தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) கடிதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று (24.11.2016), “தமிழக முதலமைச்சர் அவர்களின், 2014 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திற்காக விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே விவசாயி கணபதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் போடப்பட்ட ஹெலிபேட் காங்கீரிட் தளத்தை அகற்றி, நிலத்தை சமன்படுத்தி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி”  தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்.


24.11.2016

பெறுதல்

            மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

அன்புடையீர், வணக்கம்.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தாங்கள் கலந்துகொள்வதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சிக்கு அருகேயுள்ள உலகங்காத்தான் கிராமத்தைச் சார்ந்த எம். கணபதி என்ற ஏழை விவசாயியை, அவ்வூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் சின்ன சேலம் வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், ஒன்றிய சேர்மன், அதிமுகவினர்  உள்ளிட்டோர்  அணுகினர். அவருக்குச் சொந்தமான அ.பு.ச.எண் 225/2, 1.28 ஏக்கர் நிலத்தில் ஹெலிபேட் அமைத்துக்கொள்வதாகக் கேட்டனர்.  மாதம் ஒன்றுக்கு ரூ. 10,000/- வீதம் வாடகை தருவதாகக் கூறி, உடனடியாக ரூ. 10,000/- மட்டும் அட்வான்சாகக் கொடுத்தனர். பொதுக்கூட்டம் முடிந்து 15 நாட்களுக்குள் கான்கிரீட் தளத்தை அப்புறப்படுத்தி விடுவதாக  ஒப்பந்தம் போட்டனர்.

இரண்டரை ஆண்டுகள் சென்ற பின்பும் இதுவரை கான்கிரீட் தளம் அகற்றப்படவில்லை. நிலத்தை பண்படுத்தி தராததால் எந்த சாகுபடியையும் அவரால் மேற்கொள்ள முடியவில்லை. இதனால் கணபதியும் அவரது குடும்பமும்  பெருத்த பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இக்காலத்தில் கணபதி பலமுறை ஊராட்சி மன்றத் தலைவரையும், அதிகாரிகளையும் சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும்,  தொடர்ந்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு பதிவு அஞ்சல் மூலமாகவும், நேரிலும் மனு கொடுத்திருக்கிறார். தங்கள் அலுவலகத்திலிருந்து தலையீடு ஏதுமில்லாததால் 4.7.2016 அன்று மாவட்ட ஆட்சியருக்கும், 11.7.2016 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கும் மனு கொடுத்துள்ளார். மீண்டும் 5.8.2016 அன்று  தங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், இதுவரையில் அவருடைய குறை தீர்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்து 2 1/2 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு ஹெலிபேட் தளம் அமைக்க நிலத்தை கொடுத்த விவசாயி கணபதிக்கு  வாடகையும் கிடைக்கவில்லை, சாகுபடியும் செய்ய முடியவில்லை. அரசின் பல அலுவலகங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார். அவரும், அவருடைய குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கும் நட்டத்திற்கும் ஆளாகியிருக்கினறனர். இச்சூழலில், உடனடியாக அவருடைய நிலத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்தை அகற்றி, நிலத்தைப் பண்படுத்தி தருவதற்கும், உரிய இழப்பீடு அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

/ஒப்பம்

(ஜி. ராமகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...