தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

திரையுலகில் பல சாதனைகளையும், விருதுகளையும் பெற்ற செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் 1982ல் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், பொதுச் செயலாளர் என பல பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர். தமிழக முதலமைச்சராக 15 ஆண்டு காலம் பணியாற்றிய அவர் ஏழை, எளிய மக்களுக்கு பல நலத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தியவர். குறிப்பாக, தொட்டில் குழந்தை திட்டம், மாணவ – மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக் கணிணி மற்றும் கல்விக்குத் தேவையானவைகளை வழங்கியவர். அம்மா உணவகம், மருந்தகம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவையாகும்.

தனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட எண்ணற்ற சவால்களை நெஞ்சுறுதியோடு எதிர்கொண்டவர். ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு அரசியலில் உரிய முக்கியத்துவம் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் ஆளுமையுடன் பணியாற்றியவர். பல மொழிகளில் சரளமாக எழுதவும், பேசவும் திறன்படைத்தவர்.

காவேரி, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகளில் உறுதியாக போராடி தமிழகத்தின் மாநில உரிமைகளை நிலைநாட்டியவர். இதுபோன்ற பல்வகை சிறப்பு திறன்களை கொண்ட செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களுடைய மறைவு தமிழகத்திற்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் மறைவால் வாடும் லட்சோப லட்ச அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...