தமிழக அரசு அமைத்துள் திரு. சி. ரங்கராஜன் அவர்கள் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள்

பெறுதல்

            உயர்திரு. அரசு செயலாளர் அவர்கள்,

            நிதித்துறை, தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

வணக்கம்.

            தமிழக அரசு கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யவும், அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்

திரு. சி. ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிசீலனைக்கு எங்களது கட்சியின் சார்பில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆலோசனை குறிப்பினை அனுப்பி வைத்திருக்கிறோம்.

            கோவிட் 19 ஊரடங்கு காலத்தில் இதை உரிய நேரத்தில் அனுப்பி வைக்க இயலவில்லை என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். திரு. சி. ரங்கராஜன் அவர்களின் தலைமையிலான குழு இந்த ஆலோசனைகளை உரிய முறையில் பரிசீலிக்கும் என நம்புகிறோம்.

இங்ஙனம்,

தங்களன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

தமிழக அரசு அமைத்துள்ள ரங்கராஜன் குழுவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்

அளிக்கப்படும் ஆலோசனைகள்:

1.1       கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் தமிழக பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை வழங்குவதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. சி. ரங்கராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகப் பொருளாதாரத்தை மேம்படுத்தி ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் துன்பதுயரங்களை போக்குவதற்கு இந்த குழு பொருத்தமான ஆலோசனைகளை முன்வைக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது.

1.2       கோவிட் 19 தாக்கம் ஏற்படுவதற்கு முன்னரே, இந்திய பொருளாதாரம் நவீன தாராளமய கொள்கைகளின் காரணமாக, பெரும் சரிவை சந்தித்து வந்தது. பண மதிப்பிழப்பு,  ஜி.எஸ்.டி.  உள்ளிட்ட நடவடிக்கைகளால் வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சி குன்றி வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது .

1.3       இந்நிலையில் கோவிட் 19 பெருந்தொற்றும், அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத பொது முடக்கமும் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைத்து விட்டது.  நடப்பு நிதி ஆண்டில் (2020-2021) மொத்த உள்நாட்டு உற்பத்தி பூஜ்யத்திற்கும் கீழே சென்று, மைனஸ் 5 சதவிகிதம் ஆக இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

1.4       ஏப்ரல் மாதம் மட்டும் 12 கோடி பேர் வேலை இழந்ததாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவிக்கிறது. சிறு-குறு தொழில் நிறுவனங்களில்  பல அழிவின் விளிம்பில் உள்ளன.  பத்து கோடிக்கும் அதிகமான புலம் பெயர் தொழிலாளிகள் பட்ட துயரம் அனைவரின் மனதையும் உலுக்குவதாக இருந்தது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள், அனைத்து பகுதி தொழிலாளிகள், சிறு வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் என அத்தனை பேரின் வாழ்வாதாரமும் சீரழிந்து நிற்கிறது. பொருளாதார ஊக்குவிப்புத் தொகையாக ரூபாய் 20 லட்சம் கோடி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அது மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கிற திசை வழியில் இல்லை. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த கூடிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.

1.5       பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, கேந்திரமான துறைகளில் அந்நிய நேரடி மூலதனத்தை அதிகரிப்பது, பெட்ரோலிய பொருட்களின் மீதான வரி உயர்வு போன்ற நடவடிக்கைகள் வேலை இழப்பை ஏற்படுத்துவதோடு பொருளாதாரத்தை மேலும் நலிவடையச் செய்யும்.

1.6       கோவிட் 19  நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த பாதிப்பிற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல.

தமிழ்நாடு

1.7       கொரோனா நோய்த்தொற்று, மரணங்கள் எண்ணிக்கையில்  தமிழகம் நாட்டிலேயே நான்காவது இடத்தில் உள்ளது. 6 முறை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற இயலவில்லை.

1.8       இதனை எதிர்கொள்ள  பல்வேறு ஆலோசனைகளை குறிப்பாக, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கையகப்படுத்தி அங்கு கோவிட் சிகிச்சை அளிக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகளில் 25 சதமான இடங்கள் ஏழைகளுக்கு வழங்குவதை சிங்கிள் விண்டோ ஏற்பாட்டின் மூலமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்; நியாயமான மருத்துவ கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்; பரிசோதனை செய்வதை அதிகரிக்க வேண்டும்; தனியார் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை கூடங்களில் பரிசோதனைக்கான கட்டணத்தை  ஆயிரம் ரூபாயாக குறைத்து அதையும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைத்துவிட வேண்டும்; கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில்  ஈடுபடும் முன்வரிசை களப்பணியாளர்களை பாதுகாப்பதற்கான  உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; இவர்கள் தொற்றினால் மரணமடைந்தால்  50 லட்சம் ரூபாய் இழப்பீடு, அரசு வேலை  அளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

1.9       தமிழக அரசின் நிதிநிலைமை கோவிட் 19க்கு முன்னரே மிகுந்த நெருக்கடியில் இருந்தது. மத்திய அரசின் பங்களிப்பும் திருப்திகரமாக இல்லை. 2019-20ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறை ரூ. 14,314.76 கோடியிலிருந்து திருத்த மதிப்பீடுகளின் படி ரூ. 25,071.63 கோடியாக, ஏறக்குறைய 80 சதவீதம் அதிகரித்துள்ளது.

1.10     இந்த பின்னணியில் 2020-21ம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்ட மதிப்பீட்டுக்கும் நடைமுறைக்கும் மிகப்பெரும்  இடைவெளியே ஏற்படும். கடன் சுமை உயரும். எனவே தமிழக பொருளாதார நிலைமை கவலைக்கிடமாகவே தொடரும் அபாயம் உள்ளது.

1.11     இவ்வருடம் ஏப்ரல் இறுதியில் வேலையின்மை விகிதாச்சாரத்தில் 50 சதவிகிதத்தோடு தமிழகமே முதலிடத்தில் நிற்கிறது. மே இறுதியில் இது 33 சதவீதமாக குறைந்தாலும் தேசிய சராசரியை விட அதிகம் என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் கூறுகிறது.

1.12     பெண்கள், குழந்தைகள், தலித் மக்கள், பழங்குடி இனத்தவர் சந்திக்கும் பிரச்சனைகளும், அவர்கள் மீதான வன்முறையும்  அதிகரித்து வருகின்றன.

1.13     வேலையிழந்து, வருமானமிழந்து, வாழ்வை இழந்து வாடும் தமிழக மக்களுடைய தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு  போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. தேவையான நிதியை மத்திய அரசிடம் வாதாடி பெறுவதற்கு கூடுதல் அழுத்தம் தேவைப்படுகிறது. இன்றைய நெருக்கடியை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சிகள், நிபுணர்களின் ஆலோசனையை பெற தமிழக அரசு முன்வர வேண்டும்.

1.14     கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், விவசாயம், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாப்பதற்கும் கூடுதலான நிதி மற்றும் திட்டமிடல் வேண்டுமென்பதை கோவிட் 19-ன் படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.15     இந்த பின்னணியில் தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்கவும் கீழ்க்கண்ட ஆலோசனைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கிறது:

2. பரிந்துரைகள்

2.1       நெருக்கடியான இக்காலகட்டத்தில் நிதி மேலாண்மையை வழக்கமாக செய்வதுபோல்  செய்ய முடியாது. பொருத்தமான முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. கோவிட் 19 சம்பந்தப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ பணிகள், பொருளாதார பாதிப்பை ஈடுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வேலைவாய்ப்புகள், நிவாரணம், பொது விநியோக முறை,  கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பணிகளுக்கு டெண்டர் விடுவது உள்ளிட்ட இதர நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். இதர வகை செலவினங்களையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

பொது விநியோக முறை

2.2       கோவிட் 19 நோய்த் தொற்று மற்றும் திட்டமிடப்படாத பொதுக முடக்கத்தால் மக்கள் வேலையும், வருமானமும் இழந்து தவிக்கும் சூழலில் வருமான வரிக்கு உட்படாத பகுதியினருக்கு, குடும்பம் ஒன்றுக்கு மாதம் ரூ. 7500/- ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும். அதேபோல ஜூலை மாதம் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு (NPHH) அதிகபட்சம் 20 கிலோ அரிசி தான் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை மாற்றி, ஏற்கனவே, தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வழங்கியது போல்  குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப, நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி தொடர்ந்து வழங்க வேண்டும். அதே போல், மத்திய அரசு அறிவித்துள்ள நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு போன்றவற்றோடு இதர அத்தியாவசியப் பொருட்களையும் விலையில்லாமல் 2020 டிசம்பர்  மாதம் வரை வழங்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைப்பது:

2.3       கொரோனா தொற்று நெருக்கடிகளை பயன்படுத்தி பெரும் லாபம் பெறுவதற்காக வேண்டுமென்றே விலைகளை உயர்த்துகிற போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும். பொருட்களை பதுக்குவது, செயற்கை பற்றாக்குறையை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான சமயங்களில் மலிவு விலையில் காய்கறிகள் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு, வேளாண் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விதத்தில்  இக்காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.

2.4       உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் பயன்களை இந்திய நாட்டு மக்கள் பெற முடியாமல் மத்திய, மாநில அரசுகள் வரிகள் போட்டு, விலை உயர்வை அமலாக்கி வருகின்றன. எனவே, வரிகளை குறைத்து பெட்ரோல் – டீசல் விலைகளை குறைக்க வேண்டும்.

விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி :

2.5       கோவிட் 19 காலத்தில் அழிந்து போன நெல், பழங்கள், காய் கறிகள், மலர் சாகுபடிகள், வெற்றிலை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவற்றுக்கான இழப்பீட்டை  விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் விதை மற்றும் தேவையான உரங்கள் வழங்கப்பட வேண்டும். ஒருமுறை கடன் ரத்து என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்க வேண்டும். 

2.6       மகளிர் சுய உதவிக்குழுக்கள்,  விவசாயத் தொழிலாளிகள், சுயதொழில் செய்வோர் போன்ற எளிய பகுதியினர் பெற்றுள்ள அனைத்து கடன்களுக்கான  வசூலை ஓராண்டு காலம் தள்ளி வைக்கவும், இக்காலத்திற்கான வட்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் ரிசர்வ் வங்கியை கோர வேண்டும். கடன் தவணை கட்டுவதற்கு வற்புறுத்தக் கூடிய நிறுவனங்கள் மீது (நுண் நிதி நிறுவனங்கள் உட்பட) சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

2.7       சிறு-குறு நடுத்தர விவசாயிகளை மையமாக கொண்ட வேளாண் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். இவர்களுக்கு மானியங்கள், கடன் வசதி, பயிர் காப்பீடு திட்டம், இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் அரசுடமை வங்கிகளில் வேளாண் பணிகளுக்கு 4 சதவிகிதம் வட்டியில் கடன் வழங்கிட வேண்டும்.

2.8       தமிழகத்தில்  சராசரியாக 45 சதமான நிலங்கள் பாசன வசதியின்றி உள்ள நிலையில்,  மழைநீரைத் தேக்குவது, மாநிலத்தில் உள்ள நதிகளை இணைத்து கடலில் கலக்கும் நீரை பாசனத்திற்கு திருப்பிவிடுவது, ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை தூர்வாரி முழுமையாக பராமரிப்பு செய்வது போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இது பாசனப் பகுதியை விரிவுப்படுத்திட, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட,  நிலத்தடி நீரை மாசுபடாமல் தடுத்திட, கிராமப்புற வேலை வாய்ப்புகளை பெருக்கிட பயன்படும்.

2.9       விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் அழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் மக்கள் போராட்டங்களினால் ரத்து செய்யப்பட்டாலும், 8 வழிச்சாலைகள், ஐ.டி.பி.எல். பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி போன்றவை தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றன. ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உணவு பாதுகாப்புக்கும் இடையிலுள்ள சமன்பாடு பாதுகாக்கப்படுவதோடு, கார்ப்பரேட்டுகளின் லாபத்தை நோக்கமாக வைத்து விவசாயத்தை அழிக்கும்  அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டும்.

2.10     விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் நியாய  விலை தீர்மானிக்க வேண்டும். நெல் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை அரசே முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.

2.11     காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களைப் பதப்படுத்தி பாதுகாக்க பஞ்சாயத்து யூனியன் மட்டங்களில்  குளிர் பதன நிலையங்கள் அமைத்திட வேண்டும்.

2.12     கிராமப்புறங்களில் நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தி, நிலமற்ற ஏழைகளுக்கு நில விநியோகம் செய்திட வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து சமய நிறுவனங்கள், வக்பு வாரியம், அறக்கட்டளைகள், மடங்களுக்கு சொந்தமான நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிலங்களை சொந்தமாக்க வேண்டும். நில விநியோகத்தின் மூலம் மட்டுமே கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும்.

2.13     கிராமப்புற மக்களுக்கு  வேலை வாய்ப்பை அதிகரிக்க மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவதோடு, நாளொன்றுக்கு ரூ. 600/-சம்பளம் தீர்மானிப்பது, கோருகிற அனைவருக்கும் வேலை அட்டையும், வேலையும் வழங்குவது, சட்டக் கூலியை முழுமையாக அளிப்பது  போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

2.14     தமிழகத்தில் உள்ள 526 பேரூராட்சிகளில்  பெரும்பகுதி கிராமப்புற பேரூராட்சிகளாகும். இவற்றை ஊராட்சிகளாக மாற்றிடுவது அல்லது இந்த பேரூராட்சிகளுக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

2.15     விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகவும்,  நுகர்வு  பொருட்களாகவும் மாற்றிட வேளாண் சார் சிறு தொழிற் சாலைகளை கிராமங்களில் அமைத்திட வேண்டும். இதற்கு ஏதுவாக அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை கிராமப்புற விவசாயிகள் மற்றும் இளைஞர்கள்/ இளம் பெண்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் பதப்படுத்தப்பட்ட இத்தகைய  பொருட்களை விவசாயிகள் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

2.16     வேளாண் விரிவாக்கப்பணி அமைப்பு வலுப்படுத்தப்பட்டு, காலிப்பணியிடங்கள் உடனடியாக முறைப்படி நிரப்பப்படவேண்டும். வேளாண் ஆராய்ச்சிப்பணிகளுக்கும் இது பொருந்தும்.

2.17     விவசாயத்திற்கு தினசரி 14 மணி நேர மும்முனை மின்சாரம், விண்ணப்பித்த அனைவருக்கும் மின் இணைப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதோடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச மின்சார திட்டத்தையும் பாதுகாக்க வேண்டும்.

2.18     கிராமப்புற மக்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நகர்ப்புறங்களை நோக்கிச் செல்லும் நிலைமை உள்ளது. இதனை தவிர்த்திட நகர்ப்புறங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமப்புறங்களில் கிடைப்பதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொலைபேசி, வலைதள கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட கிராமப்புற கட்டமைப்புகளை அமைத்திட வேண்டும்.

மீன்பிடி தொழிலாளர்கள்:

2.19     நீண்ட கடலோரப் பகுதிகளை கொண்டிருக்கும் தமிழகத்தில்    கடந்த நான்கு மாத காலமாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.  பிடித்து வரும் மீன்களை வெளிமார்க்கெட்டுக்கு கொண்டு செல்லவும், வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும் இயலாத நிலை உள்ளது. மேலும் உள்நாட்டு மீனவர்கள், மீன் விற்பனை செய்யும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரணங்களை தொடர்ந்து வழங்கிட வேண்டும்.

தொழில் வளம்:

2.20     அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திட வேண்டும். தொழிற்சாலைகளை துவக்கும் போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்நிய மூலதனம் சார்ந்த தொழிற்சாலைகள், தொழிலாளர் நலச் சட்டங்கள் மற்றும் சுற்றுச் சூழல் விதிகளுக்குட்பட்டு செயல்படும் விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நலிவுற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலைகள்,  நூற்பாலைகள் உள்ளிட்ட  பொதுத்துறை தொழிற்சாலைகளை சீரமைக்க வேண்டும்.

சிறு-குறு தொழில்கள்

2.21     சிறு-குறு தொழில்துறையில் (MSME)  தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இத்துறை தமிழக உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சுமார் 40 சதவிகிதம் பங்களிப்பு செலுத்துகிறது. இத்துறையை பாதுகாக்க அரசு தேவையான உதவிகளை  மேற்கொள்ள வேண்டும்.

2.22     பாதிப்பில் இருந்து தொழிலை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களுக்கு ஊதியம் அளிக்கவும் குறுந்தொழிலுக்கு 5 இலட்சம் வரையிலும், சிறு தொழில் நிறுவனத்திற்கு 15 இலட்சம் வரையிலும் 60 மாத தவணைகளில் திருப்பி செலுத்த கூடிய விதத்தில் கடன் வழங்க வேண்டும். ஒரு வருடத்திற்கு வட்டி விதிக்கக்கூடாது.

2.23     நடுத்தர நிறுவனங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் நடந்த சராசரி ஆண்டு விற்பனை மதிப்பு (TURNOVER) அடிப்படையில் மேற்கூறியவாறு கடன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

2.24     அடுத்து வரும் காலங்களில் சில குறிப்பிட்ட துறைகளுக்கு  முக்கியத்துவம் தருவதன் மூலம், உற்பத்தியையும், ஜி.டி.பியையும் மேம்படுத்த முடியும். விவசாயம், ஜவுளி ஆகியவை கிராம மற்றும் சிறு நகரங்களில் பொருளாதார ஊக்குவிப்பிற்கு பங்களிப்பு செய்யும்.

2.25     பெரு நிறுவனங்களின் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிட்டி நிதி, முழுமையாக, கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தமிழக பொருளாதாரம் மீள்வதற்கு பயன்பட அரசுக்கு கிடைக்க வேண்டும்.

2.26     கூட்டுறவு அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் இதுபோன்ற நெருக்கடிகளை எதிர் கொள்ள முடியும். முகக்கவசம், சானிட்டைசர், பினாயில் தயாரிப்பில்  அனைத்து மட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குறிப்பிட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளை உள்ளடக்கி,  கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

2.27     மிகச் சிறிய உற்பத்தி மையங்கள் 4 அல்லது 5 பேர் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு  கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. வேலை கிடைக்காத இளைஞர்களை, இளம்பெண்களை மற்றும் சுய உதவி குழுக்களை இவற்றில் ஈடுபடுத்தும் வகையில்  ஆய்வு மேற்கொள்வதும், ஒர்க்கிங் பார்ட்னர் என்ற முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு இளைஞர்கள்/ இளம் பெண்களை பயன்படுத்துவதும் அவசியம்.

2.28     சிறு-குறு நிறுவனங்கள் 18 சதவிகிதம் முதல் 24 சதவிகிதம் வரை ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டியுள்ளதால் தொழில் நடத்த முடியாமல் திணறுகின்றன. எனவே, இவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரி ஏற்கனவே இருந்ததைப் போல 5 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும்.

2.29     சிறு-குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் working capital மற்றும் fixed capital தேவைகளுக்கு கடன் வசதிகள் செய்து கொடுத்திட வேண்டும்.

2.30     நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அதன் பகுதியாக இந்நிறுவனங்களுக்கு wage subsidy அளிக்கலாம்.

சுற்றுச்சூழல்:

2.31     தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  தூத்துக்குடி ஸ்டெர்லைட்  காப்பர்,  மேற்கு மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகள், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகள், கடலூர் சிப்காட் ரசாயன ஆலைகள் உள்ளிட்டவற்றை உதாரணமாக கூற முடியும்.  நிலத்தடி நீர், விவசாயம், ஆரோக்கியம் உட்பட பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  சுற்றுச் சூழல் விதிகளை கறாராக அமல்படுத்த வேண்டும். விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாநில அரசிற்கு வளங்களை திரட்டல்:

2.32     பல ஆண்டுகளாக மாநிலங்களின் நிதிசார் ஆதாரங்கள் மத்திய அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. மத்திய, மாநில நிதி உறவுகளில் அதிகாரங்களை பரவலாக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியம். இப்பிரச்சனையில் உடன்படும் மாநிலங்களுடன் இணைந்து தமிழக அரசு இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும்.

2.33     மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி மற்றும் நிதி நிலுவையினை விரைவில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2.34     ஜி.எஸ்.டி அமைப்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். மாநிலங்களுக்குச் சாதகமாக மாற்றப்படவேண்டும்.

2.35     தமிழகத்தில் கிரானைட், கார்பைட், சுண்ணாம்புக்கல், மணல், தாது மணல், மைக்கா உள்ளிட்ட பல கனிம வளங்கள் உள்ளன. சமீப காலமாக மாநிலம் முழுவதும் சுரங்கத் தொழில் முடங்கிப் போயுள்ளது. தாது மணல் எடுப்பதும் நின்றுள்ளது. டாமின் நிறுவனம் செயல்படாமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. கனிம வளங்களை முறைப்படுத்தி ஊழல் – முறைகேடுகள் இல்லாமல் அரசு நிர்வகிப்பதன் மூலம் பல லட்சம் கோடி அரசுக்கு வருமானம் வர வாய்ப்புள்ளது. உதாரணமாக,  திரு. உ. சகாயம் ஐ.ஏ.எஸ்.  தலைமையிலான குழு, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளில்  மதுரை மாவட்டத்தில் மட்டும்  கனிம வளங்களை வெட்டி விற்பனை செய்யும் உரிமத்தை தனியாருக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு ரூ. 1.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில், தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் இது ஒரு பெரும் தொகையாக இருக்கும்.

எனவே,

அ.   சகாயம் குழு அறிக்கையின் ஆலோசனைகளை பரிசீலித்து அமல்படுத்த வேண்டும்.

ஆ.   கனிம வளங்கள் மீது விதிக்கப்படும் அரசின் உரிம கட்டணத்தை உயர்த்தி தீர்மானிக்க வேண்டும்.

இ.   Major Minerals-களுக்கு தீர்மானிக்கப்படும் ராயல்டி தொகையினை உயர்த்தி தீர்மானிக்க வேண்டும்.

ஈ.   தாது மணல் எடுப்பதை மணவாளக்குறிச்சியில் உள்ள இந்தியன் ரேரஸ்ட் லிமிட்டெட் நிறுவனமும், டாமின் நிறுவனமும் இணைந்து  செயல்படுத்த வேண்டும்.

உ.   தமிழகத்தில் மணல் வியாபாரத்தில் அளவு கடந்த முறைகேடுகள் நடைபெறுகின்றன. சட்டவிரோதமாக செயல்படுத்தப்படும் மணல் குவாரிகள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்  மணல் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.   அதே சமயம், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், செகன்ட் சேல்ஸ் மற்றும் லோடிங் காண்ட்ராக்ட் மூலம் நடத்தும் முறைகேடுகள் நடக்கின்றன. எனவே, பொதுப்பணித்துறையே நுகர்வோருக்கு நேரடியாக மணல் விற்பனை செய்தால்  முறைகேடுகளை தடுக்க முடியும், அரசாங்கத்திற்கு வருவாயைப் பெருக்கவும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்கச் செய்யவும் முடியும்.

2.36     கடன் மாற்று (Debt Swap) திட்டம்: நீண்ட கால பொது செலவு மேலாண்மையின் பகுதியாக, நிபுணர்களின் உதவியுடன் உயர் வட்டி விகிதத்தில் கடந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன்களை சமகாலத்தில் குறைந்துள்ள வட்டிவிகிதத்திலான கடன் களுக்கு மாற்றிக்கொள்ள திட்டம் வகுக்கலாம்.. இத்தகைய திட்டங்கள் மத்திய அரசால் 2002-2005 காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

2.37     சாராய விற்பனை வரியை அல்லது கலால் வரியை உயர்த்தலாம். இது குடிப்பழக்கத்தை குறைக்க உதவும். அரசுக்கும் அதிக வரி வருவாய் தரும்.

2.38•    பல பத்தாண்டுகளாக உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசிடம் ஏராளமான சலுகைகளை பெற்று செயல்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் இந்நிறுவனங்களினால் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு தொழில் பயிற்சி போன்ற அம்சங்களில் எத்தகைய பலன்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. சலுகைகளால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவு என்ற வகையில் ஒரு வெள்ளை அறிக்கை (சமூக லாப நஷ்ட கணக்கு) அவசியம். அதன் அடிப்படையில் அவர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் குத்தகை தொகை உயர்த்தப்படவேண்டும், இதர சலுகைகளும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

கீழ்க்கண்ட அம்சங்களை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்:

*          வெளி நாடுவாழ் இந்திய உழைப்பாளி மக்கள் நமது நாட்டுக்கு அனுப்புகிற கணிசமான அந்நியச் செலாவணியில் தமிழ் நாட்டிலிருந்து சென்றுள்ள உழைப்பாளிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு பட்டியலின் ஷரத்துக்கள் 28 மற்றும் 81-படி இந்தியா திரும்பும்  வெளிநாடு வாழ் இந்திய புலம்பெயர் தொழிலாளிகளின் நலன் காப்பது  – அவர்களது பயணச்செலவு, அவர்கள் தனிமைப்படுத்தப்படும் கால பராமரிப்பு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை  ஆகியவை மத்திய அரசின் பொறுப்பு. ஒன்று, மத்திய அரசு இப்பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் அல்லது மாநிலங்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் செலவை ஏற்றுக்கொண்டு மாநிலங்களுக்கு போதுமான நிதி தரவேண்டும்.

*•         மாநிலங்களின் ஃபிஸ்கல் பற்றாக்குறை வரம்புகள் உயர்த்தப்படவேண்டும். வரும் மூன்று ஆண்டுகளுக்கு FRBM வரம்புகள் அமலாக்கப்படக்கூடாது. குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசு, மாநிலங்களுக்கு கடன் வழங்க வேண்டும்.

*•         பெரும் தொற்று அனைத்து நிதி நிலைமைகளையும் மாற்றியுள்ள பின்னணியில், 15 ஆவது நிதி ஆணையத்திற்கு ஏற்கனவே மாநில அரசுகள் சமர்ப்பித்திருந்ததை திரும்ப பெற்றுக்கொண்டு, உரிய திருத்தப்பட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சுகாதாரம் மருத்துவம் கல்வி:

2.39  கல்வித் துறையும் மருத்துவத் துறையும் வேகமாக தனியார் மயமாகி சேவை என்ற குணாம்சத்தில் இருந்து மாறி லாபம் கொழிக்கும் தொழில்கள் ஆகியுள்ளன. அரசு சமூகக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதன் மூலம் கல்விக்கட்டணம், மருத்துவ கட்டணத்தை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடியும். 25 சதவிகித ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக இடம் தர முடியும்.

2.40     கல்வி, சுகாதாரம், சாதாரண மக்களுக்கான கட்டமைப்பு ஆகிய துறைகளில் மிக கணிசமான அரசு முதலீடுகள் தேவை. கொரோனா தொற்றின் துயரங்கள் கற்றுக்கொடுக்கும் ஒரு முக்கிய படிப்பினை, மக்களுக்கான சுகாதார பாதுகாப்பு, பொதுத் துறை மூலம் தான் சாத்தியம் என்பதாகும். நோய் தடுப்பு நடவடிக்கைகளும் சிகிச்சை சார் நடவடிக்கைகளும் அரசால் பன்மடங்கு அதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான வளங்களை மிகப்பெரும் செல்வந்தர்களிடம் இருந்து வரவேண்டிய வரிகளை சரியாக வசூல் செய்வதன் மூலமும், அவர்கள் மீது மத்திய அரசு செல்வ வரி, வாரிசுரிமை வரி  போன்றவற்றை கூடுதலாக  விதிப்பதன் மூலமும் சேகரிக்க முடியும்.

2.41     அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக தொடக்க நிலை மற்றும் அடுத்த நிலை பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகும்.  பொது சுகாதார அமைப்புக்கான முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

2.42     மருத்துவத்துறையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். இத்துறையில் ஒப்பந்தமுறை, தொகுப்பூதிய முறையை ரத்து செய்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். உயிர்காக்கும் இத்துறைக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள், மருத்துவ கருவிகள், கட்டமைப்பு வசதிகளை உயர்த்திட கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும்.

2.43     ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்கள் 2011-12 கணக்கு படி 11,500 பேருக்கு ஒன்று என இருப்பதாக தெரிகிறது. குறைந்தபட்சம் 5,000க்கு ஒன்று என்ற விகிதாச்சாரத்தில்  உருவாக்குவதும், மருத்துவர் மற்றும் ஊழியர்களை உத்தரவாதப்படுத்துவதும் அவசியம்.

2.44     மருத்துவ சேவையில் அதிகார பரவல் உறுதி செய்யப்படவேண்டும். பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்த பிரிவினருக்கு மருத்துவ காப்பீடு மிகவும் ஆதாரமானது. அதனை மேம்படுத்த வேண்டும்

2.45     களப்பணியாளர்களின் உடல் நல பாதுகாப்பினை திட்டமிட்டு உறுதிப்படுத்துவது  மிகவும் முக்கியமானது. பேரிடரை எதிர்கொண்டு களப்பணியில் கடுமையான உழைப்பை நல்கும் ஆஷா திட்டப்பணி ஊழியர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்பட வேண்டும்.

2.46     பள்ளிகள் தொடர்ந்து செயல்படாத காரணத்தால் சுமார் 65 லட்சம் குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து பாதிப்பு ஏற்படும் நிலைமை உள்ளது. பொது முடக்க  விதிகளுக்கு உட்பட்டு,  சமைத்த உணவினை குழந்தைகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2.47     பள்ளிகள், கல்லூரிகள் திறந்து செயல்படுவது, இன்னும் சில மாதங்களுக்கு கடினமாகவே இருக்கும். எனவே காலாண்டு தேர்வு நடைபெறும் செப்டம்பர் வரையிலான வகுப்புகளை, தொலைக்காட்சி மூலம் நேரம் தீர்மானித்து, நடத்துவது. அரசு தொலைக்காட்சியை அதற்கு பயன்படுத்துவது, தனியார் பள்ளிகள் இந்த மூன்று மாத காலத்திற்கு கட்டணம் வசூலிப்பதை முற்றாக தடுப்பது. கிராமங்களில், குடியிருப்புகளில் இருக்கும் ஆசிரியர் விவரங்களை கணக்கெடுத்து அவரவர் குடியிருப்பில் குழந்தைகள் படிப்பதை கண்காணிப்பது மற்றும் கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

2.48     அரசு கட்டிடங்கள், அரசு பள்ளிகள், சத்துணவு கூடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள் அனைத்தையும் இக்காலத்தில் மராமத்து செய்ய தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தை பயன்படுத்துவது, நகரங்களிலும், மாநகரங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை இத்தகைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது போன்றவை செய்யப்படவேண்டும்.

புலம் மீள் பெயர்வு (Reverse Migration):

2.49     தமிழகத்திலிருந்து  புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்ற பல்லாயிரக்கணக்கானோர், கொரோனா தொற்று மற்றும் பொது முடக்கத்தால் அந்நாடுகளில் வேலை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும்.

2.50     தங்கள் சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களது திறன் மதிப்பீடு, கிராமப்புற, பிராந்திய பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் மிகப் பெரிய வாய்ப்பை உருவாக்குகிறது. அவர்களுக்கு வங்கிக் கடன்  உள்ளிட்ட தேவையான உதவிகளையும், பயிற்சிகளையும் உறுதி செய்து, கிராமப்புற அளவில் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்திக்  குறுந்தொழில்கள் அல்லது புதிய  தொழில்கள் தொடங்கவும் அரசு ஊக்குவிக்க வேண்டும்.

2.51     உள்ளூரில் நிலவும் சாதி மத வேறுபாடுகளை கடந்து உகந்த சூழலை இவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும். அவர்களுக்கு உள்ளூர் செல்வாதாரங்களை அடையாளப்படுத்தி உதவும் வகையில் ஊராட்சி மட்டத்தில்  அதிகாரப்பரவலை உறுதி செய்யவேண்டும்.

2.52     உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்தவும், அதைத் தொடர்ந்து கண்காணிக்கவுமான ஓர் அமைப்பு உள்ளூர் அளவில் உறுதி செய்யப்படவேண்டும்.

2.53     நகர்ப்புறம் சார்ந்த வேலைகளைக் குறைத்து கிராமப்புற பொருளாதாரம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவேண்டும்.

2.54     புலம் மீள் பெயர்வு தொழிலாளர்களுக்கு உதவ, பஞ்சாயத்து அளவில் உள்ள சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் போன்றவற்றின் உதவிகளையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நகர்ப்புற குடிசைப் பகுதிகள் :

2.55     நகர்ப்புறங்களில் மக்கள் தொகையின் அடர்த்தி சவாலான பிரச்சனையாக உள்ளது. அதனை மட்டுப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். நகர்ப்புற வீட்டு வசதி, பாதுகாக்கப்ப்டட குடிநீர் தேவைகள், சுகாதார அமைப்புகள் போன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.

2.56     எவ்விதமான அடிப்படை வசதியோ, தனித்தனி அறைகளோ அற்ற நகர்ப்புற குடிசைகளில் தான் மிக அதிகமான ஏழை மக்கள் வசிக்கின்றனர் என்பதால் அவர்களால் இடைவெளி விட்டு வாழ்தல் என்பது சாத்தியமற்றது. எனவே, ஒரு போர்க்கால அவசரத்துடன், தூய்மையான வாழ்விடம், ஆரோக்கியம் மற்றும்  உளவியல் மேம்பாடு ஆகியவை அரசால் உறுதி செய்யப்பட்டு அம்மக்களை பாதுகாக்கவேண்டும்

2.57     நீண்ட காலத் திட்டம் என்கிற வகையில், நகர்ப்புற ஏழை மக்களுக்கு நிரந்தர வருவாய், பொது சுகாதார பாதுகாப்பு இரண்டையும் உறுதி செய்ய வேண்டும்.

அணி திரட்டப்படாத தொழில் மற்றும் சேவைத்துறை தொழிலாளர்கள் :

2.58     தனியார் துறை தொழிலாளரது ஊதிய பாதுகாப்பு, வேலை பாதுகாப்பினை அரசு உத்தரவாதப்படுத்த  வேண்டும்.

2.59     வேலை இழந்தோருக்கு, அரசு குறுகிய கால நிதி உதவி மற்றும் உளவியல் ரீதியிலான நிவாரண உதவிகள் செய்ய வேண்டும்.

2.60     இது குறித்து எழும் பிரச்சனைகளை தொழிற்சங்கங்கள், அரசின் தொழிலாளர் நலத்துறை, நிறுவன பிரதிநிதிகள் மட்டத்தில் கலந்து பேச வேண்டும்.

3.1       சிறு வியாபாரிகள் / நடைபாதை வியாபாரிகள் போன்றவர்களின் விற்பனை செயல்பாடுகளுக்கு கடன் உதவி செய்வதோடு காவல்துறை/ மாநகராட்சி போன்றவற்றால் இடர்ப்பாடு ஏற்படா வண்ணம் அரசு வழிகாட்ட வேண்டும்.

3.2       பொது முடக்க காலத்தில் பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரிக்கும் சூழலில், பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை மாற்ற வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட இருப்பிட வசதிகளுக்கான  நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை பிரச்சினைகளில் தலையீடு செய்யக்கூடிய ஆணையங்களுக்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டும். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட தேசிய சட்டங்களை முறையாக அமல்படுத்துவதற்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டும்.

3.3       மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாக்க கூடிய தேசிய சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மிகுந்த இடர்பாடுகளோடும், பாகுபாடுகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு கொரோனா பெரும் தொற்று காலத்தில் கூடுதல் நிவாரணங்களும், உதவிகளும் அளித்திட வேண்டும்.

3.4       அளிக்கப்படும் நிவாரணங்களும், வேலைவாய்ப்புகளும் கடைக்கோடி கிராமங்களுக்கும், தலித், பழங்குடியினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூக பகுதியினருக்கும் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும்.

3.5       டாஸ்மாக், பொதுப்போக்குவரத்து, பேருந்துகள் இயக்கம், ரயில் போக்குவரத்து ஆகியவை தற்போது  நோய் தொற்று குறித்த விஷயத்தில் ஆபத்து உள்ளவை தான். அதே போல் வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் அமைப்புகள் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் இயங்க வேண்டும். தற்போது உள்ள 50 சதவிகித தொழிலாளர்களுடன் ஆலைகள் செயல்படுவது என்பதை நீடிப்பது, பின்னர் படிப்படியாக உயர்த்தும் நடவடிக்கையே சரியானது. 200க்கும் மேல் வேலை செய்பவர்கள் உள்ள தனியார் ஆலைகளை தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பது. அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை செயல்படுத்த  தொழிற்சங்கமும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். பொதுப்போக்குவரத்து துறைகளிலும் இதை அரசு முன்னின்று செய்வது பலனளிக்கும்.

3.6       ஜவுளி, பனியன் தயாரிப்பு ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருந்த  புலம் பெயர் தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர் திரும்பிய நிலையில், அந்த இடத்தில் நியாயமான சம்பளம் வழங்கி வேலையற்ற இளைஞர்களை ஈடுபடுத்த முடியும். அதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

3.7       வேளாண் துறை, தொழில்துறை மற்றும் பொதுவான பொருளாதாரம்  தொடர்பாக மத்திய அரசு முன்வைத்துள்ள தீவிர நவீன தாராளமய கொள்கைகளை மாநில அரசு உறுதியாக எதிர்க்க வேண்டும். இவை மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பதாகவும் உள்ளன.

3.8       பொது சுகாதார நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள இந்த நிலையில் மத்திய  அரசிடமிருந்து தேவையான நிதியை போராடி பெறுவதும், மாநில அரசு தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்வதும், மக்களின் வாழ்வாதாரத்தை ஓரளவு பாதுகாக்க உதவும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நன்றி!

இங்ஙனம்,

தங்களன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழ்நாடு மாநிலக்குழு

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...