தமிழக ஆட்சியின் புதிய தலைவர்…

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அவரது நம்பிக்கைக்குரியவருமான வி.கே.சசிகலா, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகும் பொருட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக்குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு ஆடப்படும் அரசியல் சதிராட்டத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்துள்ளது. முதலமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றக் கட்சித் தலைவர் பொறுப்புக்கு சசிகலாவின் பெயரை முன்மொழிந்த பிறகு, தனது பதவியை ராஜினாமா செய்தார்; அதன்பின்னர் தற்போது சசிகலாவிற்கு எதிராகத் திரும்பியுள்ளார். இது ஒருவித அரசியல் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது; ஆனால் தமது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை தான் பெற்றிருப்பதாக நிரூபிப்பதில் சசிகலா மும்முரமாக உள்ளார்.முதலமைச்சர் பதவிக்கு சசிகலா முன்மொழியப்பட்ட விதம் என்பது பல்வேறு விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. பொதுவாக பார்த்தால் சட்டமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவரை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்வதற்கு, அஇஅதிமுக சட்டமன்றக் கட்சிக்கு உரிமை இருக்கிறது. சட்டவிதிகளின்படி, முதலமைச்சராகப் பதவியேற்கும் ஒருவர், பதவியேற்ற ஆறு மாத காலத்திற்குள் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த குறிப்பிட்ட பிரச்சனையில், ஜெயலலிதாவுடன் சசிகலாவும் சம்பந்தப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீடு மீது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் இருக்கும்போது, முதல்வர் பதவிக்கு உரிமை கோருவது எப்படி என்ற கேள்வி எழுகிறது. உண்மையில், அஇஅதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்வுசெய்யப்பட்ட மறுநாளே, மேற்கண்ட வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தின் அமர்வானது, இதுதொடர்பான தீர்ப்பை அடுத்தவாரம் வழங்க இருப்பதாக அறிவித்தது.இந்தப் பின்னணியில் ஒரு தார்மீக ரீதியிலான கேள்வி எழுகிறது- முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்பு, தனது நிலையை தெளிவாக்கிக் கொள்ள, தீர்ப்பு வரும் வரை ஏன் சசிகலா காத்திருக்க கூடாது.சில வாரங்களுக்கு முன்புதான், ஜெயலலிதாவின் மறைவினைத் தொடர்ந்து முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றிருக்கும் நிலையில், அப்படிச் செய்வதுதான் ஏற்புடையதாக இருந்திருக்கும். ஜெயலலிதாவுக்காக ஏற்கெனவே இரண்டு முறை முதலமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில், பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டது என்பது எதிர்பாராத ஒன்று அல்ல. தமிழகத்தின் ஒரு கணிசமான பகுதி மக்களிடையே பரவலாக எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிற கேள்வி ஒன்று இருக்கிறது. சசிகலா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட உதவியாளராக நீண்டகாலம் அறியப்பட்டவர். அவர் அஇஅதிமுகவில் எந்தவொரு முக்கியமான பொறுப்பினையும் வகிக்கவில்லை; எந்தவொரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பிலும் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை. அவர், பின்னணியில் இருந்து அதிகாரத்தைப் பிரயோகிக்க பயன்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் இல்லத்தில் முக்கியப் பங்கினை வகித்தவர் என்றே பரவலாக அறியப்பட்டவர். அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்கும் சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது.கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு சசிகலா வந்ததும், உடனடியாக முதலமைச்சர் பதவிக்கு வர முனைந்ததும் அஇஅதிமுகவின் விசுவாசமிக்க ஆதரவாளர்கள் உள்பட தமிழகத்தின் மக்களிடையே பரவலாக, ஒரு புரிந்துகொள்ளத்தக்க எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எதேச்சதிகாரமான செயல்பாட்டு முறை உள்ளிட்ட குறைபாடுகள் இருந்த போதிலும், ஜெயலலிதா ஒரு வெகுஜனத் தலைவராக இருந்தார்;

அவர் அஇஅதிமுகவின் மிகப்பெரும் வெகுஜனத் தலைவராக இருந்த எம்ஜிஆரிடமிருந்து தலைமைப் பொறுப்பையும் பண்புகளையும் சுவீகரித்துக் கொண்டவர். சசிகலா, அஇஅதிமுக ஆதரவாளர்களிடம் ஏற்புத்தன்மையையும், மக்களிடம் அங்கீகாரத்தையும் இனிதான் பெறவேண்டியுள்ளது.நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் கவனிக்கவேண்டிய- பங்களிப்பு செய்ய வேண்டிய மற்றொரு முக்கியமான அம்சம் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே, இந்தியாவில், பிராந்தியக் கட்சிகளில் வாரிசு அரசியல்களும், தலைவர்களது குடும்பங்களின் அதிகாரக் குவிப்பும் வளர்ந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம். பல்வேறு பிராந்திய கட்சிகளில், குடும்பங்களின் நலன்களும் அவர்களது வர்த்தக – தொழில் நலன்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதைப் பார்க்கிறோம். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக பஞ்சாப் மாநிலத்தை குறிப்பிடலாம். அங்கே தந்தையும், மகனும் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருக்கிறார்கள். அவர்களே அகாலிதளம் கட்சியின் தலைமை பதவியையும் வைத்திருக்கிறார்கள்.அஇஅதிமுகவைப் பொறுத்தவரை, சசிகலா, ஜெயலலிதாவின் குடும்ப உறுப்பினர் அல்ல என்ற போதிலும், அவர் குடும்ப உறுப்பினர் போலவேதான் செயல்பட்டார். இந்த குறிப்பிட்ட அம்சமானது, (வாரிசு அரசியல்) பிராந்தியக் கட்சிகளின் சித்தாந்தத்தையும் திட்டங்களையும் சீர்குலைவை நோக்கியே கொண்டுசென்றுள்ளது. கட்சி சார்ந்த ஜனநாயக அமைப்புமுறை மற்றும் சித்தாந்தம் சார்ந்த அரசியல் ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டுமானால், இதுபோன்ற போக்கினைத் தடுக்க வேண்டியது அவசியமாகும்; அரசியல் கட்சிகள் செயல்பாட்டில் ஜனநாயகக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டியதும் அவசியமாகும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம், பிப்.12

தமிழில்: எஸ்.பி.ஆர்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...