தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான . திமுகவும் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கை நாட்டு மக்களின் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டது; விலைவாசி உயர்வு, விவசாயிகள் நலிவு. வேலையின்,.பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை, சில்லரை வர்த்தகத்தில் அன்னியக் கம்பெனிகளுக்கு அழைப்பு என தொடர்ச்சியாக மக்கள் மீது மன்மோகன்சிங் தலைமையிலான அரசு  தாக்குதலை தொடுத்துள்ளது.

அலைக்கற்றை , நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி , ஆதர்ஷ் குடியிருப்பு மனை ஒதுக்கீடு என அடுத்தடுத்து அணிவகுத்து வந்த ஊழல்கள் மக்களை அதிர்ச்சியில் உறையவைத்தன. எனவே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. காங்கிரஸ் கட்சி மீது உள்ள அதிருப்தியைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடிக்கத் துடிக்கிறது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மதவெறி நிகழ்ச்சி நிரலை  நேரடியாகவே எடுத்துச்செல்ல பாஜக துணிந்துவிட்டது என்பதைத்தான் அவர்களின் தேர்தல் அறிக்கை உணர்த்துகிறது.  பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்கு கோவில், தமிழக மக்களுக்கு பலனளிக்கக்கூடிய சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவிட மாட்டோம். போன்ற வகுப்புவாத அணுகுமுறையோடு தலித், பழங்குடி மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு தற்போது நடப்பில் உள்ள இடஒதுக்கீட்டை 'சமவாய்ப்பு' என்ற பெயரில் பறிப்போம் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் பன்முக இந்தியாவை சிதைத்து மதவெறி அடிப்படையிலான இந்தியாவை உருவாக்கும் தீய நோக்கம் கொண்டவையாகும்.

ஊழலிலும் தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதிலும் பாஜகவும் காங்கிரசும் ஒன்றுக்கொன்று இளைத்ததும் அல்ல சளைத்ததும் அல்ல. இந்த இரு கட்சிகளும் வீழ்த்தப்பட வேண்டும் என்பதுதான் இடதுசாரிக் கட்சிகளின் விழைவு.

இப்பின்னணியில் தான் மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசை அமைத்திட வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் காங்கிரசை நிராகரிப்போம், பாஜகவை தோற்கடிப்போம் என்ற முழக்கத்தை அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் முன்வைத்துள்ளன. 1999 முதல் 2004 ம்ஆண்டு வரை திமுக, பிஜேபி தலைமையிலான ஆட்சியிலும், அடுத்த 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும் பங்கேற்று இந்த இரண்டு அரசுகளும் அமலாக்கிய மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு துணையாக நின்றது. மேலும் 2-வது அலைக்கற்றை ஊழலில் திமுகவைச் சார்ந்த தலைவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றனர்.

எப்படியாவது மத்தியில் அமையும் ஆட்சியில் பங்கேற்கவேண்டும் என்ற நோக்குடன் மோடி நல்லவர், சிறந்த நிர்வாகி என்று கூறியதோடு காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்டால் அதை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக திமுக தலைமை இரண்டு வாசல்களையும் திறந்து வைத்திருக்கிறது.

அதிமுக தலைமையோ தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மற்றும் மோடியின் மதவெறியை விமர்சிக்கவில்லை. மதவெறியூட்டகூடிய தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்ட பிறகும் அதை விமர்சிக்க மறுப்பது ஏன்  என்று அதிமுகவிற்கு தொடர்ச்சியாக கேள்வியெழுப்பியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மோடி அதிமுக மீது நேரடியாக தாக்குதல் தொடுத்த நிலையில் வேறுவழியின்றி  பாஜகவை மேலோட்டமாக அதிமுக தலைமை விமர்சித்தது.  மோடியின் மதவெறியையோ, பாஜகவின்  தேர்தல் அறிக்கையையோ குறிப்பிட்டுப் பேச அதிமுக தலைமை தயாராக இல்லை. தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் உறவு வைத்துகொள்ளும் நோக்கம் அதிமுக தலைமைக்கு இருப்பதையே பாஜக குறித்த அதனுடைய மென்மையான அணுகுமுறை எடுத்துகாட்டுகிறது. மேலும் மத்திய அரசு கடைபிடித்துவரும் அதே பொருளாதார கொள்கையைத்தான் மாநிலத்தில் அதிமுக அரசு அமலாக்கி வருகிறது.

சுதந்திர இந்தியாவில் இதுவரை காணாத ஊழல் நடந்ததை கண்டு மக்கள் முகம் சுளிக்கின்றனர், அலைக்கற்றை ஊழலில் சிக்கியுள்ள திமுக தலைமையை அதிமுக தலைமை விமர்சிக்கிறது, அதிமுக முதலமைச்சர் மீது பெங்களூரில் சொத்துக் குவிப்பு வழக்கு நடந்துவருவதை திமுக தலைமை பட்டியலிடுகிறது. ஆனால், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மீதான  ஊழல் வழக்கில் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. இதுபற்றி திமுக. அதிமுக தலைமைகள் கருத்து சொல்லாமல் மௌனம் சாதிக்கின்றன அதிமுக ஆட்சியின் போது நடந்த ஊழலுக்கு செல்வகணபதி மீது வழக்கு தொடுக்கப்பட்டு அவர் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது அவருக்கு நீதி மன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

ஊழலில் மட்டும் அல்ல பொருளாதாரக் கொள்கையில். மதவெறி பாஜக பற்றிய அணுகுமுறையில் திமுகவும் அதிமுகவும்  ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே உள்ளன. எனவே பாஜகவுக்கும். காங்கிரசுக்கும். திமுகவும். அதிமுகவும் மாற்றாக இருக்கமுடியாது. தமிழகத்தில் இடதுசாரிகட்சிகள் தான் உண்மையான மாற்று.

இந்நிலையில்  தமிழக தேர்தல் களத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் கம்பீரமாக நிற்கின்றன. ஊழல் கறை படியாத இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே ஊழலைப்பற்றி பேசும் தகுதிகொண்டவை. ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் தாராளமயமாக்கல் கொள்கையை மக்கள் மத்தியில் அம்பலமாக்கும் தைரியம் இடதுசாரிக்கட்சிகளுக்கு மட்டுமே உண்டு.

எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு சுத்தியல் அரிவாள்  நட்சத்திர சின்னத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்திலும், இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவு பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களுக்கு கதிர் சுமக்கும் பெண் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம், மற்ற தொகுதிகளில் பாஜக அணியையும். திமுக அணியையும். காங்கிரசையும் அதிமுகவையும் தோற்கடிக்க இடதுசாரிகள் ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு உரிய சின்னத்திலும் வாக்களிக்க தமிழக வாக்காளர்களை வேண்டுகிறோம்.
 

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...

Leave a Reply