தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள் – தோழர் என்.சங்கரய்யா வேண்டுகோள்!

தமிழகத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாற்ற அனைத்து கட்சி தோழர்களும் பாடுபட வேண்டும் என செங்கல்பட்டில் நடைபெற்ற கட்சியின் பொன்விழா கருத்தரங்கில் தோழர் என். சங்கரய்யா வேண்டுகோள் விடுத்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்விழா மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் கருத்தரங்கம் செங்கல்பட்டில் வெள்ளியன்று (02.10.2015) நடைபெற்றது. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.சங்கர் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.சீனிவாசன், ஏ.ஆறுமுகநயினார், தீக்கதிர் சென்னை பதிப்பு மேலாளர் சி.கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் பேசினர்.

கருத்தரங்கை நிறைவு செய்து  கட்சியின் முதுபெரும் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா பேசியதாவது;

கட்சியின் 50வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை நாம் உறுவாக்கியுள்ளோம். மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் சிறப்பான ஆட்சியினை செய்து வருகின்றோம். மேற்குவங்கம், கேரளா, திரிபுராவிற்கு அடுத்தபடியாக தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் நமது கட்சியின் மதிப்பீட்டில் முக்கியமான மாநிலங்களாக  கருதப்படுகின்றன. மேலும் இந்தியாவில் 29 மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி சிறப்பாக செயல்படுகின்றது.

கடந்த அகில இந்திய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட அரசியல் தலைமைக்குழ தோழர் சீத்தாராம் யெச்சூரி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மாநிலக்குழுவும், மாநில செயற்குழுவும் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக செயல்படுகின்றது. மேற்குவங்கம், கேரளா, திரிபுராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மாநிலக்குழு சிறப்பாக செயல்படுகின்றது.

தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி தேழர்கள் தமிழகத்தை கட்சியின் கோட்டையாக மாற்றுங்கள் என அறைகூவல் விடுத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் கேஎஸ்.பார்த்தசாரதியை கம்யூனிஸ்ட்டாக மாற்றினோம். அவர் கைத்தறி தொழிலாளர்களை திரட்டினார் என்றார்.

காங்கிரஸ், பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளும் இந்திய பெருமுதலாளிகளுக்கு ஆதராவாக செயல்படும் கட்சிகள். மேலும் பிஜேபி மதவாதத்தை தூண்டும் கட்சியாக உள்ளது. இவற்றை நாம் எதிர்த்து வருகின்றோம். தமிழகதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழக பெருமுதலாளிகளை பிரிதிபலிக்கும் கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் முதலாளிகளுக்கான கட்சிகளாக மாறிவிட்டன. இந்தக் கட்சிகள் தொழிலாளிகளுக்கான திட்டங்களை தீட்டமாட்டார்கள். ஆகவே சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட இடதுசாரி முன்னணியை ஏற்படுத்தி போராடி வருகின்றோம். மேலும் தேர்தல் வரவிருப்பதால் தோழர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இக்கருத்தரங்கில் தீக்கதிர் வளர்ச்சி நிதி 39 ஆயிரம் ரூபாயும், தீக்கதிர் சந்தா தொகை 3,77,000 ரூபாயும்,  வட்டியில்லாக் கடன் 39,000 ரூபாயும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.மோகனன் தோழர் என்.சங்கரய்யாவிடம் வழங்கினார். இக்கருத்தரங்கில் கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...