தமிழக மீனவர் வாழ்வுரிமையை பாதுகாத்திடுக

இயற்கை சீற்றங்கள், மற்றும் நவீன தாராளமயமாக்கல், சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் இலங்கை கடற்படை தாக்குதல், இதுபோன்ற காரணங்களால், தமிழக மீன்பிடி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இந்திய கடல் வளத்தை அன்னிய மற்றும் இந்திய கார்பரேட் மீன்பிடி கப்பல் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் வகையில், மத்திய அரசின் கொள்கைகள் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகிறது. குறிப்பாக தேசிய கடல் மீன்பீடி கொள்கை 2017, நீலபுரட்சி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் பெயரால்இ பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறித்துவிட்டு, இந்திய பெருங்கடலில் அன்னிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கி கொட்டிக்கிடக்கும் மீன்வளத்தைச் சுரண்ட வழிவகை செய்யவும்இ மேலும் சாகர் மாலா போன்ற பெரும்திட்டங்களின் பெயரால் கடலூர்-நாகை கடற்கரைப்பகுதிகளில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளால் கடல்சார் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதுடன் கடல் மற்றும் நதிகளின் சுற்றுக்சூழல் அழிவை நோக்கி செல்லும் அபாயம் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கொள்கைகளை கைவிட வேண்டும்.

கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி தமிழகம் மற்றும் கேரளத்தை தாக்கிய ஒக்கி புயலால் குமரி மாவட்ட மீனவர் கிராமங்கள் நிலைகுலைந்து போயிருக்கின்றன. 500க்கும் மேற்பட்ட மீனவர்களின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரண நிதியை கேரள அரசு போல் தழிழகத்திலும் மீனவர்களுக்கு வழங்க தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

மீனவர்களைக்காக்க நவீனத் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பாதுகாப்புக் கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் மேம்படுத்த வேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி, பெண் மீனவர்களுக்கும் சம நிவாரணம் வழங்கிட வேண்டும்.

கடல் மற்றும் கடல்சார் பகுதிகளில் தாது மணல் கொள்ளை கனிமவளக்கொள்ளை இறால் பண்ணைகளை அமைத்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.

இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுப்பதுடன் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்வது, மாற்று வாழ்வாதாரமான ஆழ்கடல் மீன்பிடிப்புத்திட்டத்தை விரிவடைந்த வகையில் நிறைவேற்றுவது. பாக் நீரிணைப்பகுதியில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்துவது, தமிழக மீனவர்களை பாதிக்க கூடிய இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தை கைவிடச் செய்ய மத்திய அரசு ராஜிய ரீதியில் அழுத்தம் தருவது போன்ற நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடித்தொழிலை நம்பி சுமார் 5 லட்சம் மீனவர்கள் உள்ளனர். உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இதுவரை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கி வந்த நிலையில் உள்நாட்டு நீர்நிலைகளில் தனியார்கள் குத்தகை எடுக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை நிறைவேற்றியதன் காரணமாக உள்நாட்டு (Inland) மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துள்ளது.

எனவே தமிழக அரசு உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவர்களின் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கிட வேண்டும். மேலும் கடல் மீனவர்களுக்குரிய அனைத்து சலுகைகளும் உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என சிபிஐ(எம்)ன் 22வது தமிழ்நாடு மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிபவர் – சி.ஆர்.செந்தில்வேல் (இராமநாதபுரம்)

வழிமொழிபவர் – எஸ்.அந்தோணி (கன்னியாகுமரி)

Check Also

மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...