தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் – சிபிஐ(எம்) கருத்து

தமிழக அரசின் 2016-17க்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மக்கள் எதிர்கொள்ளும் வேலை வாய்ப்பு, வாழ்வாதாரம், கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க எந்த வகையிலும் உதவாது.

நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. ஆளும் அரசின் சாதனைபட்டியல் என்று ஒன்றை ஜோடித்து வாசிப்பதில் தான் அமைச்சர் உரையின் பெரும்பகுதி செலவழிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் கடந்த ஆண்டு ஒதுக்கீடுகளை விட வரும் ஆண்டுக்கான ஒதுக்கீடு உயரவில்லை. உதாரணமாக, வேளாண்துறைக்கு கடந்த ஆண்டு ரூ. 6,614 கோடி ரூபாய். வரும் ஆண்டு ரூ. 6,938 கோடி தான். நீர்வளத் துறைக்கு ரூ. 3,727 கோடியிலிருந்து ரூ. 3,674 கோடியாக குறைந்துள்ளது. உணவு மானியம் ரூ. 5,300 கோடியிலிருந்து 200 கோடி தான் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு ரூ. 9,348 கோடி. வரும் ஆண்டுக்கு ரூ. 9,467 கோடி. இதுவும் உண்மை அளவில் சரிவுதான்.

விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் இல்லை. நெல், கரும்பு உள்ளிட்டு கொள்முதல் விலைகள் அறிவிப்பு இல்லை. வெள்ள நிவாரணம் பற்றி குறிப்பிடும்படி எதுவும் இல்லை. மீனவர் பிரச்சினைக்கு உரிய கவனம் இல்லை. அறிவிப்புகள் மட்டும் மலிவாக அறிக்கையில் இடம் பெறுகின்றன. வேலை வாய்ப்பு பற்றி, சிறுகுறு தொழில் முனைவோர் பிரச்சினைகள் பற்றி, போராடிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர், ஆசிரியர் பிரச்சினைகள் பற்றி எல்லாம் எதுவும் இல்லை.

உயர்கல்விக்கு கடந்த ஆண்டு ரூ. 3, 697 கோடி. வரும் ஆண்டு ரூ. 3,821 கோடி தான். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் சரிவே.

மத்திய அரசின் தாராளமய கொள்கைகளை முழுமையாக பின்பற்றும் இந்த பட்ஜட் அஇஅதிமுக அரசு யார் பக்கம் என்பதை காட்டுகிறது. நிச்சயமாக மக்கள் பக்கம் இல்லை. உழைப்பாளி மக்களை தொழிலாளிகளை, விவசாயிகளை, சிறு-குறு உற்பத்தியாளர்களை, அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை புறக்கணிக்கும் பட்ஜட் இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கருதுகிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...