தமிழக மின் பற்றாக்குறையை போக்கிடுக: மின் கட்டண உயர்வை திரும்பப் பெற்றிடுக!

தீர்மானம்:2

தமிழக மின்சார வாரியத்தில் தற்போது (2,52,32,000) இரண்டு கோடியே ஐம்பத்திரண்டு லட்சத்து முப்பத்திரண்டாயிரம், மின் இணைப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் எட்டு லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை மின் இணைப்புகள் கூடிக் கொண்டே வருகின்றன. குறிப்பாக 2005ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழகத்தின் மின்தேவைக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தை ஆண்ட திமுக, அஇஅதிமுக இரண்டு கட்சிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 417 மெகாவாட் மட்டுமே கூடுதல் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மின்வெட்டு தொடர்ச்சியாக அமலில் இருக்கிறது. அதேபோல மின்தேவையை சமாளிப்பதற்காக தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 12 ரூபாய்க்கு மேல் கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு மின்வாரியம் தள்ளப்படுகிறது.

தமிழகத்தில் மின் வெட்டால் தொழிற்சாலைகள், விவசாயிகள், விசைத்தறி நெசவாளர்கள், சிறு குறு தொழில் செய்வோர், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் வருமான இழப்பு ஏற்பட்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மின் வெட்டால் பல தொழிற்சாலைகளில் பல நேரங்களில் லேஆப், லாக்அவுட் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து வீதிக்கு தள்ளப்படும் அபாயம் தொடர்கிறது.

தமிழகத்தில் கூடுதல் மின் உற்பத்திக்காக 2007ல் திட்டமிடப்பட்ட 1320 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் நிலையம் இன்று வரை ஆரம்ப நிலையிலேயே உள்ளது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் இதுவரையிலும் உற்பத்தியை துவக்கவில்லை. இதுபோன்று பல திட்டங்கள் துவக்கப்பட்டு நிறைவடையாமலேயே நிற்கின்றன. மாநில அரசு மின் திட்டங்களுக்கு போதுமான முதலீடு செய்வதை நிறுத்தி நீண்ட காலமாகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் சுமார் 2000 மெகாவாட் கடத்தும் திறன் இல்லாததால் உற்பத்தி செய்யாமலேயே விடப்படுகிறது. இவற்றால் எல்லாம் தமிழகத்தில் மின்வெட்டு நிரந்தரமான ஒன்றாகவும், குறிப்பாக கோடைக் காலத்தில் கடுமையானதாகவும் மாறுகிறது. இவற்றை போக்குவதற்கு தமிழகத்தை ஆண்ட கட்சிகள் உருப்படியான திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவதற்கு பதிலாக ஒருவரையொருவர் குறை சொல்வதன் மூலம் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக உரிய முதலீடுகளைச் செய்து புதிய மின்திட்டங்களை உருவாக்கி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு தமிழக அரசை கோருகிறது.

ஆட்சியில் உள்ள அதிமுக அரசும், ஆட்சியில் இருந்த தி.மு.. அரசும் தமிழக மக்களின் மின் தேவைக்கேற்ப கூடுதல் மின் உற்பத்திக்கு திட்டமிடுவதற்கு பதிலாக அநியாய விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதில் தான் அதிக அக்கறை செலுத்துகின்றன. ஒரு யூனிட்டு ரூ. 3/- செலவில் தனது மின் உற்பத்தி நிலையம் மூலம் மின் உற்பத்தி செய்ய வாய்ப்பிருந்தும் ரூ.13/- முதல் ரூ.14/- வரை விலை கொடுத்து வாங்குவதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. இதனால் மின்சார வாரியத்தின் ஆண்டு வருவாயில் 80 சதவீதம் அளவிற்கு மின்சாரத்தை வாங்குவதற்கே செலவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளதினால்தான் மின்சார வாரியத்திற்கு நிதி நெருக்கடி என்றும் அந்த நட்டத்தை ஈடுசெய்ய மின் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கையும் என்றும் மின் கட்டண உயர்வை நியாயப்படுத்துகின்றன.

அஇஅதிமுக அரசு 2012 ஆம் ஆண்டில் ரூபாய் 7,800 கோடிக்கும், 2013 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மின் கட்டண உயர்வு என்ற பெயரால் ரூ. 1,200 கோடிக்கும், 2014 ஆம் ஆண்டு ரூ. 5,447 கோடி அளவிற்கும் மின்சார கட்டணத்தை உயர்த்தி சாதாரண ஏழை எளிய மக்களையும், சிறு குறு தொழில்களையும் பாதிக்கும் நிலையை உருவாக்கி உள்ளனர். மின் கட்டண உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான போராட்டங்களை நடத்தியதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

தமிழக மக்களின் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்வதற்கு உரிய முதலீடுகளை செய்து மின்பற்றாக்குறையைப் போக்கிட வேண்டும் என்றும், அதுவரையிலும் தற்போது தனியாரிடம் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கான விலையை மறு நிர்ணயம் செய்து நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டுமெனவும்; அரசுகளின் முறையற்ற திட்டமிடலின் காரணமாக ஏற்பட்ட மின்பற்றாக்குறைக்காக தமிழக மக்களை பாதிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டுமெனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: எஸ்.எஸ். சுப்பிரமணியன்

வழி மொழிந்தவர்: கே. காமராஜ்

Check Also

கட்சியின் சொந்த பலத்தை பெருக்குவோம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 22வது அகில இந்திய மாநாடு 2018 ஏப்ரல் 18 முதல் 22 வரை தெலுங்கானா ...