தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு சிபிஐ(எம்) கண்டனம்

கடந்த புதன்கிழமை (நவம்பர் 16) நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 9 மீனவர்கள், நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த அரவிந்தன், காரைக்கால் மேட்டைச் சேர்ந்த தினேஷ் என்ற பாலமுருகன் ஆகிய இரண்டு மீனவர்கள் மீது குண்டு பாய்ந்து, ஆபத்தான நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அடுத்தடுத்து உச்சகட்டத்திற்கு செல்வது கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது.

அண்மையில் புதுதில்லியில், இந்திய- இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தையும் அதைத் தொடர்ந்து இந்திய- இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.  மீனவர்கள் பிரச்சனைக்காகவே பிரத்யேகமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், தவறுதலாக எல்லை தாண்டி வந்தாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசுத் தரப்பில் உறுதிமொழி அளித்ததாகவும், கைது நடவடிக்கையும் இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டதாகவும் மத்திய அரசின் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டன.

இத்தகைய உறுதிமொழி அளிக்கப்பட்ட சில நாட்களிலேயே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் துப்பாக்கிகளால் சுடப்பட்டு, கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதற்கு மத்திய அரசே பொறுப்பாகும்.

மீனவர்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் இத்தகைய தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர, மத்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளான இரண்டு மீனவர்களின் உயிரை பாதுகாக்க தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சையும், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா பரவலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தலைமைச் செயலாளருக்கு – கே.பாலகிருஷ்ணன் கடிதம்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திட ...