தமிழக அரசே, ஒப்பந்த பணிகளுக்கு அவசரமாக டெண்டர் விடும் ஏற்பாட்டை ரத்து செய்!

இருக்கும் நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்து – ஆசிரியர் அரசு ஊழியர் உரிமைகள் மீது கை வைக்காதே!

உலகமே கொரோனா தாக்கத்தால் ஸ்தம்பித்து நிற்கும்போது, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கு டெண்டர் விடும் ஏற்பாட்டை தமிழக அரசு மே மாதம் செய்ய உள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.5000 கோடிக்கு மேல், பொதுப்பணித்துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் பெறுமானமுள்ள பணிகள் இதில் உள்ளடங்கும்.

இந்தப் பணிகள் அனைத்தும் கொரோனா தாக்கத்திற்கு முன் சாதாரண காலத்தில் திட்டமிடப்பட்டவை. தற்போது மாறியுள்ள சூழலில் இந்தத் திட்டங்கள் தேவைதானா என்பதை முறையாக அரசு பரிசீலித்ததாக தெரியவில்லை. மேலும் நிதிநிலை அறிக்கையில் இவற்றுக்கான நிதி, சில வருவாய்கள் வரும் என்கிற அனுமானத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கலாம்.

ஆனால் இந்த காலகட்டத்தில் அரசுக்கான வருவாய் பல்வேறு விதங்களில் வராமல் போயிருக்கவோ அல்லது குறைந்திருக்கவோ வாய்ப்புள்ளது. எனவே, இருக்கக்கூடிய நிதியை அல்லது வாங்கப்போகும் கடனை எத்தகைய செலவினங்களுக்கு பயன்படுத்துவது என்கிற முன்னுரிமை பார்வையோடு அரசு தனது நகர்வுகளை செய்திருக்க வேண்டும்.

இவற்றில் பெரும்பாலான பணிகள் உழைப்பு சார்ந்தவை அல்ல, முதலீடு சார்ந்தவை. பெரும் இயந்திரங்களைக் கொண்டு செய்யப்பட வேண்டியவை. எனவே, இதில் கிடைக்கும் வேலை வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இந்த டெண்டர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கே பலன் கிடைக்கும்.

அப்படியானால் அவசர அவசரமாக டெண்டர் விடும் ஏற்பாடு துவக்கப்படுவதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்கிற ஐயப்பாடு மக்கள் மத்தியில் எழுகிறது. வழக்கமான ஊழல் முறைகேடுகளே கண்முன் வந்து நிற்கிறது.

ஒருபுறம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு போதுமான நிதி இல்லை என்று தமிழக அரசு கூறுகிறது. அவசரமற்ற டெண்டர் பணிகளை நிறுத்தி வைத்து அந்த நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு பயன்படுத்த முடியும்.

மத்திய அரசோடு வாதாடி நிவாரண நிதியையும் நிலுவைத் தொகைகளையும் பெற முடியும். ஆனால் அவற்றை விடுத்து, ஆசிரியர் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களின் அகவிலைப்படி ஜன. 2020 முதல் ஜூலை 2021 வரை முடக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், அரசு ஊழியர்களின் சரண் விடுப்பு ஓராண்டுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

ஜிபிஎப் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றதும் கண்டனத்துக்குரியது ஆகும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராடிப் பெற்ற உரிமைகள் மீது கை வைப்பதை அனுமதிக்க முடியாது. இவற்றுக்கான அரசு ஆணைகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கொரோனா பிரச்சனை வருவதற்கு முன்பாகவே இந்தியாவிலும், தமிழகத்திலும் கடும் பொருளாதார நெருக்கடி முன்னுக்கு வந்தது. வேலையின்மை விண்ணைத் தொட்டது. இப்போது உள்ள சூழலில் அனைத்து பிரச்சனைகளும் கூடுதல் பரிமாணங்களோடும், அதிதீவிரத்தோடும் மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து கொண்டிருக்கின்றன.

ஊரடங்கு உத்தரவை தளர்த்திய பிறகு இத்தகைய பிரச்சனைகள் இன்னும் கொத்துக்கொத்தாக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்போதுள்ள சூழலை எதிர்கொள்ள, இருக்கக்கூடிய நிதியையும், வாங்குகிற கடனையும் தொலைநோக்குப் பார்வையோடு மிகக் கவனமாக கையாளுவது அவசியமாகும்.

எனவே உடனடியாக டெண்டர்களை நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக வற்புறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...