தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு: இடஒதுக்கீட்டை அமல்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கல்வி பெறும் உரிமைச்சட்டம் 2009-ன் படி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டுமென ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மீறியும் சமூக நீதியை புறக்கணிக்கும் வகையிலும் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் 5 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்று ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால், ஆந்திரா , அஸ்ஸாம், ஒரிசா போன்ற மாநிலங்களில் 5 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை தகுதித் தேர்வு மதிப்பெண் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இது கடைபிடிக்கப்படாததால் இட ஒதுக்கீட்டால் பயன்பெறும் பகுதியினரில் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, தமிழக அரசாங்கம் தமிழகத்தின் பிரத்தியேக நிலைமைகளை கணக்கில் கொண்டு தகுதித் தேர்வு மதிப்பெண்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய முறையில் தளர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதேபோன்று 69 சதவிகிதம் இடஒதுக்கீடு தவிர மீதமுள்ள 31 சதவிகிதம் என்பது இடஒதுக்கீட்டால் பலனடைவோர் உள்ளிட்ட அனைவரும் போட்டியிடுவதற்கு தகுதியான பணியிடங்களாகும். ஆனால், தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பொதுப்பிரிவு என்பது இடஒதுக்கீட்டால் பயனடையாதோருக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பிற்பட்ட வகுப்பினரில் முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் 122 ஆகும்.

பொதுப்பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளவரின் மதிப்பெண் 116 ஆகும். நடப்பிலுள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் படி பொதுப்பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இதர இடங்களை கம்யூனல் ரோஸ்ட்டர் அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் 2012 இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மாறாகவும் சமூக நீதியை மறுக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நிரப்பப்படாத பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதத்தில் தகுதித் தேர்வுகள் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலையில் நடைபெறும் தகுதித் தேர்வில் கடந்த ஆண்டில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, தமிழக அரசு இந்த பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தகுதித் தேர்வு மதிப்பெண்ணில் தேவையான அளவு மதிப்பெண்களை தளர்த்தியும் பொதுப் பட்டியல் என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும் வகையிலும் கடந்த ஆண்டு தேர்வுகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply