தமிழகத்தில் விவசாயத்தையும், தொழில்களையும் பாதுகாக்க

தமிழகத்தில் விவசாயத்தையும், தொழில்களையும் பாதுகாக்க சிபிஐ (எம்) 22வது மாநில மாநாடு வலியுறுத்தல்

தமிழகம் பல துறைகளிலும் பின்னடைவை சந்தித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு வேதனையுடன் சுட்டிக்காட்ட விழைகிறது.

முதன்மைத் தொழிலான விவசாயத்தின் உற்பத்தி 2012-13ல் 21.5 சதவிகித சரிவைச் சந்தித்தது. 2016-17ல் வேளாண் உற்பத்தி அதிர்ச்சி கொள்ளத்தக்கத் அளவில் சரிந்தது. முந்தைய ஆண்டான 2015-16ல் உணவு தானிய உற்பத்தி 113.69 லட்சம் டன்னாக இருந்தது. ஆனால் 2016-17ல் இது 60.32 லட்சம் டன்னாக சரிந்தது. கட்டுப்படியாகாத தொழில் என்ற எண்ணம் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நம்பிக்கையின்மையிலும், விரக்தியிலும் ஆழ்த்தி விட்டது. விளைப்பொருட்களுக்கு அடக்கச் செலவின் ஒன்னரை மடங்கு கொள்முதல் விலை என்ற சாமிநாதன் குழுவின் முடிவை அமல்படுத்த மத்திய அரசும் தயாராக இல்லை. வாங்கிய கரும்பிற்கு நிர்ணயித்த விலையைக் கூட ஆண்டுக் கணக்கில் தராமல் சர்க்கரை ஆலை முதலாளிகள் விவசாயிகளை நிலை குலைய வைப்பது கொடூரமான உதாரணம்.

விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு, உழவடைச் செலவுகளை கடுமையாக அதிகரித்துள்ளது. கூட்டுறவுக் கடன் போன்றவையும் ஊழல் மற்றும் முறைகேடுகளால் ஏழை நடுத்தர விவசாயிகளுக்கு பெரிய பலன் தரவில்லை. நீர்ப்பாசன விரிவாக்கம், நிலத்தடி நீர் செறிவூட்டல், இலவச மின்சார இணைப்பு வழங்குவது போன்றவற்றில் மாநில அரசு உரிய அக்கறை காட்டவில்லை. இந்நிலையில் தனியாரிடம் கடன்பட்டு, அவமானப்பட்டு, அடுத்த சாகுபடிக்கும் வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அபாயம் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே இதுவரை இந்தத் தற்கொலைகள் முந்நூரை தாண்டி விட்டது.

விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் தான் கொஞ்சம் தாக்குப்பிடித்து வருகிறார்கள். சில மாதங்கள் விவசாயத்தில் ஈடுபடுவதும், இதர மாதங்களில் பக்கத்து நகரங்களில் உடலுழைப்பு, முறைசாராத் தொழிலாளியாக போவதுமாக விவசாயிகளின் வாழ்க்கை நகருகிறது. மொத்தத்தில் தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரம் வீழ்ச்சியுற்று ஏழ்மை பெருகி வருகிறது. தமிழகத்தில் இருந்து பிழைப்புத் தேடி பக்கத்து மாநிலங்களுக்கு புலம் பெயருவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சியும் பெரும் பின்னடைவையே சந்தித்து வருகிறது. புதிதாக வந்த பன்னாட்டு பெருந்தொழில்கள் மூலதன அளவிற்கேற்ப வேலை வாய்ப்பைத் தரவில்லை. புதிய பெருந்தொழில்கள் மேலும் வரும் என்ற அரசின் அறிவிப்புகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக, பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டன.

தமிழகத்தின் பாரம்பரியமான ஜவுளித் தொழில், பனியன் தொழில் விசைத்தறி, கைத்தறி, பட்டாசு, தீப்பெட்டி, ரப்பர், முந்திரி, உப்பளம் போன்ற எல்லாத் தொழில்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி வரி அமலாக்கும் முறை, பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஆகியவை பல்லாயிரக்கணக்கான சிறு, குறு உற்பத்தியாளர்களை அழித்துவிட்டது. பெரும் வேலையிழப்பும், அதன் தொடர் விளைவுகளும் பொருளாதாரத்திற்கு பாதகமான விளைவுகளை உண்டாக்குகிறது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் விவசாயம் மற்றும் தொழில்துறைகளின் பங்களிப்பு குறைந்து, சேவைத் தொழிலில் தான் சற்று உயர்ந்து அதுவும் தற்போது சரிந்து வருகிறது. சேவைத் தொழிலில் வருகிற வேலைவாய்ப்புகள் அத்தனையும் முறைசாரா குறைந்த கூலித் தன்மை கொண்டவை.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தந்த குறிப்பிடத்தகுந்த தொழிலாகும். இதிலும் தகவல் தொழில்நுட்ப உதவித் தொழில்கள் மிகக் குறைந்த கூலி உள்ளதாகவே உள்ளது. தகவல் தொழில்நுட்பத்திலும் வேலைவாய்ப்பு சுருங்கி வருகிறது. பெரும் எண்ணிக்கையில் ஊழியர்கள் வெளியேற்றப்படுவதும் நடக்கிறது.

90 லட்சம் பேர் வேலை வாய்ப்பகத்தில் பதிந்து காத்திருக்கின்றனர். பல லட்சம் பேர் இருக்கும் வேலையை இழந்து வருகின்றனர். வேலையில் இருப்போரும் மிகக் குறைந்த கூலி பெறுவோராகவே உள்ளனர்.

ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான பொருளாதார நிலைக்கும், மக்களின் வாழ்க்கைத் தர வீழ்ச்சிக்கும், வேலையின்மை பெருக்கத்திற்கும் பொறுப்பான மத்திய, மாநில அரசுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 22வது மாநில மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

மாநில அரசு விவசாயம், தொழில், சேவைத் துறைகளை தனது முன்னுரிமையாக கணக்கில் கொண்டு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கல் செய்து செயல்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர்: தோழர் அ. சவுந்தரராசன்
வழிமொழிபவர்: தோழர் வி. மாரிமுத்து, நாகை

 

Check Also

மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...