தமிழ்செம்மொழி ஆய்வு நிறுவனத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையினை கைவிடுக! மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்

நாட்டிலேயே முதன் முதலாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் மொழி குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட தமிழ் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தை புதிதாக உருவாக்கவுள்ள பாரதீய பாஷா விஷ்வ வித்யாலாயா (பி.பி.வி.) பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ் செம்மொழி ஆய்வினை மேலும் செழுமைப்படுத்துவதற்கு தமிழ் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்நிறுவனத்தை தொடர்ந்து பாஜக அரசு சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, இந்நிறுவனத்திற்கான இயக்குநரை நியமிக்காமல் நீண்ட காலம் காலியாக வைத்திருந்தது, தமிழ் தெரியாதவர்களை இயக்குநர்களாக நியமிப்பது, இந்நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தாமதப்படுத்துவது போன்றவைகளை மேற்கொண்டு வந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தையே ஒழித்துக்கட்டி மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்தை பி.பி.வி. பல்கலைக்கழகமாக மாற்றி, அதோடு தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்தையும் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் தனித் தன்மையை இழந்து பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக மாற்றப்படும் ஆபத்து ஏற்படும்.

பேச்சு மொழியாக இல்லாத சமஸ்கிருத மொழிக்கு 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், பல ஆய்வு நிறுவனங்களும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடும் உள்ள நிலையில், தமிழ் செம்மொழிக்கு இருக்கும் ஒரே ஆய்வு நிறுவனத்தையும் ஒழித்துக்கட்டும் முயற்சி தமிழ் உள்ளிட்ட இதர மொழிகள் மீது பாஜக அரசு கொண்டுள்ள வன்மத்தை எடுத்துக்காட்டுகிறது. “ஒரே நாடு, ஒரே மொழி” என்ற கோட்பாட்டை அரங்கேற்றுவதற்கு பாஜக அரசு வெறித்தனமாக செயல்படுவதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கையாகும்.

எனவே, தமிழ் செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்தை தொடர்ச்சியாக சென்னையில் செயல்படுத்துவதுடன், அதன் ஆய்வுக்கு தேவையான நிதி மற்றும் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

5000 பட்டதாரி ஆசிரியர்கள், 1250 தமிழாசிரியர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் பணி வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

03.8.2021 பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை – 600 009. வணக்கம்.   பொருள்:- கடந்த ...