தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணத்திற்கு வரவேற்பு! விவசாயத் தொழிலாளர்களுக்கும் வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

மாநிலம் முழுவதையும் வறட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டுமென்று விவசாய சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் முற்றுகைப் போராட்டம் உட்பட பல்வேறு இயக்கங்களை நடத்தியதையொட்டி, சென்னை நீங்கலாக இதர 31 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாகவும் அதேபோல், 50 விழுக்காட்டிற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்கும் என்றும் இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. 
 
வறட்சி காரணமாக 19 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், 9 பேருக்கு மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட இதர விவசாயிகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணி வரம்பு என்பது 150 நாட்களாக  உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. குறுவை சாகுபடி பொய்த்துப்போய், சம்பா சாகுபடியும் கருகிப்போன நிலையில் வேலையில்லாமல் வறுமையில் வாடும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
 
தமிழகம் கடுமையாக வறட்சியால் பாதிக்கப்பட்ட போதும் இதுவரை எந்தவித நிவாரணத்தையும் அளிக்காத மத்திய அரசு, தமிழக அரசின் வறட்சி நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு  வலியுறுத்துகிறது. 

 

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...

Leave a Reply