தமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோரி சிபிஐ (எம்) முதலமைச்சருக்கு கடிதம்

பெறுநர்

          மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்: பிணை வழங்கப்பட்டும் சட்ட விரோதமாக தமிழக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இசுலாமியர்களை விடுவிக்கக் கோருவது தொடர்பாக:-

***

            இந்தோனேசியா, பிரான்ஸ், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு ஆன்மீக பயணமாக வந்த 12 பெண்கள் உள்பட 129 இசுலாமியர்கள் மீது, தமிழகத்தில் 15 காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு முதலில் புழல் சிறையிலும், பின்னர் சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

            இவர்களில் 98 பேருக்கு ஏற்கனவே நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் இருப்பிடத்தை தெரிவித்துவிட்டு சென்னை நகருக்குள் தங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்தனை அடிப்படையில் சொந்தப் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

            இப்படி பிணை வழங்கப்பட்ட பிறகும் மீண்டும் இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் தடுப்பு முகாம்கள் பற்றிய வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ளாமலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமலும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

            இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள ஹட்ஜ் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தில்லியில் வெவ்வேறு தனியார் இடங்களிலும், ஐதராபாத்தில் பள்ளிவாசல்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் சம்மந்தபட்ட தூதரகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

            தமிழகத்தில் மட்டும் சிறையில் தடுப்பு முகாம்களின் வழிகாட்டுதல்களுக்கு மாறாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவும் அடிப்படை வசதிகளற்று மிக மோசமான சூழலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தமிழக அரசு ஆன்மீக சுற்றுலா வந்தவர்களை வன்மத்துடன் அணுகுவதாகவே எண்ண தோன்றுகிறது.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு:

1.         உடனடியாக சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும்;

2.         இவர்கள் மீதான வழக்கை முடித்து அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்ப உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனவும்;

3.         அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படும் வரை, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவர்கள் விரும்பும் தனியார் இடங்களில் அரசின் விதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...