தமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்

தமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்

மின்வெட்டைப் போக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில்  கடந்த சில நாட்களாக மின்வெட்டு நிலவி வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று மின்துறை அமைச்சர் ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இது உண்மைக்கு மாறானது. பல இடங்களில் மின்வெட்டை கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று இருக்கின்றன. அனல் மின்நிலையங்களில் போதுமான அளவிற்கு நிலக்கரி இல்லை என்றும், இதற்காக மத்திய அமைச்சரை தான் சந்தித்து உடனடியாக தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டதாகவும் மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கூற்றே தமிழகத்தில் மின்வெட்டு நிலவுகிறது இன்னும் மோசமான நிலையை அடையக்கூடும் என்பதற்கான ஒப்புதலாகும்.

தமிழ்நாட்டில் மொத்த மின்தேவை சுமார் 15 ஆயிரம் மெகாவாட். மத்திய அரசு தமிழக மின்வாரியம் ஆகியவற்றில் மொத்த நிறுவுத்திறன் 12 ஆயிரத்து 700 மெகா வாட் மட்டுமே. நிறுவு திறன் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உதாரணமாக தற்போது சுமார் 8200 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, எப்போதும் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி தான் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் தான் தொடர்ந்து பலமுறைகேடுகள் நடந்து வருகின்றன.

மேலும், மாநிலத்தினுடைய மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான மின்திட்டங்களில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. அவ்வாறு திட்டமிடப்பட்ட மின் திட்டங்களிலும் கட்டுமானப் பணிகள் முழு வேகத்தில் நடத்தி முடிக்கப்படுவதில்லை. உதாரணமாக எண்ணூர் அனல்மின்நிலைய விரிவாக்க பணிகள் பல மாதங்களாக முடங்கி கிடக்கின்றன. தொடர்ந்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்காகவே இத்திட்டங்கள் ஆமை வேகத்தில் நடத்தப்படுகிறதோ என்ற வலுவான கேள்விகள் எழுந்துள்ளன.

பற்றாக்குறையை ஈடுகட்ட காற்றாலை மின்சாரத்தை நம்பியுள்ள நிலையில் காற்றாலை மின்சாரம் வழக்கமாக ஆகஸ்ட் 30-ந் தேதியோடு முடிந்து விடும் என்பதும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் கூடுதல் மின் உற்பத்திக்கான முன்முயற்சிகளை மின்வாரியம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இருக்கும் மின் உற்பத்தியை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை கூட மின்வாரியம் மேற்கொள்ளவில்லை என்பது நிர்வாக சீர்கேட்டின் உச்சமாகும். போதிய நிலக்கரி இல்லாமல் சில அனல் மின்நிலையங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்க வேண்டும் என்ற விதி கூட பின்பற்றப்படாமல், தமிழக அரசும், மின்வாரியமும் மெத்தனப்போக்காக இருந்ததே இன்றைய மின்வெட்டுக்கு அடிப்படை காரணமாகும்.

தமிழக மின்வாரியம் உரிய முறையில் நிர்வகிக்கப்படாததன் காரணமாக தமிழக மின்வாரியத்திற்கு மின்சாரம் அளித்த பல நிறுவனங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் பணம் பல மாதங்களாக கொடுக்கப்படாத நிலை உள்ளது. இதேபோன்று நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து தாங்களே மின்சாரத்தை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மின்பற்றாக்குறை காலங்களில் முக்கியமான தேவைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்குப் பதிலாக அதிக விலை கொடுப்போருக்கு மின்சாரம் வழங்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதோடு,  தமிழக மின்சார வாரியத்தை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைக்கும்.

எனவே, தமிழக அரசும், மின்வாரியமும் மின்வெட்டை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் மின்தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க கூடுதல் மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தற்போது முடங்கி கிடக்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரியத்தை கடன் சுமையிலிருந்து மீட்க மத்திய அரசு போதுமான நிதி உதவி அளிப்பதோடு, உடனடியாக தமிழக மின்துறை அமைச்சர் கோரியுள்ள அளவு நிலக்கரியை வழங்கியும் உதவிட வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...