தமிழக நிதிநிலை அறிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையினை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசு நிதிப் பங்கீட்டையும், மானிய உதவிகளையும் தமிழ்நாட்டிற்கு வழங்க மறுத்து வருகிறது. மேலும் மத்திய விற்பனை வரிக்கான இழப்பீடாக வழங்க வேண்டிய ரூ. 9,300 கோடி ரூபயை மத்திய அரசு வழங்க மறுத்துள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தமிழகத்திற்கான நிதி உதவிகளை மறுத்து வஞ்சித்து வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு அறிவித்து அமலாக்கி வரும் மக்கள் நலத்திட்டங்கள் வரும் ஆண்டிலும் தொடருவதற்கான அறிவிப்புகளை மேற்கொண்டுள்ளதுடன் அவைக்கான நிதிஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக உணவு மான்யத்திற்கு ரூ.5,300 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையினை ரூ.1000/-லிருந்து ரூ. 1500/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது, மண்பாண்ட தொழிலாளர்களுக்கான மழைக் கால உதவி தொகையாக ரூ.4,000/-, வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை மற்றும் தீவன பற்றாக்குறையை தீர்க்க ரூ.600 கோடி ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்களுக்கு மான்யமாக ரூ.979 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக 6000 குடியிருப்புகளுக்கு ரூ. 1,500 கோடியும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.745 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே உள்ள நகர்ப்புற சுகாதார மையங்களை வலுப்படுத்துவதுடன் 37 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உருவாக்குவது மற்றும் 770 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைப்பது, மாநிலத்திற்குள் நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.

தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தினை பாழ்படுத்தி காப்பீடு பலன் பெற முடியாத நிலைமைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ள சூழலில் அதை நிதிநிலை அறிக்கையில் கண்டித்துள்ளதுடன் காப்பீட்டு சுமையை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளதுடன் தமிழக அரசின் பங்காக ரூ. 242 கோடி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

அதேசமயம் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள், கரும்பு, நெல் போன்ற வேளாண் பொருட்களுக்கு கூடுதல் விலை, மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை, ஒப்பந்தக் கூலிமுறை ஒழிப்பு, குறைந்தபட்ச கூலி ரூ.10/- ஆயிரம் என்று நிர்ணயித்தல், குடிமனைப் பட்டா வழங்குவதற்கேற்ப நிலவகை மாற்றங்கள் செய்தல், தொகுப்பூதிய முறையைக் கைவிடுதல், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு கூடுதல் அழுத்தம் தருதல், கோயில் நில குத்தகை சாகுபடியாளர்கள் குடியிருப்போர் கோரிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களை தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
 

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply