுமக்கள் மீதும் புனையப்பட்டுள்ள வழக்குகளை உடனே திரும்ப பெற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டுள்ள சென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், காவல்துறையினரையும் வலியுறுத்துகிறது.

தமிழக அரசின் மதுக்கொள்கைக்கு எதிராக வலுத்து வரும் எதிர்ப்பையும், மக்களின் கருத்துக்களையும், உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் மதுவிலக்கு நடவடிக்கைகளை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...