தமிழக மாணவி அனிதா தற்கொலை வேதனை தருகிறது – சிபிஐ(எம்) இரங்கல்!

தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், வேதனை கொடுப்பதாகவும் உள்ளது. நீட் தேர்வு திணிக்கப்பட்டதால்,  மருத்துவக் கல்விக்கான வாய்ப்பை இழந்த ஏராளமான எளிய குடும்பங்களுக்கு  இது மேலும் ஒரு துயரச் செய்தியாகும்.  அனிதாவின் இழப்பால் வாடும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது இரங்கலை தெரிவிக்கிறது.

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில், ஒடுக்கப்பட்ட குடும்பத்திலிருந்து கல்வி பயின்ற அனிதா, பத்தாம் வகுப்பில்  478 மதிப்பெண்கள் பெற்றார். தன் வீட்டில் கழிப்பிடம் இல்லாத நிலையில், தனியார் பள்ளியொன்றில் தங்கிப் படிக்க கிடைத்த வாய்ப்பில் 12 ஆம் வகுப்பு படித்தார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194, கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண்கள் பெற்றார் அவரது கட் ஆப்  மதிப்பெண் 196.5 ஆகும்.

தமிழகத்தின் மிகச் சிறந்த மருத்துவக் கல்லூரியில் அனிதாவுக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் காரணமாக  அந்த வாய்ப்பு  பறிக்கப்படது. தன்னால் இயன்றவரை சட்டப்படியும், அனைத்து வழிகளிலும் அவர் போராடினார். கடைசியில் கால்நடை மருத்துவக் கல்வியில்தான் அவர் சேர முடிந்தது. அவரின் தற்கொலைச் செய்தி, தாங்கொனா அதிர்ச்சியளிக்கிறது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகச் சூழலிலிருந்து போராடி முன்னேறும் குழந்தைகளில் ஒருவரான அனிதாவின் இழப்பு பேரிழப்பாகும்.

நீட் தேர்வு திணிப்பு மாநில உரிமைப் பறிப்பாகும். மேலும், நீட் திணிப்பை ஓராண்டு கூட தடுக்க முடியாத மாநில அரசு, தவறான நம்பிக்கையை மீண்டும் மீண்டும் அளித்துவந்தது. மேலும், தனது அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மாநில உரிமைகளை காவுகொடுத்தது. இது தமிழக மாணவர்களை கடுமையான நெருக்கடியில் தள்ளியிருக்கிறது. பாஜக கடைப்பிடித்துவரும் கொள்கைகளால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதகங்களின் மற்றுமொரு கோரமான வெளிப்பாடே, இன்று மாணவர்கள் எதிர்கொண்டு வரும் இத்தகைய நெருக்கடியாகும். அனிதாவின் தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளின் இத்தகைய போக்கே காரணம். மத்திய, மாநில அரசுகளுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

மேலும், எந்தவொரு சிக்கலுக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகிறோம். உரிமைகள் பறிக்கப்படும்போது, அதற்கெதிராக போராடி மீட்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. தமிழக உரிமைகளையும், மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க மக்கள் உறுதியுடன் போராட, முன்நிற்க வேண்டுமெனக் கோருகிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...