தமிழ்நாடு சட்டப்பேரவை ஜனநாயகத்தை முடமாக்க வேண்டாம்! அதிமுக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் !

21-4-2012


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (21.4.12) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ., கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
 

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜனநாயகத்தை முடமாக்க வேண்டாம்!
அதிமுக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல் !
 

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக்கூட்டத்தில் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதிய நேரம் ஒதுக்காமலும், ஒதுக்கப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது கருத்துக்களை முழுமையாக சொல்ல முடியாமல், தொடர்ந்து அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசுவது அன்றாட நடைமுறையாக மாறி வருகிறது. மொத்தத்தில் அதிமுக அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டக் கூடாது என்பதே ஆளுங்கட்சியின் அணுகுமுறையாக உள்ளது. பல நேரங்களில் தமிழகத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டங்கள் குறித்தும் அவையில் எழுப்புவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரின் அறையை மாற்றி அமைப்பது என்ற பிரச்சனையில் அக்கட்சி தலைவர்களை கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவையில் ஆளும்கட்சியினருக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுகிற போது தவறு செய்கிற ஆளும்கட்சியினர் மீது குறைந்தபட்ச நடவடிக்கைகள் கூட எடுக்கப்படுவதில்லை. மாறாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


ஆளும் கட்சியின் இத்தகைய அணுகுமுறையினால் சட்டமன்ற ஜனநாயகம் முடக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே போவது கவலையளிப்பதாகவே உள்ளது.

தமிழக மக்களின் உரிமைகளையும், பிரச்சனைகளையும் எழுப்பி தீர்வு காண்பதற்கான உயர்ந்த இடமே தமிழ்நாடு சட்டப்பேரவையாகும். ஆனால், ஆளும்கட்சியினர் கடைபிடிக்கும் மேற்கண்ட அணுகுமுறை தமிழக மக்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை சுட்டிக்காட்டுவதுடன், வருங்காலத்தில்  இத்தகைய அணுகுமுறையை கைவிட்டு, சட்டமன்ற ஜனநாயக உரிமைகளை பாதுகாத்திட அதிமுக அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

(ஜி. ராமகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர் 

Check Also

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கவும், சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் அக்.20ல் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்

மருத்துவக் கல்வியில் கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் சூரப்பாவை பதவி ...

Leave a Reply