தமிழகத்தில் விரும்பிய உணவை சாப்பிட உரிமை இல்லையா?

திருவண்ணாமலை காவல்துறையின் அராஜகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

திருவண்ணாமலையில் 1.11.2015 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து ‘எனது உணவு; எனது உரிமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனொரு பகுதியாக, மாட்டுக்கறி உணவு பரிமாறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையிடம் ஏற்கெனவே அனுமதி பெறப்பட்டிருந்தது.

கருத்தரங்கத்தை நடத்துவதற்கு இன்று (1.11.2015) மாலை பெரியார் சிலை அருகே தலைவர்களும், தொண்டர்களும் கூடி நின்ற போது, காவல்துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறினர். அதற்கு தலைவர்கள், தமிழ்நாட்டில் விரும்பியதை சாப்பிடுவதற்கு கூட உரிமையில்லையா, தமிழ்நாட்டில் மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.

அதை ஏற்கமறுத்த காவல்துறையினர், அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் கருணா மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் எம்.வீரபத்திரன், சிவகுமார் உள்ளிட்டோரை வலுக்கட்டாயமாக பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மோடி ஆட்சியில் கருத்துரிமையும், உணவு உரிமையும் பறிக்கப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்த போக்கு தலைதூக்குவது ஆபத்தான அறிகுறி.

எனவே கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...