தமிழக காவல்துறை இயக்குநருக்கு சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுதல்


காவல் துறை இயக்குனர் அவர்கள்
காவல்துறை தலைமை அலுவலகம்,
மயிலாப்பூர்,
சென்னை – 600 004.

அன்புடையீர், வணக்கம்

பொருள்: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தை சார்ந்த விவேக்கும் சாவித்திரியும் காதலர்கள் – இருவரும் கோயமுத்தூர் செல்லும் வழியில் குளித்தலை காவல் துறையினரால் இருவரையும் பிரித்து அவரவர் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தது – அனுப்பி வைத்த நான்கு நாளில் சாவித்திரி படுகொலை செய்யப்பட்டு எரித்து சாம்பலாக்க பட்டது – இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவது – குளித்தலை காவல்துறையினரை வழக்கில் குற்றவாளியாக சேர்ப்பது – சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோருதல் தொடர்பாக.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்கம் ஒன்றியத்தைச் சார்ந்த இடையன்வயல் கிராமத்தைச் சார்ந்த சாவித்திரி, பக்கத்து ஊரான தோப்புக்கொல்லை கிராமத்தை சார்ந்த விவேக் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியுள்ளனர். இருவரும் மிகவும் பின் தங்கிய சமூகத்தை சார்ந்தவர்கள்.

இருப்பினும் சாவித்திரி வீட்டில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அவருக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர்கள் மேற்கொண்டனர். இதனை அறிந்த காதலர் இருவரும் 7.6.2020 அன்று கோயம்புத்தூருக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டு வாழலாம் என கோயம்புத்தூர் சென்றுள்ளனர். வழியில் கரூர் மாவட்டம் குளித்தலை சோதனைச்சாவடியில் இவர்களை பிடித்து விசாரித்த காவல்துறையினர் இரண்டு பேரையும் அவரவரது பெற்றோர்களை வரவழைத்து ஒப்படைத்துள்ளனர்.

காவல்துறை சாவித்திரியிடம் விசாரித்தபோது. சாவித்திரி தனது பெற்றோரிடம் தன்னை ஒப்படைத்தால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என கெஞ்சியுள்ளார். மேலும், அவரை அடித்து சித்திரவதை படுத்திய காயங்களை எல்லாம்கூட காவல்துறையினரிடம் காட்டியுள்ளார். இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் குளித்தலை காவல்துறையினர் சாவித்திரியை அவளுடைய பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். அனுப்பிவைத்த நான்காம் நாள், அதாவது 11.6.2020 அன்று சாவித்திரி இறந்துவிட்டதாக செய்தி பரவியது. இது குறித்து விசாரித்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது உடலை எரித்து சாம்பலாக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அது குறித்து காவல் துறையிடம் புகார் செய்து பிரேத பரிசோதனை நடத்திய பிறகு உடலை அடக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை.
எனவே, சாவித்திரியை திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு அதற்கான தடயங்களை மறைப்பதற்காக அவரை எரித்து சாம்பலாக்கி விட்டதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது முழுவதும் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்ல உண்மைக்கு மாறானது கூட. எனவே, கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென தங்களை கேட்டுக்கொள்கிறேன்

  1. சாவித்திரியினுடைய மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
  2. குளித்தலை காவல்துறையினர் சாவித்திரியை பெற்றோரோடு அனுப்பாமல் இருந்திருந்தால் சாவித்திரி மரணம் நிகழ்ந்திருக்காது. எனவே, இந்த வழக்கில் குளித்தலை காவல்துறையினரை குற்றவாளிகளாக சேர்க்கவேண்டும்.
  3. இந்த வழக்கில் புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய இரு மாவட்ட காவல்துறை சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
  4. தமிழகத்தில், இதுபோன்ற காதலர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் காவல்துறை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற காவல்துறை வழிகாட்டும் நடைமுறைகளை காவல்துறையினருக்கு தெளிவாக புரியவைத்து, இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக்கூறி உரிய முறையில் நடந்துகொள்ள தாங்கள் அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தங்களன்புள்ள
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்

Check Also

பிரதமரே நடிக்காதீர்… செயல்படுங்கள்… கொரானாவை எதிர்கொள்ள…

நாடு முழுவதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோவிட் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் மரணங்களைத் தடுத்து நிறுத்தவும், மருத்துவ ...