தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது – மக்கள் நலக் கூட்டணி

மதிமுக, சிபிஐ (எம்), சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி – மக்கள் நலக் கூட்டணிகூட்டறிக்கை

தமிழக அரசின் கரும்பு விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கிறது

இடுபொருட்களின் விலை உயர்வால் விவசாய உற்பத்தி செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ள சூழ்நிலையில் 9.5 சர்க்கரை சத்துள்ள ஒரு டன் கரும்புக்கு ரூ. 4,000/- விலை தீர்மானிக்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் கோரி வந்துள்ளன. ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. கரும்பு அரவைக் காலம் துவங்கி சில மாதங்கள் ஆன பிறகும் கரும்புக்கான விலையை அறிவிக்க தாமதப்படுத்திய அஇஅதிமுக அரசு இன்று போக்குவரத்து கட்டணம் உட்பட டன் ஒன்றுக்கு ரூ. 2,850/- என விலை அறிவிக்கப்பட்டுள்ளது. விலையை அறிவித்தது மட்டுமின்றி உண்மைகளை மூடி மறைக்கும் வகையில் கடந்தாண்டு விலையை விட ரூ. 550/- உயர்த்தி அறிவித்துள்ளதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது மட்டுமின்றி வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுகிற செயலாகும். கடந்தாண்டு மாநில அரசு அறிவித்த விலையான ஒரு டன்னுக்கு ரூ. 2,650/- என்ற நிலையில் தற்போது ரூ. 200/- மட்டுமே ஒரு டன்னுக்கு உயர்த்தி மாநில அரசு அறிவித்துள்ளதே உண்மையாகும்.

கரும்புக்கு விலை தீர்மானிக்கும் பிரச்சனையில் இதற்கு முன்பு மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் அரசோ, தற்போது உள்ள பாஜக அரசோ கட்டுப்படியான விலை தீர்மானிக்க மறுத்து வந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டன்னுக்கு மத்திய அரசினுடைய கூடுதல் விலையாக ரூ. 100/- மட்டுமே உயர்த்தி அறிவித்து வந்தன. மத்திய அரசின் விலையோடு மாநில அரசு தன்பங்கிற்கு கூடுதல் விலை அறிவிப்பது வழக்கமானதாகும். இந்த வகையில் கடந்த 2012-13ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன் மாநில அரசு கூடுதல் விலையாக டன்னுக்கு ரூ. 650/- அறிவித்தது. 2013-14, 2014-15 ஆகிய ஆண்டுகளில் மாநில அரசின் பரிந்துரை விலையை ரூ. 450/-ஆக குறைத்துவிட்டது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்ட விலை உயர்வினை தற்போது வழங்கியிருக்கிறார்கள் என்பது தான் உண்மையே தவிர, கூடுதல் விலை அறிவிப்பு ஏதும் இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதுமட்டுமின்றி மாநில அரசின் பரிந்துரை விலையை தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை ஆலைகள் கடந்த இரண்டாண்டுகளாக வழங்க மறுத்து வருகின்றனர். ஒரு டன்னுக்கு சராசரியாக ரூ. 350/- குறைத்து வழங்கி வந்துள்ளன. இதனால் மட்டும் தமிழகத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய கரும்பு பண பாக்கி ரூ. 1,500/- கோடிக்கும் அதிகமாகும். ஒவ்வொரு ஆண்டும் விலை அறிவிக்கிற தமிழக அரசு அந்த விலையை விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதற்கோ அல்லது அந்த விலையை கொடுக்க மறுக்கிற தனியார் ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவோ மறுத்து வருகிறது. பாக்கியை அளிக்க வேண்டுமென விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தியதும் அவைகளை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது அறிவித்திருக்கிற விலையையும் தனியார் முதலாளிகள் தருவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

அகில இந்திய அளவில் ஒரு டன் கரும்புக்கு உற்பத்திச் செலவு தமிழகத்தைப் பொறுத்தவரையில் ரூ. 2,900/- என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் ஒரு டன்னுக்கு ரூ. 4,000/- தீர்மானித்தால் மட்டுமே விவசாயிகள் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விட முடியும். எனவே இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள விலை அறிவிப்பு கரும்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமளிப்பதாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே தமிழக அரசு அறிவித்துள்ள கரும்பு விலையை மறுபரிசீலனை செய்து டன் ஒன்றுக்கு ரூ. 4,000/- உயர்த்தி வழங்கிட வேண்டுமெனவும், தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கித் தொகையினை வட்டியுடன் பெற்றுத் தர வேண்டுமெனவும் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

வைகோ பொதுச் செயலாளர், மதிமுக

ஜி. ராமகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், சிபிஐ (எம்)

இரா. முத்தரசன் மாநிலச் செயலாளர், சிபிஐ

தொல். திருமாவளவன் தலைவர், விசிக

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...