தமிழக மக்களுக்கு சிபிஐ(எம்) புத்தாண்டு வாழ்த்து

ஒவ்வொரு புத்தாண்டையும் மக்கள் நம்பிக்கையுடனேயே எதிர்கொள்கின்றனர். இந்த ஆண்டிலாவது தங்களது துயரம் தொலையும், இன்பம் பெருகும் என்று எதிர்பார்ப்பது போலவே 2014 ஆம் ஆண்டையும் வரவேற்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறது.

முதலாளித்துவத்தால் மட்டுமே மனிதகுலத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும் என்ற மாயத் தோற்றம் மேலும் விலகிய ஒரு ஆண்டாகவே 2013 அமைந்தது என்றால் அது மிகையல்ல. மக்களையும் வளர்முக நாடுகளையும் ஒட்டச் சுரண்டி கொழுக்க நினைக்கும் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கையை எதிர்த்து  உலகின் பல்வேறு நாடுகளில் போராட்டப் பேரலை சுழன்றடிப்பதை காண முடிகிறது.

விலை வீழ்ச்சியைக் கண்டித்து பிரான்சில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். இயற்கை வளத்தை சூறையாடும் அமெரிக்க, கனடா கம்பெனிகளை எதிர்த்து ருமேனியாவில் லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம். நச்சுக்கொல்லி விதைகளை உலகம் முழுவதும் பரப்பும் மான்சான்டோ நிறுவனத்தை எதிர்த்து 52 நாடுகளில், 500க்கும் மேற்பட்ட நகரங்களில் கண்டனப் பேரணிகள் போன்ற போராட்டங்களோடு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து உழைக்கும் மக்கள் வீதிக்கு வந்து போராடியதை காண முடிந்தது.

அதேநேரத்தில் இந்தியாவிலும் மாபெரும் போராட்டம் நடைபெற்ற ஆண்டாக 2013 அமைந்தது. பிப்ரவரி 20, 21  தேதிகளில் 48 மணிநேரம் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலை நிறுத்தம் நடைபெற்றது. 12 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் செயற்கைக் கோளை அனுப்புவது இந்திய விஞ்ஞானிகளின் இடைவிடாத உழைப்பு மற்றும் தொழில் நுட்ப அறிவின் காரணமாக சாத்தியமாயிற்று. முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு எதற்கு என்ற கேள்வியை மறைமுகமாக இந்த வெற்றி எழுப்பியது என்றே கூற வேண்டும்.

மன்மோகன் சிங் அரசு மக்கள் மத்தியில் முற்றிலும் அம்பலமான ஆண்டாக 2013 ஆம் ஆண்டு அமைந்தது. கட்டுக்கடங்காத உயர்மட்ட ஊழல், கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை தொடர்ந்தது. மறுபுறத்தில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவதும் நீடித்தது. உணவுப் பாதுகாப்புச் சட்டம், லோக்பால் மசோதா போன்றவை பல குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டன. ஆனால், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, மத வன்முறை தடுப்புச் சட்டம் போன்றவை நிறைவேற்றப்படவில்லை.

காப்பீட்டுத்துறை, வங்கி, என்எல்சி உள்ளிட்ட பொதுத் துறைகளில் அன்னிய மற்றும் தனியார் முதலீட்டை மேலும் அதிகரிக்கும் சில முடிவுகள் போராட்டங்கள் காரணமாக பின்னுக்குத் தள்ளப்பட்டன. அதேநேரத்தில் கடும் எதிர்ப்பையும் மீறி சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அபாயகரமான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து  தேசத்தின் நான்கு  முனைகளிலிருந்து போர்முழக்கப் பயணத்தை நவம்பர் மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. உணவுப் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி 5 கோடி மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் பிரதமரிடம் அளிக்கப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் தில்லியில் நடைபெற்ற மதவெறி எதிர்ப்பு மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு மக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு வறட்சி நிவாரணம் கோரி நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதோடு ஓரளவு நிவாரணத்தையும் பெற்றுத் தந்தது.

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் கெயில் திட்டம், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு எதிரான இயக்கம் என பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. குடிமனைப்பட்டா, குடிநீர் போன்ற வாழ்வாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களும் தொடர்கின்றன.

தீண்டாமை கொடுமையை நியாயப்படுத்தும் வகையில் சாதி வெறி சக்திகளை அணிதிரட்ட முயலும் காரியங்கள் நடந்த அதே வேளையில் அதை எதிர்த்து பல்வேறு ஜனநாயக சக்திகள் வீறுகொண்டு எழுந்ததும்  குறிப்பிடத்தக்கது. காதலுக்கு எதிரான கௌரவக் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்செயல்கள் தொடரும் நிலையில் அதை எதிர்த்த போராட்டத்தையும் தொய்வின்றி தொடர வேண்டியுள்ளது.

2014 ஆம் ஆண்டில் 16வது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையிலும், இந்திய நாடாளுமன்ற முறைக்கு எதிராகவும் பிரதமர் வேட்பாளர் என்ற பெயரில் தனி நபர்கள் முன்னிறுத்தும் போக்கு எழுந்துள்ளது. குறிப்பாக குஜராத்தில் சிறுபான்மை மக்களை நரவேட்டையாட முக்கியக் காரணமாக இருந்த நரேந்திர மோடியை இந்துத்துவா மதவெறி சக்திகள் முன்னிறுத்துகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஊடகங்கள் இதற்கு துணை நிற்கின்றன. மறுபுறத்தில் அனைத்து வகையிலும் மக்கள் விரோதக் கொள்கைகளை பின்பற்றி அம்பலப்பட்டுப்போன காங்கிரஸ் கட்சியும் தனிநபரையே முன்னிறுத்த முயல்கிறது. இந்த இரு கட்சிகளுக்கும் மக்கள் விரோதக் கொள்கையில் மாற்றமில்லை.

இதற்கு மாற்றாக இடதுசாரிக் கட்சிகள் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து மக்களை அணிதிரட்டி வருகிறது. புதிய ஆண்டு மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கும் ஆண்டாகவும் மக்கள் வாழ்வை சூறையாடும் தாராளமயக் கொள்கையை பின்னுக்குத் தள்ளும் ஆண்டாகவும்  அமைந்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி மலர்ந்திட தனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

 

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...

Leave a Reply