தமிழ்நாடு 16வது சட்டப் பேரவைத் தேர்தல் – 2021 சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை

1. தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு வேண்டுகோள்

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக – பாஜக கூட்டணியை முறியடித்திட திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து தேர்தல் களம் காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது.

மத்திய ஆட்சியில் உள்ள பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி தமிழகத்தில் கால் பதிக்க தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக மதச்சார்பற்ற பாரம்பரியம் கொண்ட தமிழக அரசியல் களத்தை இந்துத்துவ சக்திகள் கபளீகரம் செய்ய துணிந்துள்ளன. சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி இயக்கங்களும் கூட்டாட்சித் தத்துவமும், மார்க்சிய முற்போக்கு சிந்தனைகளும், சமூக ஒடுக்குமுறை, பெண்ணடிமைத்தனம் இவைகளை எதிர்த்த களமாக அமைந்துள்ள தமிழகத்தில் மதவெறி பிற்போக்கு, பழமைவாத நிலமாக தமிழகத்தை மாற்ற ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பாஜக துணிந்து செயல்பட முனைந்துள்ளது.

நீட் தேர்வு திணிப்பு, இந்தி – சமஸ்கிருதம் திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, பொதுத்துறைகள் தனியாருக்கு தாரை வார்ப்பு, பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் சிறு-குறு தொழில்கள், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்தையும் முடமாக்கி கார்ப்பரேட் மய கொள்கைகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. அனுதினமும் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

ஆட்சியிலிருந்த அதிமுக, மதவெறி, கார்ப்பரேட் ஆதரவு பிஜேபியோடு கூட்டணி சேர்ந்து கொண்டு தமிழக உரிமைகளை காவு கொடுத்துவிட்டது. மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதரித்து அதற்கு வலு சேர்த்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, வேளாண் விரோத சட்டங்களை ஆதரித்தது, குடியுரிமைச் சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு ஆதரவு, தமிழகத்தில் வகுப்புவாத சக்திகளின் நடவடிக்கைகளை அதிகரிக்க உதவிகரமாக இருந்தது என அடுக்கடுக்கான தவறுகளை அதிமுக செய்துள்ளது. மத்திய பிஜேபி அரசு தமிழகத்தை வஞ்சித்த போதும் வாய் திறக்காமல் வேடிக்கை பார்த்தது அதிமுக அரசு.

அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது. சிறு-குறு தொழில்கள் முடங்கியுள்ளன. விவசாயம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஸ்தம்பித்துள்ளன. வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன. சிறு-குறு தொழில் முனைவோர், விவசாயிகள், கைவினைஞர்கள் கடன் வலையில் சிக்கி தற்கொலையில் மாண்டு வருகின்றனர். பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள், காவல் நிலைய சாவுகள் அதிகரித்துள்ளன. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் 15 உயிர்கள் பறிக்கப்பட்டன. போராடும் மக்கள் மீது கண்மூடித்தனமான அடக்குமுறை, கைது, சிறை, வழக்குகள் அதிகரித்துள்ளன. ஜனநாயக உரிமைகள் அனுதினமும் பறிக்கப்படுகிறது.

மறுபக்கம் அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பணியமர்த்தல், பணி மாறுதல், நெடுஞ்சாலை, பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு லஞ்ச – லாவண்யம் பெருக்கெடுத்துள்ளது. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தை மீட்டிட, அதிமுக – பாஜக கூட்டணியை முற்றாக முறியடித்திட களம் காண வேண்டியது அனைத்து தமிழ் மக்களின் கடமையாகும். இதனை நிறைவேற்றும் நோக்கோடு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டுள்ளது.

தமிழக மக்களின் நலன் காக்க அயராமல் களத்தில் நின்று போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று போட்டியிடுகிறது. இத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் சட்டமன்றத்தில் இடம்பெறுவார்கள் என்கிற நம்பிக்கையோடு  கீழ்க்கண்ட தேர்தல் அறிக்கையினை தமிழக வாக்காளர்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசி சமர்ப்பிக்கிறது. இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து பிரச்சனைகளையும் நிறைவேற்ற சட்டமன்றத்தில் உறுதியுடன் போராடுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, அனைத்து தொகுதிகளிலும் அதிமுக – பாஜக கூட்டணியை நிராகரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுக்குமாறு தமிழக வாக்காளப் பெருமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.

இத்தேர்தல் அறிக்கையினை தயாரித்த குழுவின் தலைவர் தோழர் பெ. சண்முகம் மற்றும் தோழர்கள் உ. வாசுகி, என். குணசேகரன், க. கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், கே. பாலபாரதி Ex. MLA, சு. வெங்கடேசன் M.P., ஜி. சுகுமாறன், பி. சுகந்தி, கே. சாமுவேல்ராஜ், எஸ். கண்ணன், தீபா, கே. சுவாமிநாதன், பேரா. அருணன், ஜா.மாதவராஜ் ஆகியோருக்கு கட்சியின் மாநில செயற்குழு  பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இங்ஙனம்,
சென்னை – 18.3.2021
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ்நாடு மாநிலக்குழு

2. மாநில உரிமைகள்
கூட்டாட்சி தத்துவத்தை அமலாக்க அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து கீழ்க்கண்ட துறைகளில் மாநில உரிமைகளை மீட்டெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும்.

 • ஆளுநர் பதவிகள் அவசியம் என கருதும் பட்சத்தில், சர்க்காரியா கமிஷன் வழிகாட்டுதல் அடிப்படையில் முதலமைச்சரால் முன்மொழியப்படும் மூன்று நபர்களில் ஒருவரையே ஆளுநராக மத்திய அரசு நியமிக்க வலியுறுத்துவோம்.
 • மாநில அரசு இயற்றி அனுப்பும் சட்டங்களுக்கு குறிப்பிட்ட கால அளவிற்குள் ஆளுநரும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க வலியுறுத்துவோம்.
 • மாநில அரசின் கொள்கை முடிவுகள் குறித்து ஆளுநர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை பொதுவெளியில் தெரிவிப்பது தடை செய்ய வலியுறுத்தப்படும்.
 • பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் இருப்பதை நீக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
 • மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி உள்ளிட்ட துறைகள்  மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட தொடர்ந்து குரலெழுப்புவோம்.
 • உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச அமைப்பின் நிர்ப்பந்தம் அல்லது இருதரப்பு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும்போது அவை மாநில நலன்களைப் பாதிக்கும் எனில், மாநிலங்களுடன் விவாதித்து முடிவெடுப்பதை கட்டாயமாக்க வேண்டுமென வலியுறுத்துவோம்.
 • குடிமைப் பணிகள் மற்றும் பணியாளர்கள் வரன்முறை சட்டம் மற்றும் மாநில அரசுகள் போதிய அதிகாரமின்றி உள்ள நிலை மாற்ற முயற்சிப்போம்.
 • கல்வி, வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடுகளில் உள்ஒதுக்கீடு, பணிசார் முன்னுரிமைகள் போன்றவற்றில் மத்திய அரசின் குறுக்கீடுகள், இடையூறுகள் தடுக்கப்பட வலியுறுத்துவோம்.
 • என்.ஐ.ஏ., உபா உள்ளிட்ட எந்த சட்டத்தின் அடிப்படையிலும் மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அமைப்புகள் கைது செய்வது உள்ளிட்ட செயல்களை  தடுக்க வற்புறுத்துவோம்.
 • பெரும்பாலான பணிகளைச் செய்து வரும் மாநில அரசுகளின் நிதிநிலையை ஈடுகொடுத்திட மத்திய மொத்த வரிவருவாயில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மாநிலங்களுக்கு நிபந்தனைகளின்றியும், பணிகளுடன் இணைப்பின்றியும் வழங்கிட வற்புறுத்துவோம்.
 • நிதி வரவுக்கான மத்திய அரசின் தாமதங்களை சரி செய்யவும், மாநிலங்களிடை மன்றம் உள்ளிட்ட இருதரப்பு அமைப்புகள் முறையாக செயல்படுத்தப்படவும் நிதிஆயோக், நிதிக்குழு, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளின் முடிவெடுக்கும் அடுக்குகளில் மாநிலத்தின் பிரதிநிதிகள் இடம் பெறுவதை உத்தரவாதப்படுத்தவும் வலியுறுத்துவோம்.

3. தமிழ்மொழி வளர்ச்சி

 • அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழியாக்க குரல் கொடுப்போம். அந்தநிலை எட்டப்படும் வரை ஆங்கிலம் ஒரு துணை மொழியாக தொடர வலியுறுத்துவோம்.
 • இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை நிறுத்த நடவடிக்கை எடுக்க பாடுபடுவோம்.
 • தமிழகத்தில் நீதி, நிர்வாகம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் அன்னைத் தமிழே ஆட்சி நடத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாக பின்பற்றவும் ஆவன செய்ய வலியுறுத்துவோம். கல்வியின் அனைத்து மட்டங்களிலும் தமிழ்வழி பயிற்றுக் கல்வி முறை உறுதி செய்ய பாடுபடுவோம்.
 • தமிழகத்தில் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க பாடுபடுவோம்.
 • தமிழ்நாட்டில் மத்திய அரசு பணியாக இருந்தாலும் அனைத்து துறைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியில் சேர தமிழ்மொழியில் தேர்ச்சிப்பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.
 • உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழைப் பயன்படுத்த தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்துவோம்.
 • கேரளாவைப் போல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படுவதோடு குடமுழுக்கு உள்ளிட்ட மதவழிபாட்டு நிகழ்ச்சிகள் தமிழில் நடத்த வலியுறுத்துவோம்.
 • தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகையில் தமிழ்மொழிக்காக உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வுக்கான இருக்கைகள் துறைகள் உருவாக்க வற்புறுத்துவோம்.
 • சாகித்ய அகாடமி போன்று தமிழ் படைப்பாளிகளை அங்கீகரிக்க தமிழ் அகாடமி உருவாக்க வலியுறுத்துவோம்.
 • சென்னையில் அமைக்கப் பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (Central Institute of Classical Tamil) தன்னாட்சி பெற்ற அமைப்பாகத் தொடர்ந்து சென்னையிலேயே இயங்க வலியுறுத்துவோம்.

4. அகழாய்வு மற்றும் பண்பாடு

 • தமிழகத்தில் தொல் எச்சங்கள் கிடைத்துள்ள அனைத்து இடங்களிலும் மத்திய மற்றும் மாநில அகழாய்வுத் துறைகள் மூலம் முழுமையான ஆய்வு மேற்கொள்ள வற்புறுத்துவோம்
 • கீழடி உட்பட பல்வேறு இடங்களில் கிடைத்துள்ள தொல் எச்சங்கள் வரலாற்றுச் சின்னங்களைக் கொண்டு ஆங்காங்கே அருங்காட்சியகங்கள் அமைக்க பாடுபடுவோம். பூம்புகார், கொற்கை உள்ளிட்ட கடற்கரை நகரங்களில் முழுமையான ஆய்வு நடத்தப்பட்டு பழந்தமிழர்களின் வாணிப மற்றும் பண்பாட்டுத் தொடர்பு குறித்து முழுமையாக வெளிக்கொணர வற்புறுத்துவோம்.
 • தமிழ்நாட்டு கல்வெட்டு படிகள் பராமரிப்பு மையத்தை சென்னையிலேயே அமைத்திட மத்திய அரசின் தொல்லியியல் துறையை வற்புறுத்துவோம்.
 • இந்தியாவிலேயே அதிகமாக கல்வெட்டுக்கள் கிடைக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது.  இதுவரை அச்சேற்றப்படாத பழமையான நூல்கள் ஆய்வு செய்யப்பட்டு வெளியிட வலியுறுத்துவோம்.

பண்பாடு

 • பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியில் பன்முகப் பண்பாடு இந்தியாவின் சவாலாக உள்ளன. பன்முகப் பண்பாடு பேணிப் பாதுகாக்க பாடுபடுவோம். அனைத்து தேசிய இனங்களின் உரிமைகள் தனித்துவ அடையாளங்கள் போற்றி பாதுகாக்கப்பட வற்புறுத்துவோம். இதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு  பாதுகாக்கப்பட தொடர்ந்து குரலெழுப்புவோம்.

5. ஜனநாயக உரிமை பாதுகாப்பு

கருத்துச் சுதந்திரம்

 • மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை, படைப்புரிமைகளை பாதுகாக்க குரலெழுப்புவோம். அரசை நியாயமாக விமர்சிப்பவர்கள் மீது அவதூறு வழக்குகள் தொடுக்கப்படுவதை தடுக்க வலியுறுத்துவோம். அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தை அனைத்து குடிமக்களும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வற்புறுத்துவோம்.
 • நாடகம்  உள்ளிட்ட கலை வடிவங்களில்  மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் தலையீடு தடுக்கவும், கலை இரவு உள்ளிட்ட நிகழ்வுகள் இரவு முழுவதும் நடத்தவும், இரவு 10 மணிக்கு மேல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்ற கெடுபிடி போக்கவும் வற்புறுத்துவோம்.
 • பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டுள்ளன. இது அதிகரிக்கப்படுவதோடு, மக்கள் கூடும் இடங்களில் அரசியல் மற்றும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தவும், சென்னை கடற்கரையில் பொதுக் கூட்டம் நடத்திடவும் குரலெழுப்புவோம்.
 • சாதி வெறி, மதவெறி சக்திகளால் பத்திரிகையாளர்கள், படைப்பாளர்கள் அச்சுறுத்தப்படுவதையும் அவதூறுக்கு உள்ளாக்கப்படுவதையும் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள பாடுபடுவோம். குறிப்பாக பெண் படைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதை தடுத்து அவர்களது கருத்துச் சுதந்திரம் பாதுகாக்க வற்புறுத்துவோம்.
 • சமூக வலைத்தளங்களின் செயல்பாடு ஆக்கப்பூர்வமாக இருப்பதை உறுதி செய்யும் அதே நேரத்தில் அதை அவதூறு மற்றும் மிரட்டலுக்கு பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

6. மதச்சார்பின்மை

 • நமது அரசியல் சாசனம் (சரத்து 25) மக்களுக்கு மத மற்றும் மனசாட்சி சுதந்திரம் வழங்கியிருக்கிறது. அதன்படி எந்தவொரு மதத்தையும் பின்பற்ற, பரப்ப குடி மக்களுக்கு உரிமை உண்டு. அதேபோல எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமல் மனசாட்சிப்படி வாழவும் உரிமை உண்டு. இதை பாதுகாக்க, மதம் கடந்த திருமணங்களுக்கு உரிமை இருப்பதை பாதுகாப்பது போன்ற பணிகளின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்நிற்கும்.
 • இந்தியாவின் பல பகுதிகளைப் போல தமிழ்நாட்டிலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மதச் சிறுபான்மையோராக உள்ளனர். தங்களுக்கான கல்வி நிறுவனங்களை அமைக்கவும், நிர்வகிக்கவுமான உரிமையை நமது அரசியல் சாசனம் (சரத்து 30) வழங்கியுள்ளது. சிறுபான்மையோரின் கல்வி உரிமைக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாப்பு அரணாகத் திகழும்.
 • அரசு மதம் சாராமல் இருப்பதை உறுதி செய்யவும். நமது அரசியல் சாசனத்தின் “மதச்சார்பற்ற அரசு” எனும் கோட்பாடு சர்வசாதாரணமாகக் கிழித்தெறியப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உறுதியான செயல்பாடுகளை முன்னெடுப்போம்.

7. வருவாய் ஈட்டல்கள்

 • மாநிலத்தின் நிதிநெருக்கடியை சமாளித்திட நிறுத்தப்பட்டுள்ள தாது மணல் வியாபாரத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். வரம்புக்குட்பட்ட ஆற்று மணல் வியாபாரத்தை அரசு நேரடியாக நடத்துவதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் மணல் கிடைப்பதோடு, அரசும் வருவாய் ஈட்ட முடியும்.   சுற்றுச்சூழலுக்கு கேடு நேராத வகையில் கிரானைட் தொழிலை டாமின் மூலம் அரசே நேரடியாக நடத்த வேண்டும். இதன் மூலம் அந்நியச்செலாவனி அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பு பெருகும், மாநில அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தமிழகத்தில் எடுக்கப்படும் கனிமங்களுக்கான ராயல்டி விகிதத்தை கூடுதலாக பெறுவதற்கு மாநில அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய பெருநிறுவனங்கள் போன்று அரசு நிலங்களில் நீண்ட கால குத்தகைக்கு இருப்போரிடம் இன்றைய சந்தை மதிப்பிற்கு உகந்தவாறு குத்தகை நிர்ணயம் செய்திடல் வேண்டும். சகாயம் கமிசன் அறிக்கையின்படி தமிழக அரசுக்கு வரவேண்டிய ரூபாய் 1 லட்சம் கோடியை வசூலிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

8. ஊழல் ஒழிப்பு

 • உயர்நிலை அளவிலான ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை நடைமுறைப்படுத்த குரலெழுப்புவோம். இந்த சட்டத்தின்படி கீழ்நிலை அரசு நிர்வாகம் துவங்கி முதல்வர் அலுவலகம் வரை ஊழலை அறவே ஒழிக்கும் வகையில் விதிகளை கடுமையாக்க பாடுபடுவோம்.
 • ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய குரலெழுப்புவோம். முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தவைர்கள், அரசு உயர்அதிகாரிகள் தங்களது சொத்து விபரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட வேண்டும் என்பதை கட்டாயமாக்க பாடுபடுவோம்.
 • அரசு கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்களும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வலியுறுத்துவோம். அனைத்து அரசு சார் ஒப்பந்தங்களிலும் மின்னணு முறை பின்பற்றப்படுவதோடு, விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து விபரங்களும் மக்களுக்கு அறிவிக்க வற்புறுத்துவோம்.
 • அரசுக்கும் தனியாருக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் லோக் ஆயுக்தா சட்டவரம்பிற்குள் கொண்டு வர குரலெழுப்புவோம். தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அரசு-தனியார் கூட்டு திட்டங்கள் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டுவர வற்புறுத்துவோம். அமைப்புக்குள்ளேயிருந்து ஊழலை அம்பலப்படுத்துபவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வலியுறுத்துவோம். ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட குரலெழுப்புவோம்.
 • முதல்வர் துவங்கி அனைத்து அமைச்சர்கள் வரை அனைவர் மீதான ஊழல் புகார் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வழக்குகள் தொடுக்க குரலெழுப்புவோம். அனைத்து பணி நியமனங்களும் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய பாடுபடுவோம்.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை

 • அரசிடமிருந்து மக்களுக்கு தேவையான சேவையை விரைவாகவும் வெளிப்படையாகவும் பெறுவதற்கு, சேவை பெறும் உரிமைச்சட்டம் நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
 • சட்டமன்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி மற்றும் சமூகவலை தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படுவதை வற்புறுத்துவோம்.
 • சமூக விரோத கும்பல்கள் நிலம், மனை, வீடுகளை அபகரிப்பதை தடுக்க பத்திரப்பதிவு துறையில் உயர்தொழில்நுட்பம்  பின்பற்றப்பட்டு, லஞ்ச நடைமுறை முற்றாக தடுக்க வலியுறுத்துவோம். அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆடம்பரமின்றி எளிமையாக நடத்த வற்புறுத்துவோம். அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டு, இ-சேவையில் இணைக்க வற்புறுத்துவோம். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் முதல்வர் அலுவலகம் துவங்கி, கிராம நிர்வாக அலுவலகம் வரை மக்களால் கேட்கப்படும் தகவல்கள் தரப்படுவது கட்டாயமாக்க குரலெழுப்புவோம். அவ்வாறு தர மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட வேண்டுமென வற்புறுத்துவோம்.
 • அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும் வெளிப்படையாக இணைய தளத்தில் உடனுக்குடன் வெளியிட வற்புறுத்துவோம்.

9. தொழில் வளர்ச்சி

 • இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் நான்காம் இடத்தில் உள்ள தமிழகத்தை முதலிடத்திற்கு அழைத்து செல்ல பாடுபடுவோம். அதற்குகந்த வகையில், முதலீட்டிற்கும் வேலைவாய்ப்பிற்கும் உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம். குறிப்பாக, நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கு அளிக்கும் சலுகைகளுக்கு உத்தரவாதம் அளிப்பது அரசின் கடமை. அதேபோல் அரசுக்கு, நிறுவனங்கள் அளித்த வேலை வாய்ப்பு மற்றும் சமூக பங்களிப்பை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
 • கார் தொழிற்சாலைகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருப்பதை மேலும் விரிவாக்க வேண்டிய அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், ஸ்ரீபெரும்புதூர் முதல் ஓசூர் வரை தொழிற்சாலை காரிடார் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க  வற்புறுத்துவோம். நிலப் பயன்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி விவசாய உற்பத்தி பாதிக்காமல், தொழில் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
 • கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள பஞ்சாலைகள் புத்தாக்கம் பெற்று முன்னேற்றம் காண திட்டங்கள் உருவாக்க பாடுபடுவோம். பஞ்சாலைகள் முழு உற்பத்தியுடன் ஈடுபட முதலீடுகள் மற்றும் இயந்திர வசதிகள் செய்து தர வலியுறுத்துவோம்.
 • ஈரோடு,  திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த சொல்லளவில் உள்ள ஜவுளி பூங்கா செயல் வடிவம் பெற பாடுபடுவோம்.
 • அரசு மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் சிமெண்ட் ஆலைகள் உற்பத்தி திறன் அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், கல் மற்றும் மணல் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் ஆகியவை குறித்து கூட்டாக ஆய்வுகள் மேற்கொண்டு, உற்பத்தியில் முன்னேற்றம் காணவும் மற்றும் கட்டுமான தொழில் வளர்ச்சி காணவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
 • கடலூர், நாகை, தூத்துக்குடி, செய்யூர் என மின் உற்பத்திக்கான திட்டமிடல் மற்றும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்கவும், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.
 • நாங்குநேரி தொழில் பூங்கா, மதுரை தொழில் பூங்கா, பெரம்பலூர் தொழில் பூங்கா ஆகியவற்றுக்கான தடங்கல்களைத் தகர்த்து, கட்டமைப்பு பணிகள் நிறைவு பெறவும், ஐ.டி உள்ளிட்ட தொழில்கள் மேலும் முன்னேற்றம் காணவும், மூடப்பட்டுள்ள நோக்கியா, ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட ஆலைகள் திறக்கப்படவும், வேலை இழந்தோருக்கும், வேலை தேடுவோருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க முதலீடுகளூக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்துவோம்.

10. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக

 • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வரையறையை குறு தொழில் முதலீட்டு வரம்பை 75 லட்சமாகவும், சிறு தொழில் வரம்பை 10 கோடி வரையிலும், உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இது சந்தை வளர்ச்சியில் பணமதிப்பு குறைந்துள்ள காரணத்தால் மேற்படி உற்பத்தியாளர்களுக்கு, அரசின் சலுகை மற்றும் கட்டணங்கள் தீர்மானிக்க உதவியாக இருக்கும்.
 • எம்எஸ்எம்இ (MSME)-க்கான ஒப்புதலை வழங்க ஒருங்கிணைந்த ஒற்றைச் சாளர நிர்வாக அமைப்பு தேவை என்ற கோரிக்கை, மூலப்பொருள்களின் விலை ஜி.எஸ்.டி. காரணமாக 35 சதவிகிதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது, இதை ஒழுங்கு செய்து, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தாட்கோ அமைப்புகள் மூலம் வழங்கப்படும் கடன் வசதிகள் அதிகரிக்கவும் செய்து, முன்னேற்றம் ஏற்படுத்த பாடுபடுவோம்.
 • ஜாப் ஆர்டர்களுக்கும் 18 சத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை உருவாக்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை மதிப்பீடு செய்து வரி குறைப்பு, தேசிய, சர்வதேசிய அளவில் நடைபெறும் கண்காட்சிகளில் பங்கேற்பாளர் மற்றும் பார்வையாளர்களாக பங்கு கொள்ளவும், சந்தைப் படுத்தவும் உதவிகள் செய்ய வலியுறுத்துவோம். அரசின் கொள்முதல் 20 சதம் என உயர்த்திட வற்புறுத்துவோம்.
 • கொரோனா, ஜி.எஸ்.டி. பணமதிப்பு நீக்கம் ஆகிய காரணங்களால் பாதிப்படைந்துள்ள தொழில்களை மேம்படுத்த உதவிடும் வகையில், சொத்துவரி, தண்ணீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை இரண்டு ஆண்டுகள் தள்ளுபடி செய்யும் வேண்டுகோள் எம்எஸ்எம்இ நிறுவனங்களிடம் அதிகரித்துள்ளது. இது குறித்து கலந்தாலோசனைகள் மூலம் உரிய நிவாரணம் கிடைக்க ஆவன செய்ய வற்புறுத்துவோம்.
 • கோவை மண்டலத்தில் மோட்டார் பம்ப், நகைத் தொழில், வெட் கிரைண்டர், ஜவுளி கோழிப்பண்ணை ஆகிய சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கும், சிட்கோ (சிறு தொழில் வளர்ச்சி கழகம்) மூலமான தொழிற்பேட்டைகள் உருவாக்கிட ஆவன செய்ய வலியுறுத்துவோம்.
 • சிதம்பரத்தில் கவரிங் நகை தொழில் மையம் உருவாக்க குரலெழுப்புவோம்.
 • தென் மாவட்டங்களில் எண்ணெய், பனை, தீப்பெட்டி, பட்டாசு போன்ற தொழில்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க பாடுபடுவோம். செங்கல், கயிறு , ஆடைகள் தயாரிப்பு ஆகிய தொழில் கூட்டுறவு மூலமான நடவடிக்கைகள் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கரூர் பகுதிகளில், தலித் சமூகத்தினருக்காக அறிவிக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு செயலுக்கு கொண்டு வர வற்புறுத்துவோம்.

11. வேளாண்மை

 • விவசாய நிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தாத வகையில் விவசாய நிலப்பயன்பாட்டுக் கொள்கை உருவாக்க குரலெழுப்புவோம். விவசாயிகளின் ஒப்புதலின்றி நிலம் கையகப்படுத்தப்படாது. அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்கு விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவோம். விவசாயத்திற்கு ஏற்ற தரிசு நிலங்களை நிலமற்றவர்களுக்கு வழங்கிட வற்புறுத்துவோம்.
 • கடன்கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க வற்புறுத்துவோம். கடன் வழங்குவதில் சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்க வற்புறுத்துவோம்.
 • அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவிகிதம் உயர்த்தி தீர்மானிக்கப்பட பாடுபடுவோம். கூட்டுறவு அமைப்புகள் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு நியாயமான விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்ய வலியுறுத்துவோம். இதற்கேற்ப கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்த வற்புறுத்துவோம்.
 • வேளாண் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கான குளிர்பதன கிடங்குகள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அமைக்கப்பட வேண்டுமென வற்புறுத்துவோம். விவசாயம் யந்திரமயமாகி வரும் நிலையில் ஒவ்வொரு ஊராட்சியிலும் அரசின் சார்பில் டிராக்டர், அறுவடை இயந்திரம் போன்றவை வழங்க வற்புறுத்துவோம். விவசாயிகளுக்கு குறைந்த வாடகையிலும், ஏழை – சிறு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும் வற்புறுத்துவோம்.
 • மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் விரோத சட்டங்களும், மாநில அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய விரோத சட்டங்களும் திரும்பப் பெற வேண்டுனெ தொடர்ந்து குரலெழுப்புவோம்.
 • விவசாயத்திற்காக மின்இணைப்பு கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும்  இலவசமாக கொடுக்கப்பட வேண்டுமென வற்புறுத்துவோம். விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் வகையிலான நிர்ப்பந்தங்களை ஏற்க மாட்டோம். மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் உத்தரவாதப்படுத்தப்பட வலியுறுத்துவோம்.
 • வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதற்கான சிறு தொழிற்சாலைகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்தித்தர வலியுறுத்துவோம்.
 • தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டம் விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமென வற்புறுத்துவோம்.
 • இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு, இதற்கென்று தனி விற்பனை மையங்கள் அமைத்திடவும், உதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வற்புறுத்துவோம்.
 • கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசின் பரிந்துரை விலைகள் தொடர்ந்து வழங்கிட குரலெழுப்புவோம். சர்க்கரை கட்டுப்பாட்டுச்சட்டம் 1965 செம்மையாக அமல்படுத்தவும்,  கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் பாதுகாக்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் வலியுறுத்துவோம். வண்டி வாடகை, வெட்டுக்கூலி ஆகியவற்றை ஆலை நிர்வாகங்களே ஏற்கும் வழி வகை காணப்பட வேண்டுமென வற்புறுத்துவேம்.
 • தென்னை விவசாயிகளிடமிருந்து உரித்த தேங்காய் மற்றும் கொப்பரை கொள்முதல் செய்ய வற்புறுத்துவோம்.
 • கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, இறைச்சிக்கென்று கால்நடைகள் வளர்ப்பது ஆகியவைகளை ஊக்குவிக்க வலியுறுத்துவோம்.
 • பாசனத்திற்கென்று தனித்துறை உருவாக்க குரலெழுப்புவோம்.
 • பாசன சங்கங்களுக்கான தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயக முறைப்படி நடத்திட வற்புறுத்துவோம்.
 • வேளாண் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதுடன் புதிய ஆராய்ச்சிகள் ஊக்குவிக்க வலியுறுத்துவோம்.
 • வேளாண்மை பல்கலைக்கழகங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதுடன் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்ப வற்புறுத்துவோம்.
 • 60 வயதை கடந்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து முதியோருக்கும் முதியோர் ஓய்வூதியம் ரூ.3000/- ஆக உயத்தி வழங்கிட வேண்டுமென குரலெழுப்புவோம்.

12. நதிநீர், பாசனம்

 • தமிழகத்திற்குரிய பாசன உரிமைகள் நிலைநிறுத்தவும், அண்டை மாநிலங்களுடனான நதி நீர் தாவாக்கள் பேச்சுவார்த்தை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வற்புறுத்துவோம்.
 • நீர்நிலைகள் தூர் வாரப்பட்டு செம்மையாக பராமரிக்கவும், நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தவும் குரலெழுப்புவோம்.
 • காவிரி – வைகை – குண்டாறு, அவிநாசி, அத்திக்கடவு போன்ற உபரி நீரை பயன்படுத்தும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்த வற்புறுத்துவோம். தமிழக மற்றும் தென்னிந்திய நதிகளை இணைத்திட வற்புறுத்துவோம்.
 • பலதுறைகளின் கீழ் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீராதாரங்களை ஒருங்கிணைத்து தூர்வாரி பராமரிக்க ஒரு ஆணையம் உருவாக்கிட வற்புறுத்துவோம்.

13. தொழிலாளர்கள் நலன்

 • தொழிலாளர் நலச் சட்டங்களில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சட்ட தொகுப்புகளில் தொழிலாளருக்கு பாதகமான அம்சங்கள் நீக்கப்படுவதற்கும், மாநில விதிகளில் தொழிலாளருக்கு சாதகமான அம்சங்கள் இடம்பெறவும் நடவடிக்கை மேற்கொள்ள பாடுபடுவோம்.
 • விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு அரசு மற்றும் தனியார் துறைகளில் அனைத்து பிரிவு தொழிலாளருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 21,000/- வழங்கிட குரலெழுப்புவோம்.
 • அரசு துறைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் மதிப்பூதியம், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், அரசு துறைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஒப்பந்தம் மற்றும் பயிற்சி தொழிலாளர்களின் பணிகளை  வரன்முறைப்படுத்தவும், அரசு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் அவுட்சோசிங் முறை ஒழிக்கப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கும், மாற்றுத்திறனாளி தொழிலாளருக்கு இலகு பணி வழங்கவும், சட்டப்படியான சலுகைகளுக்கும் வழிவகை செய்ய பாடுபடுவோம்.
 • தொழிலாளி-முதலாளி இடையிலான தொழிற்தாவாக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு ஏற்படுத்தவும், பணி ஓய்வு, பணியின் போது  விபத்து மற்றும் மரணம் உள்ளிட்டவைகளில் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் குடும்பத்தாருக்கு சேர வேண்டிய சட்டப்படியான பணப்பயன்கள் காலதாமதமின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்துவோம்.
 • தமிழ்நாட்டில் உள்ள மத்திய  பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை  திரும்பபெற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை வலியுறுத்துவோம்.
 • முறைசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் நல வாரியங்களும் தீர்மானிக்கப்பட்ட நலவாரியக் குழுக்கள் மூலமே செயல்படுத்தவும், வாரிய உறுப்பினர்கள் பயன்பெற தடையாக உள்ள நிபந்தனைகளை ரத்து செய்யவும், முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு, புதுப்பித்தல், பணப்பயன்கள், ஓய்வூதியம் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட வலியுறுத்துவோம்.
 • பாஜக அரசு இயற்ற துடிக்கும் ‘மோட்டார் வாகன சட்டம், மின்சார திருத்தச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர்களை,  சுயத்தொழில் செய்வோரை, பொதுமக்களை பாதிக்கும் சட்டங்களை’ திரும்ப பெற போராடுவோம்.
 • விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும், அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் ஒரு குழு அமைத்து உரிய முறையில் தீர்வு காண வலியுறுத்துவோம்.
 • அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளருக்கு சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தவும், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் சட்டப்படியான 8 மணி நேரம் வேலை என்பதை கட்டாயமாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பாடுபடுவோம்.
 • வேலை தேடி நகர்ப்புறங்களை நோக்கிச் செல்லும் கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள் உருவாக்கிட வற்புறுத்துவோம்.
 • பாரம்பரியமான கைத்தறி, தீப்பெட்டி, பட்டாசு தொழில்களில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள பாடுபடுவோம்.
 • சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட நவீன கொத்தடிமை முறைகளைத் தடுக்க அரசின் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்வோம்.

14. விவசாயத் தொழிலாளர் நலன்

 • நிலமற்ற ஏழை விவசாயக்கூலித் தொழிலாளர்களுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும், நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி நிலம் கிடைக்கவும், பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தகுதியான தலித் குடும்பங்களுக்கு நிலம் வழங்கவும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
 • தமிழகத்தில் பெரும்பான்மையான கிராமப்புற மக்கள் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளதை கணக்கில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்திடவும், திட்டத்தின் வேலை நாட்களை 200 நாட்களாக்கவும், தினக்கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்திட வலியுறுத்துவோம். பேரூராட்சிப்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வேலைவாய்ப்பளிக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்திட பாடுபடுவோம்.
 • விவசாயம் மற்றும் அதன் சார்பு பணிகளில் ஈடுபடும் விவசாயக்கூலித் தொழிலாளர்களின் குடும்ப செலவுகளை ஈடுகட்டும் வகையில் தினக்கூலி ஆணுக்கு ரூ.600/-, பெண்ணுக்கு ரூ.400/- ஆக அரசு நிர்ணயம் செய்திட குரல் கொடுப்போம்.
 • நலத்திட்ட உதவிகளும், அரசின் காப்பீடு திட்டமும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் உறுதியான முறையில் விவசாயிகள் – விவசாயத்தொழிலாளர்கள் நல வாரிய சட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்துவோம்.
 • கிராமப்புற உழைப்பாளிகள் போதிய வருமானமின்றி வாடும் நிலையில் பொது விநியோகத்திட்டத்தை மேலும் பலப்படுத்த, அத்தியாவசிய பொருட்களும் விலையில்லாமல் வழங்கிட தொடர்ந்து வற்புறுத்துவோம்.
 • அதிகரித்து வரும் தலித் ஒடுக்குமுறையை தடுத்திட நீதிபதிகள் – உயரதிகாரிகள் – சமூக வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் மூலம் ஜனநாயக ரீதியான ஒன்றுபட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியாக வலியுறுத்துவோம்.

15. மதுவிலக்கு மற்றும் போதைப்பழக்கம்

 • தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு, மதுவிலக்கை அமலாக்கிட வற்புறுத்துவோம்.
 • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபான கடைகள் மூடப்படுவதையும், புதிய மதுபான கடைகள் திறக்கப்பட கூடாது எனவும், மதுபான கடைகளில் பணிபுரியும் ஊழியர்களது நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பணிவரன்முறைப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்கிடவும் வற்புறுத்துவோம்.
 • போதைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுத்து நிறுத்தவும், பெண்கள் மீதான வன்முறைக்கு முக்கிய காரணமான மது விற்பனை படிப்படியாக  குறைக்கப்படுவதையும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரியாக போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மையம், அவர்களின் குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் தருவதற்கான மனநல மருத்துவர் நியமிக்கப்படவும், மாவட்ட அளவில் குடி போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் அமைக்கவும் வலியுறுத்துவோம்.

16. பெண்கள் நலன்

 • பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிட குரலெழுப்புவோம்.
 • தமிழகத்தில் மாநில மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த போதுமான அதிகாரம், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த வலியுறுத்துவோம். பாலின சமத்துவ பார்வையும் சமூக அக்கறையும் கொண்டவர்கள் மாநில மகளிர் ஆணைய தலைவராகவும், உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட வலியுறுத்துவோம். வீடு, வீட்டுமனை பட்டாக்கள், நில விநியோகம் இவற்றில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க குரலெழுப்புவோம்.  குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறுகிய கால தங்கும் விடுதிகள் மாவட்டங்கள் தோறும் அமைக்கவும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்திற்கான பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணிக்கை அதிகப்படுத்தவும் வலியுறுத்துவோம். பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி துவங்கி நிவாரணம் உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் விதத்தில் உதவி மையங்கள் மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்த பாடுபடுவோம். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் சாட்சிகளை பாதுகாக்க சட்டம் (Witness Protection Act) கொண்டு வர வலியுறுத்துவோம். மகளிர் காவல் நிலையங்கள் அதிகரிக்கவும், “காவலன் ஆப்”பை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்வதை வற்புறுத்துவோம்.  காவல்துறை, அரசு வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பாலியல் நிகர்நிலை பயிற்சி கொடுக்க வற்புறுத்துவோம்.
 • அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கிடவும்,  நகரங்கள் தோறும் தங்கும் விடுதிகள் துவங்கிடவும், அனைத்து நகராட்சிகளிலும் பெண்களுக்கு தனி உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கவும் வற்புறுத்துவோம்.
 • கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்களுக்கு ஆண் பிள்ளைகள் இருந்தாலும் மாதம் ரூ.3,000/- உதவித் தொகை வழங்க வற்புறுத்துவோம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளின் திருமண உதவித் தொகையாக ரூ.2 லட்சம் வழங்கிட வலியுறுத்துவோம். பெண்சிசுக் கொலையை தடுக்கும் நடவடிக்கையாக இரு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் இரு குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கவும், குடியிருப்பு பகுதிகளில் அரசு குழந்தைகள் காப்பகம் அமைக்கவும் வற்புறுத்துவோம். பிசிபிஎன்டிடி (PCPNDT) சட்டம் முறையாக அமல்படுத்த மாவட்டங்கள் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வற்புறுத்துவோம்.
 • பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மறுக்கும் அதிகாரிகளின் மீது 166-ஏ பிரிவின்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். சைபர் கிரைம் குற்றங்களை தடுத்து நிறுத்த உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமெனவும், தேங்கிக் கிடக்கும் பெண்கள், குழந்தைகளின் மீதான வன்முறை வழக்குகளை விசாரிக்க மாவட்டங்கள் தோறும் விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கிடவும்,  அனைத்து வன்முறை வழக்குகளும் 6 மாத காலத்திற்குள் விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கிடவும் வலியுறுத்துவோம்.

17. இளைஞர் நலன்

 • ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருப்பது அந்நாட்டின் இளைஞர்கள். சரியான வழிகாட்டல் இளைஞர்களின் இயல்புக்கு தக்கவாறு இருக்கும் பட்சத்தில் அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இதற்காக பிரத்யேக இளைஞர்களுக்கான  மாநில இளைஞர் ஆணையம் (State Youth Commission) உருவாக்க பாடுபடுவோம்.
 • கல்வி, வேலைவாய்ப்பு முதல் பொழுதுபோக்கு மற்றும் திறன்வளர்ப்பு என இளைஞர்களை மையப்படுத்தி திறன் மற்றும் பயிற்சி திட்டங்கள் மேற்கொள்ளவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் உருவாக்கிட வலியுறுத்துவோம். இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டி முதல் மனநல ஆலோசனை போன்ற பிரத்யோக திட்டங்கள் உருவாக்க வற்புறுத்துவோம்.

18. குழந்தைகள் – சிறுவர் நலன்

 • பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டுமென குரலெழுப்புவோம். போக்சோ  சட்டத்தை முறையாக அமல்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள்  அமைத்திடவும், இச்சட்டத்தை கண்காணிப்பதற்கு தனிக்குழு உருவாக்க வற்புறுத்துவோம். இதில் குழந்தைகள் உரிமை நிபுணத்துவம் பெற்றவர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்வோம். குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறையை தடுப்பதற்கு கிராம அளவில் கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கிடவும், மாவட்ட அளவில் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த  தனி அலுவலகம் மற்றும் அலுவலர் நியமிக்கப்படுவதை உறுதி செய்வோம்.  குழந்தை கடத்தல் தடுப்பு சட்டம்,  பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாச பதிவுகளை தடுப்பதற்கான சிறப்பு சட்டம் கொண்டு வர பாடுபடுவோம்.
 • மாநில அளவில் குழந்தைளுக்கான கொள்கை மற்றும் செயல் திட்டம் வெளியிட வற்புறுத்துவோம். அனைத்து பள்ளிகளிலும் முழுநேர மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்படுவதையும், ஊட்டச்சத்து மையங்கள் அதிகப்படுத்தப்படுவதையும் , அதில் சத்தான சரிவிகித உணவுகள் கொடுக்கப்படுவதையும் உறுதிசெய்வோம். கர்ப்ப காலத்தில் தொடங்கி குழந்தை வளர்ப்பில் தொடர் கண்காணிப்பு செலுத்தப்படுவதையும், சிறுதானிய உணவுகள் அங்கன்வாடிகள் மூலம் வழங்கப்படுவதையும் வலியுறுத்துவோம். குழந்தைகள் உழைப்பு முற்றிலும் தடுத்து நிறுத்தப்படுவதை உறுதி செய்வோம்.

19. கல்வி

 • கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றிட தொடர்ந்து குரெலழுப்வோம்.
 • பொது கல்வி முறையை  வலுப்படுத்தும் விதமாக கல்விக்கான நிதி ஒதுக்கீடு 30 சதவிகிதமாக அதிகரிக்கப்படுவதையும், ஆரம்ப கல்வி தொடங்கி உயர்கல்வி வரை தரமான இலவச கல்வியை அரசு வழங்கிட வேண்டுமெனவும் வற்புறுத்துவோம். மாநிலத்திற்கான கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு என நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க வலியுறுத்துவோம்.
 • ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலை பள்ளி கல்வி வரை அருகமை பள்ளிகளாக முறையாக மாற்றப்படுவதையும், அதுவரை இருக்கும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கணினி ஆய்வகம் முதல் தரமான குடிநீர் வரையிலான உள்கட்டமைப்புக்கள் மேம்படுத்தவும் வற்புறுத்துவோம்.  தாய்மொழியாம் தமிழ் வழிக் கல்வியை உறுதி செய்ய தொடர்ந்து குரலெழுப்புவோம்.
 • நீட், நெக்ஸ்ட் போன்று  பல வகையான நுழைவு மற்றும் வெளியேறும்போதும் தேர்வு என உருவாக்கப்பட்ட தேவையற்ற அனைத்து போட்டி தேர்வுகளும் நிறுத்திடவும், தொடக்கக்கல்வி வரை பொதுத்தேர்வுகள் ரத்து செய்திடவும் வலியுறுத்துவோம்.
 • அனைத்து அரசு விடுதிகளும் மேம்படுத்திடவும், பட்டியலினத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்படோர், பிற்படுத்தப்பட்டோர்,  சிறுபான்மை, மாற்று பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினரின் கல்விக்கு சிறப்புக் கவனம் செலுத்த பாடுபடுவோம்.
 • தனியார் கல்வி நிலையங்களின் (பள்ளி மற்றும் அனைத்து உயர் கல்வி நிலையங்கள்) கல்வி கட்டணங்களை முறைப்படுத்திடவும், கல்வியின் பெயரால் நடக்கும் கட்டண கொள்ளைகளை  தடுத்து நிறுத்திடவும் குரலெழுப்புவோம்.
 • மாணவர் அமைப்பு தேர்தல் நடத்த வலியுறுத்துவோம். அனைத்து கல்வி நிலையங்களிலும்  பாலின நிகர்நிலையை மேம்படுத்தவும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கவும் குழுக்கள் உருவாக்கி செயல்முறைப்படுத்திட வலியுறுத்துவோம்.
 • விளையாட்டு, கலை போன்ற பல வாய்ப்புகளில் மாணவர்களின்  திறன் வளர்வதற்கான பிரத்யேக கவனம் செலுத்த வற்புறுத்துவோம்.
 • மாணவர்களுக்கான உதவித்தொகை தடையில்லாமல் வழங்கிடவும், கல்வி உதவித்தொகைக்கான இலக்கு எண்ணிக்கை அதிகரிக்கவும் வற்புறுத்துவோம். குறிப்பாக பட்டியலின, பழங்குடியின மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி தாமதமாக அல்லது தடை செய்யாமல் முறையாக வழங்கிட பாடுபடுவோம்.
 • சமூக அக்கறை, அறிவியல் சிந்தனை கொண்ட உயர்வான குடிமக்களாக உருவாகும் வகையிலான பாடத் திட்டம் போதனை முறை பின்பற்றிட வற்புறுத்துவோம்.
 • சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிரான மத்திய அரசின்  தேசியக் கல்விக் கொள்கை 2020 முற்றிலுமாக நிராகரிக்கப்பட குரலெழுப்புவோம்.
 • உடற்பயிற்சி ஆசிரியர் உள்ளிட்டு போதுமான அளவு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கி, நியமனங்கள் அதிகரிக்க வற்புறுத்துவோம்.
 • தடகளம் உள்ளிட்ட பல் வகை  விளையாட்டுகளில்  மாணவரின் ஆர்வத்தை கண்டறிந்து  மேம்படுத்திக் கொள்ள உரிய ஊக்கமும் பயிற்சியும் வழங்கிட வலியுறுத்துவோம்.
 • மதிய சத்துணவுடன், காலை உணவும், மாலையில் பால், மருத்துவ அறிவுரைப்படி தேவைப்படும் சத்து மருந்துகள் குழந்தைகளுக்கு வழங்குவதை வற்புறுத்துவோம்.
 • பொதுச் சுகாதார இயக்கத்தின் மூலம் அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டிற்கு ஒரு முறையாவது மாணவர்களுக்கு கண், பல், தோல் உட்பட முழுமையான மருத்துவப் பரிசோதனையை நடத்தி தேவைப்படுபவர்களுக்கு  தொடர் சிக்கிச்சை அளித்திடவும், மருத்துவ அறிக்கை அட்டை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கிடவும் வலியுறுத்துவோம்.
 • மாணவர்களின் உளவியல் சிக்கல்களை, கற்றல் திறன் வெளிப்பாடு சிக்கல்கள் உள்ளிட்ட மாணவர் எதிர்கொள்ளும் சவால்களை கண்டறிந்து அதை எதிர்கொண்டு முன்னேற உரிய நிபுணர்கள் மூலம் தகுந்த ஆலோசனை, பயிற்சி வழங்கிட வற்புறுத்துவோம்.
 • பல்துறைகளில் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்திட தனியாக நிதி ஒதுக்குவது அதற்கான கட்டமைப்பை உருவாக்கிட வலியுறுத்துவோம்.
 • கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான அனைத்து அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற தேவையான பயிற்சி கூடங்கள், சிறப்பு வகுப்புகள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்திட வற்புறுத்துவோம்.
 • புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தமிழக சூழ்நிலைக்கேற்ப கல்வி கொள்கை உருவாக்கிட கல்வியாளர்களைக் கொண்ட குழு உருவாக்க வற்புறுத்துவோம்.

20. சுகாதாரம்

 • மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, அனைத்து அடிப்படை வசதிகளையும், உள்ளடக்கிய அரசு ஆரம்ப சுகாதார மையங்களை உருவாக்கிடவும், அரசுக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றாகக் கருதாது அனைவருக்கும் இலவசமாக தரமான சிகிச்சையை உறுதி செய்யவும் பாடுபடுவோம்.  பேறு கால பணப்பலன்கள் – (முத்துலட்சுமி ரெட்டித் திட்டம் போன்ற) வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் தொகையை கர்ப்பிணிப் பெண்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்திட வலியுறுத்துவோம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கானத் தடுப்பூசிகளை அவரவர் வீடுகளுக்கு அருகில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே வழங்கிட வலியுறுத்துவோம். அரசு மருத்துவமனைகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.
 • செங்கல்பட்டு அருகே ரூ. 750 கோடி செலவில் பொதுத்துறையில் அமைக்கப்பட்டுள்ள ‘தடுப்பூசி பூங்காவிற்கு’ உற்பத்தியைத் துவங்க தேவையான ரூ. 250 கோடியை வழங்கி, பொதுத் துறை நிறுவனமான எச்.எல்.எல், லைஃப் கேர் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் பயலாஜிக்கல் லிமிடெட்   மூலம் கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிப்பதுடன், மேலும் நமக்கு தொடர்ந்து தேவைப்படுவதும்,  ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதுமான தடுப்பூசிகளையும் குறைந்த செலவில் தயாரிக்க வலியுறுத்துவோம்.
 • அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களையும்  சிகிச்சை மையங்களையும் “நிரந்தர தொற்று நோய் பரிசோதனை மையங்களாகவும், சிகிச்சை மையங்களாகவும் தொடர வேண்டுமெனவும், ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவுகிறபோது, இத்தகைய தொற்று நோய் மருத்துவமனைகளைப் பயன்படுத்த வேண்டுமெனவும் வற்புறுத்துவோம்.
 • மத்திய அரசுக்கு சொந்தமான புனேயில் உள்ள ”தேசிய வைரலாஜி நிறுவனத்தைப்” போல தமிழகத்திலும் மாநில அளவிலான “’வைராலஜி ஆராய்ச்சி” மையம், (ICMR) ஐ.சி.எம்.ஆர். போன்று ‘“தமிழ்நாடு மருத்துவ அறிவியல் கவுன்சில்” உருவாக்க வற்புறுத்துவோம்.

நீட் தேர்வு: (இளங்கலை) – எம்.பி.பி.எஸ். படிப்பு

 • கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கிற ”நீட் தேர்வு” முற்றிலுமாக ரத்து செய்ய தொடர்ந்து குரெலெழுப்புவோம். தற்காலிக நிவாரணமாக, தமிழக அரசு  மருத்துவக்கல்லூரிகளில்  7.5 சதவிகிதம் இடங்களை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 2020ம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் பயன்பெறும் அரசுப்பள்ளி மாணவர்களை  “சேர்க்கை” நடத்தவேண்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்தால் அரசு முழுக் கட்டணத்தையும் ஏற்க வேண்டுமென வற்புறுத்துவோம்.
 • மேற்படிப்பு ‘நீட்’  – சிறப்பு மேற்படிப்பு நீட் (Post Graduate and Super Specialty NEET) எம்.பி.பி.எஸ் படிப்பில் அகில இந்திய தொகுப்பிற்கு 15 சதவிகிதம் இடங்கள் மட்டும் ஒதுக்கப்படுவது போல, மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு படிப்புகளுக்கும் 15 சதவிகிதம் மட்டுமே தமிழகம் அளிக்கவேண்டுமெனவும், இட ஒதுக்கீடு மறுப்பால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், பட்டியல் சாதியினர், பழங்குடி மாணவர்கள் பாதிக்கப்படுவதை குறைப்பதற்கு வலியுறுத்துவோம்.
 • கிராமப்புறம் மற்றும் மலைவாழ் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகிதம் மேற்படிப்பு இடங்களை ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இடஒதுக்கீடு முறையாக அமலாக எல்லா நடவடிக்கைகளையும் உறுதியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துவோம்.
 • மருத்துவர், செவிலியர் உட்பட அனைத்து மருத்துவத்துறை ஊழியர்களையும் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வேண்டுமென வற்புறுத்துவோம்.

ஆயுஷ் – இந்திய மருத்துவமுறைகள்

 • நவீன அறிவியல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து – போதிய நிதியளித்து, ஊக்கப்படுத்தி – வளர்க்க வேண்டுமெனவும், மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அதிக எண்ணிக்கையில் இந்திய மருத்துவக்கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் உருவாக்கிட வேண்டுமெனவும், இந்திய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சியை அதிகப்படுத்திட வேண்டுமெனவும்,  மத்திய அரசு ”ஆயுஷ்” மருத்துவ முறைகள் அனைத்தையும் ஆதரிக்க வேண்டுமெனவும் வலியுறுத்துவோம்.

21. பொது விநியோகம்

 • பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக நடத்தப்படும் மாநிலமான தமிழ்நாட்டில் மத்திய அரசின் அசைவுகளுக்கு ஏற்ப இன்று  பொது விநியோகம் முற்றிலுமாக சிதைக்கப்பட்டு வருகிறது.
 • ஏழை எளிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய அரசு தற்போது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திருத்தி உள்ளது. அரிசி, கோதுமை, பருப்புவகைகள், எண்ணெய் வித்துக்கள், உருளைகிழங்கு, வெங்காயம் உள்ளிட்டவைகளை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலிருந்து நீக்கிவிட்டது.
 • மேலும் உணவு தானியங்களை கொள்முதல் செய்து சேமித்தும், நகர்வு செய்தும் பொதுவிநியோகதிட்டத்தில் மிகப்பெரிய கட்டமைப்பை உருவாக்கியுள்ள இந்திய உணவு கழகத்தையே (FCI) மூன்று பிரிவாக பிரித்து தனியாருக்கு தாரைவார்க்க முடிவு எடுத்துவிட்டதோடு, உணவுதானிய உற்பத்திக்கு ஆதாரவிலை நிர்ணயிப்பதை, மத்திய அரசு தன் அதிகாரத்தின் கீழ்கொண்டு வந்து கூடுதலாக மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எவ்வித ஊக்கத்தொகையும் வழங்கக்கூடாது என தெரிவித்துள்ளது.  விவசாயத்தையும், பொது விநியோகத்திட்டத்தையும் மத்திய மாநில அரசுகள் சீரழித்து வருவதை அனுமதிக்க முடியாது. பொது விநியோக திட்டத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து குரலெழுப்புவோம்.

22. சுற்றுச்சூழல்

 • கடலோரப்பகுதி கடுமையாக பாதிப்பு,  மணல் கொள்ளை, பிளாஸ்டிக் தடை என அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காதது,  திட்டமிடாத நகரமயமாக்கல்,  ஹைட்ரோ கார்பன் ஆய்வுகள்,  எண்ணுர் – காட்டுப்பள்ளி பகுதிகள் வேகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அதானி குழுமத்திற்கு 6 ஆயிரம் ஏக்கரில் துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்துள்ளதையும்  தடுக்கப்பட வற்புறுத்துவோம்.
 • தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி அறிக்கை ஒன்றை நிபுணர்கள், சூழல் ஆய்வாளர்கள், மக்கள் இயக்கங்கள் உள்ளடக்கிய குழு வழிகாட்டுதலுடன் 6 மாதங்களுக்குள் வெளியிட்டு மக்கள் கருத்துக்கேட்டு விரிவாக விவாதம் நடத்திய பின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். இதுவும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட வேண்டும். தமிழகத்தை கடலோரம், மலையோரம், நடுப்பகுதி, நகரங்கள் என நான்காக பிரித்து இப்பகுதிகளின் நிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். கடலோர சுற்றுச்சூழல் மண்டலத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள், கடல் மீன்பிடிப்பு மசோதா 2019, சாகர் மாலா திட்டங்கள் பற்றி முழு தகவல்களை வெளியிட்டு மக்களிடையே கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும். கிராமம், உள்ளாட்சி, மாவட்ட அளவிலான கடலோர கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கி, பகிரங்கமாக வெளியிட்டு செயல்பட வைக்கப்பட வேண்டும். மலையோர பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து மக்கள் கருத்து கேட்பு திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.
 • திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம், கழிவு நீர் சுத்திகரிப்புக்கு கவனம், பூச்சிகொல்லிகளால் தேனீக்கள் அழிவு ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்த வற்புறுத்துவோம்.
 • எண்ணூர் – மணலி தொழிற்சாலைகள் கட்டமைப்பு, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்,  கொடைக்கானல் பாதரசக்கழிவு சுத்திகரிப்பு, காவேரி மண்டல திட்டங்கள், எட்டுவழிச்சாலை, மீத்தேன் ஆய்வுகள், கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகள் விரிவாக்கம், கழிவுகள் பாதுகாப்பு, கடலூர் சிப்காட் தொழில்மையம் ஆகியன மீது உரிய ஆய்வு நடத்தப்பட்டு சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்துவோம்.

23. இலங்கை தமிழர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்

 • தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கிட தொடர்ந்து குரலெழுப்புவோம்.
 • அண்டடை நாடான இலங்கையில் தமிழ் மக்கள் வாழ்வுரிமையை பாதுகாத்திடவும், அம்மக்கள் அச்சமின்றி வாழ்ந்திட தேவையான அரசியல் சட்டப் பாதுகாப்பினை வழங்கிட தொடர்ந்து வலியுறுத்துவோம்.
 • புலம்பெயர் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, நலன் காக்க, ‘புலம்பெயர் தமிழர் நல அமைச்சகம்’ அமைக்க வலியுறுத்துவோம்.
 • இன்றைய உலகமயச் சூழலில் பல்வேறு நாடுகளில் தமிழக இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து அவர்களது அறிவுசார் பங்களிப்பை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்ய வலியுறுத்துவோம்.

அகதிகள் முகாம்

  null
 • இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட தொடர்ந்து குரல் கொடுப்போம். தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்படவும், இலங்கை தமிழர் அகதிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதிலும், வேலைவாய்ப்பு பெறுவதிலும் உரிய கவனம் செலுத்திடவும் குரலெழுப்புவோம்.

7 பேர் விடுதலை

30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்திட வலியுறுத்துவோம்.

24. போக்குவரத்து – எரிசக்திதுறை

போக்குவரத்து

 • போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை தொகை போன்றவை கழகங்களால் செலவு செய்யப்பட்டதால், தொழிலாளர்களின் பணம் ரூ. 8000 கோடி கழகங்கள் வசம் உள்ளன.  அரசு நிதி உதவி வழங்குவதன் மூலம் தொழிலாளர் பணம் செலவு செய்வதை தடுக்க வற்புறுத்துவோம்.
 • பொதுப்போக்குவரத்தில் இயங்கக்கூடிய லாரி, வேன், டாக்சி, கால்டாக்சி, சிறிய சரக்கு வாகனங்கள் அனைத்தும் சுயதொழிலாக செய்யப்பட்டு வருகின்றன.  டீசல் விலை உயர்வு, சுங்கவரி கட்டணம், உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக இத்தொழில் நெருக்கடியில் உள்ளது.  30 லட்சம் பேருக்கு சுயவேலைவாய்ப்பளிக்கும் மோட்டார் தொழிலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுப்பதை வற்புறுத்துவோம்.
 • பொதுப்போக்குவரத்து வாகனங்களுக்கு மானிய விலையில் எரிபொருள், சுங்கவரி கட்டண விதிவிலக்கும், மத்திய அரசின் இன்சூரன்ஸ் கட்டணத்திற்கும் மாநில அரசு உதவி செய்ய வழிவகை செய்ய பாடுபடுவோம்.
 • ஆட்டோ, கால்டாக்சி போன்ற பயணிகள் போக்குவரத்து வாகனத்திற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசு மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்வது, நிரந்தர குழு அமைப்பது,  அக்குழுவில் தொழிற்சங்க பிரதிநிதிகளையும் இடம் பெறச் செய்வது போன்ற நடவடிக்கை எடுக்க பாடுபடுவோம்.
 • பயணச் சலுகைகள் அளிப்பதால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டுத் தொகையினை அரசு நிதி ஒதுக்கி ஈடுசெய்திட வலியுறுத்துவோம்.

புதிய ரயில் பாதை

 • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் இரட்டைவழித் தடங்களாக மாற்றி –  மின்மயமாக்கவும், திண்டுக்கல் – கம்பம் – கூடலூர், அரியலூர் – தஞ்சாவூர் – ஒரத்தநாடு – பட்டுக்கோட்டை, மதுரை – மேலூர் – காரைக்குடி, மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் புதிய ரயில் திட்டங்கள் நிறைவேற்றிட வற்புறுத்துவோம்.

மெட்ரோ ரயில்

 • கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்திட வலியுறுத்துவோம்.

கடல்வழி போக்குவரத்து

 • சென்னை – புதுச்சேரி – கடலூர் – நாகப்பட்டினம் கடல்வழி போக்குவரத்திற்கு வற்புறுத்துவோம்.

எரிசக்தி

 • தமிழ்நாடு மின்சார வாரியம் சேவைத்துறையாக பொதுத்துறையாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்க தொடர்ந்து பாடுபடுவோம். மின்சார சட்டத் திருத்த மசோதா 2021ஐ ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அதற்கு எதிராகவும் போராடுவோம்.
 • விவசாயிகளுக்கும், கைத்தறி மற்றும் நெசவுத்தொழில்களுக்கும், வீடுகளுக்கும், அளிக்கப்படும் இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைத்திட பாடுபடுவோம்.
 • விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்களுக்கு கட்டுப்படியான நஷ்டஈடு வழங்கப்படுவதோடு, வாடகை வழங்க வலியுறுத்தப்படும் அல்லது அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கிட குரலெழுப்புவோம்.
 • தடையில்லா மின்சாரம், மக்கள் வாங்கும் விலையில் மின்சாரம், அனைவருக்கும் மின்சாரம் என்ற உன்னதநிலை ஏற்படுத்த பாடுபடுவோம்.
 • மின் உற்பத்தியை அதிகரிக்க நமது அனல் மின்  நிலையங்களை  நவீனப்படுத்தி உற்பத்தியை முழுவீச்சில் துவக்கிடவும், மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தில் மின்சார உற்பத்தியில் மின்மிகை மாநிலமாக மாற்ற பாடுபடுவோம்.
 • மின்வாரியத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை, இதில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டும், படித்து பட்டம் பெற்ற வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.
 • கடலோரப் பகுதிகளில் இயற்கை பேரிடர் காலங்களில் மின் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பை கணக்கில் கொண்டு புதைவடம் (கேபிள்) மூலம் மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

25. அரசு நிர்வாக சீர்திருத்தங்கள்

 • அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்கள் இலட்சக்கணக்கில் உள்ளன. இதனால் பணிச்சுமை கூடிய நிலையில் மன அழுத்தம் ஏற்பட்டு அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சரிவர பணியாற்ற இயலாத உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென குரலெழுப்புவோம்.
 • அனைத்து விண்ணப்பங்களும் இணையவழி மூலம் விண்ணப்பிப்பது என்றாகிவிட்ட நிலையிலும் திட்டப் பலன்கள் முழுமையாக சேதாரமின்றி எளிய மக்களைச் சென்றடைவதில் நிகழும் சிரமங்கள் களையப்பட வற்புறுத்துவோம்.
 • திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் மக்கள் குறைதீர்வு நாள் விண்ணப்பங்களுக்கு முறையான பதிலை 15 தினங்களுக்குள் கிடைக்கச் செய்ய வலியுறுத்துவோம்.
 • இணைய வழி தகவல்களை எல்லா அரசுத் துறைகளும் கால இடைவெளியின்றி பதிவேற்றம் செய்வது, இணைய வழிச் சேவைகளை சிறப்பாக நிர்வகிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வற்புறுத்துவோம்.

26. நகர்ப்புற வளர்ச்சி

 • முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சி. ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் இதற்கான பொது முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளதை நிறைவேற்ற பாடுபடுவோம். கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கு 3,200 கோடி அளவில் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இந்தக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்த பரிந்துரைகள் அமலாக்க நடவடிக்கை எடுப்போம்.
 • ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரால் உழைக்கும் மக்களின் தேவைகளுக்கு முரணான, வெளிப்படைத் தன்மையற்ற, திட்டங்களை கொண்டு வந்து, ஊழல், முறைகேடுகளுக்கு இடமளித்துள்ள தற்போதைய நடைமுறை அடியோடு மாற்றுவது. நகர்ப்புற குடிசைவாழ் மக்கள், அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் சுகாதாரம், கல்வி, குறைந்த செலவிலான வீட்டு வசதி,  சாலைப் போக்குவரத்து, கழிப்பிட வசதிகள், பாதாள சாக்கடை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத திடக்கழிவு மேலாண்மை, அடிப்படைக் கட்டமைப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்தும் வகையில் நகர்ப்புற கொள்கைகள் உருவாக்கி செயல்படுத்த வலியுறுத்துவோம்.
 • வளர்ச்சித் திட்டங்கள் என்கிற பெயரால் நகர்ப்புற ஏழைகளையும் குடிசைவாழ் மக்களையும் உறுதியான மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் அவர்களது வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தும் அநீதிகள் முற்றாக கைவிடப்பட வேண்டும். எடப்பாடி அரசாங்கம் கொண்டு வந்த நில உரிமையாளர் அனுமதி இல்லாமலேயே வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்கிற சட்ட திருத்தம் ரத்து செய்ய வலியுறுத்துவோம்.
 • வளர்ச்சித் திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு தேவைக்கேற்ப உறுதி செய்வது, கண்மூடித்தனமாக சொத்து வரியை உயர்த்துவது, அபராத கட்டண வசூல் அனைத்தும் கைவிடப்படுவது, பயனாளர் கட்டணங்கள் என்ற வகையில் குடிநீர் வரி, குப்பை வரி போன்ற அநீதியான கட்டண வசூல் நிறுத்துவது, நகரங்களில் நடைபயிற்சி வசதிகள், பூங்காக்கள் பராமரிக்கப்படுவது, நூலக வசதிகள் போன்றவை உறுதி செய்யப்பட பாடுபடுவோம்.

27. உள்ளாட்சி

  null
 • மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்திட குரலெழுப்புவோம்.
 • கிராமப்புற மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி நிதி மற்றும் அதிகாரம் வழங்கிடவும், கிராம சபை கூட்டங்கள் மக்கள் பங்கேற்புடன் ஆக்கப்பூர்வமாக நடைபெறுவதையும் உறுதி செய்வோம்.
 • உள்ளாட்சி அமைப்புகளின் வரவு-செலவுகளை கிராமசபை கூட்டங்களில் சமூக தணிக்கைக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துவோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு 30 சதவிகிதம் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வற்புறுத்துவோம்.
 • உள்ளாட்சிகளில் செயல்படும் ஊராட்சி செயலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் குடிநீர் மோட்டார் இயக்குனர்கள் முழுநேர பணியாளர்களாக்கி நிரந்தரப்படுத்திட குரலெழுப்புவோம்.

28. வீடு, மனைப்பட்டா

  null
 • கிராமப்புற மக்களுக்கு அரசால் கட்டித்தரப்படும் வீடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைந்தபட்சம் ரூ.10 லட்சமாக உயர்த்திட வற்புறுத்துவோம்.
 • வீட்டுமனை – மனைப்பட்டா இல்லாத தகுதியான அனைவருக்கும் வீட்டு மனையும் – மனைப்பட்டாவும் வழங்கிட அரசை தொடர்ந்து கோருவோம். ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் ஒரு வீட்டு மனை இலவசமாக வழங்கிட பாடுபடுவோம். மற்றவர்களுக்கு நியாயமான விலையில் வீட்டுமனை அரசால் விற்பனை செய்ய வற்புறுத்துவோம். சொந்த குடிமனை இல்லாத குடும்பமே இருக்காது என்ற நிலை உருவாக்க பாடுபடுவோம்.
 • ஏழைகள், விதவைகள், திருநர், தனித்து வாழும் பெண்கள், ஆண்கள் அனைவருக்கும் வாழத்தகுதியான வீடு கட்டிக்கொடுக்க வற்புறுத்துவோம். கோயில், மடம், அறக்கட்டளை தேவாலயங்கள், வக்ப் போர்டு ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்களில் ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு கிரையத்தொகை தீர்மானித்து தவணை முறையில் பெற்றுக் கொண்டு குடிமனை சொந்தமாக்க வற்புறுத்துவோம்.

29. நுண் நிதி நிறுவனங்கள்

 • நுண் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு சட்டம் இயற்ற வற்புறுத்துவோம்.  அரசு வங்கிகளில் சுயஉதவிக் குழு பெண்களுக்கு 4சதவிகிதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கிட குரலெழுப்புவோம். சிறு தொழிலை மேம்படுத்த சுய உதவி குழுக்களுக்கு பயிற்சி அளித்து சிறு தொழிலுக்கான கடன்கள் வழங்கிடவும், உற்பத்தி செய்யும் பொருட்களை அரசே கொள்முதல் செய்து அவர்களுடைய சந்தையை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடு செய்யவும் வலியுறுத்துவோம். பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து சுயஉதவி குழு மூலமாக பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

30. கூட்டுறவு

  null
 • கூட்டுறவு அமைப்புக்கள் தன்னாட்சி பெற்ற அமைப்புக்களாக ஜனநாயத்தை ஏந்தி பிடிக்கும் அமைப்புகளாக இருக்க வேண்டும். ஆனால் 99 சதவிகிதம் ஆளும் கட்சியின் ஆக்கிரமிப்பு உள்ளதால், அறிவிக்கப்படும் சமூக உதவிகள், பயனாளிக்கு சென்றடைவதில்லை. நகைக்கடன் முதல் முத்ரா கடன்  வரை ஆளும் கட்சியினரால் கைப்பற்றப்படுகிறது. ஆளும் அரசுகள் தங்களது ஓட்டு வங்கியை பெருக்கி கொள்வதற்காக கூட்டுறவு அமைப்புக்களை பயன்படுத்தி சீரழித்து வருகின்றன.
 • மக்களுக்கான இயக்கமாக உள்ள கூட்டுறவுகளுக்கு, தன்னாட்சி அதிகாரத்தை பரவலாக்குவதை உறுதிபடுத்தி, ஊழல் அற்ற அமைப்புகளாக மாற்ற முயற்சி மேற்கொள்ள வலியுறுத்துவோம்.
 • கூட்டுறவு நிறுவனங்களில் உள்ள தினக்கூலி, தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களையும், பணிவரன்முறைப்படுத்தாத அனைத்து ஊழியர்களையும் பணிநிரந்தரம் செய்திட குரலெழுப்புவோம்.
 • அரசு ஊழியர்களுக்கு நிகரான மருத்துவக் காப்பீடு திட்டத்தையும், குடும்ப நல உதவித்தொகையினையும் கூட்டுறவு ஊழியர்களுக்கு அமலாக்கிட வலியுறுத்துவோம். அனைத்து கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கும் கருணை ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கிட வற்புறுத்துவோம்.
 • போனஸ் குறித்த கூட்டுறவு சட்ட விதி எண்.97ல் ஏற்படுத்தப்பட்டு 32 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இச்சட்ட விதியினை போனஸ் சட்டத்திற்கு நிகரான தொகையினை வழங்கும் வகையில் திருத்தியமைக்கப்பட வலியுறுத்துவோம்.

31. சட்டம் – ஒழுங்கு

  null
 • சட்டம்-ஒழுங்கு என்பது காவல்துறையின் கண்ணோட்டத்திலிருந்து மாற்றப்பட்டு, மக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு என்ற பார்வை கொண்டதாக மாற்றிட வலியுறுத்துவோம்.
 • கொலை, கொள்ளை, வழிப்பறி, நகைப்பறிப்பு, பெண்கள், குழந்தைகள், மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் போன்றவற்றை தடுத்து, சட்டம்-ஒழுங்கு செம்மையாக பேணப்படுவதை உறுதிசெய்வோம். மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் மாண்புடன் நடத்திட வேண்டுமென வலியுறுத்துவோம்.
 • சமூகவிரோத சக்திகள், சாதி, மதவெறி கும்பல்கள், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டிக்கும்பல், நுண்கடன் கொடுமையாளர்கள், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் வழங்கும் அமைப்புகள், கஞ்சா உள்ளிட்ட போதை மருந்து கும்பல்கள் ஆகியோரிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வற்புறுத்துவோம். காவல்துறை மக்களின் நண்பன் என்ற வாசகம்  உண்மையில் அர்த்தமுள்ளதாக மாற்றிட வலியுறுத்துவோம்.
 • காவல்நிலையங்களில் ஆளுங்கட்சி தலையீடு தடுத்து நிறுத்திட குரலெழுப்புவோம். லாக்கப் சாவுகள், சித்ரவதைகள், மனித உரிமை மீறல்கள், காவல்நிலையக் கொடுமைகளைத் தடுக்க அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்படுவது உறுதி செய்யப்படுவதோடு, மாவட்ட அளவில் கண்காணிக்க வற்புறுத்துவோம். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சாத்தான்குளம் லாக்கப் சாவு, பொள்ளாச்சி பாலியல் கொடுமை போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் இவ்வாறு நடப்பதை தடுக்க கடுமையான சட்ட விதிகள் உருவாக்கிட வற்புறுத்துவோம்.
 • பெண்கள் மீதான பாலியல் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது 166 ஏ-பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.
 • பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள், சாலைகளில் சிசிடிவி பொருத்திட வற்புறுத்துவோம்.
 • காவல்துறையினருக்கும் சங்கம் வைக்கும் உரிமை வழங்கிடவும், அவர்களுக்கும் 8 மணிநேரம் மட்டுமே பணி என்பதை உறுதி செய்யவும், குறிப்பிட்ட இடைவெளியில் மனவள பயிற்சி அளிக்கப்படவும், பெண் காவலர்கள் பகலில் மட்டுமே பணியாற்றுமாறு விதிகள் உருவாக்கவும் வலியுறுத்துவோம்.
 • கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பல லட்சம் பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வற்புறுத்துவோம்.

32. மனித உரிமைகள்

  null
 • மனித உரிமைகள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிற காலம் இது. காவல் மரணங்கள், காவல் நிலைய துன்புறுத்தல்கள், சட்டவிரோதமான அணுகுமுறைகள் ஆகியனவற்றை தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம். காவல் நிலைய அத்துமீறல்கள் குறித்த புகார்கள் மீது விரைவான நடவடிக்கை உறுதி செய்ய பாடுபடுவோம். நீதிமன்றக் காவலுக்காக குற்றவியல் நடுவர் முன்பு நிறுத்தப்படுவோருக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக்கு “நெறிகள்” உருவாக்கப்பட்டு அவை பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டுமென வற்புறுத்துவோம்.
 • மனித உரிமை ஆணையம், குழந்தைகள் உரிமை ஆணையம், சிறுபான்மையினர் ஆணையம், தகவல் உரிமை ஆணையம், மகளிர் ஆணையம் ஆகியவற்றிலுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் உறுதி செய்ய வலியுறுத்துவோம். நியமனங்கள் குறுகிய அரசியல் நோக்கில் அமையக் கூடாது. நிதி ஒதுக்கீடு உரிய அளவில் உறுதி செய்யப்பட வற்புறுத்துவேம்.
 • அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மனித உரிமைக் கல்வி உறுதி செய்ய வலியுறுத்துவோம்.
 • எல்லா மாவட்டங்களிலும் மனித உரிமை சிறப்பு, நீதிமன்றங்கள், போக்சோ, சட்டத்தின் அடிப்படையில் குழந்தை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கிட வற்புறுத்துவோம்.
 • மனித உரிமைகளை மீறுவதாக உள்ள சட்டவிரோத செயல் தடுப்புச் சட்டம் (உபா), தேசியப் புலனாய்வு முகமைச் சட்டம், தேசத் துரோகச் சட்டங்கள் திரும்பப் பெற வற்புறுத்துவோம்.
 • சிறையில் மனித மாண்புகள் காக்கப்பட வேண்டும். சிறைவாசிகளின் எண்ணிக்கை, உணவு, அடிப்படைத் தேவைகள், உள்ளிட்டவை கணக்கிற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.
 • மனநலக் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்டவைகள் ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு அங்கு மனித உரிமை மீறல்கள் இல்லாமலிருப்பதை உறுதி செய்ய வற்புறுத்துவோம்.
 • “மாற்றுக் கருத்துக்கான உரிமை” முழுமையாக மதிக்கப்படவும், அனுமதிக்கப்படவும் உரிய முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

33. அரசு ஊழியர் – ஆசிரியர் நலன்

  null
 • ஓய்வுக்காலம் நிம்மதியோடு, நீடித்த பாதுகாப்போடு அமைந்திட வரையறுக்கப்பட்ட பயன் கொண்ட  ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட முயற்சிகளை மேற்கொள்வோம். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய உறுதியாக குரல் கொடுப்போம்.
 • இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வற்புறுத்துவோம்.
 • ஊரடங்கு காலத்தில் பறிக்கப்பட்ட பஞ்சப்படி உயர்வு ரத்து, சரண் விடுப்பு ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டிக் குறைப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட பயன்களை திரும்ப வழங்கிட ஆவன செய்வோம்.
 • திரு சித்திக், ஐ.ஏ.எஸ்  தலைமையிலான குழு அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டு அரசு ஊழியர், ஆசிரியர் ஊதியக் குறைபாடுகளைக் களைய பாடுபடுவோம்.
 • அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள 4,50,000 காலிப் பணியிடங்களுக்கு உடனடி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு அரசுத் துறைகளின் சேவைகள் மக்களுக்கு விரைவாக எட்டுவதையும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டுவதையும் வற்புறுத்துவோம்.
 • சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் 3,50,000 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட முறையான காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வற்புறுத்துவோம்.
 • கொரோனா களப் பணியில் உயிர் நீத்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர், காவல் துறையினர் மற்றும் பல்வேறு துறையினருக்கு அரசு வாக்குறுதி அளித்த ரூ 50 லட்சம் முழுமையாக கிடைக்க பாடுபடுவோம்.
 • 6000க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் நிரப்பப்படுவதற்கும், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் வரை கௌரவ விரிவுரையாளர்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழுவின் தொடக்க நிலை அடிப்படை ஊதியத்தை மாத ஊதியமாக வழங்கவும், பணிப்பளுவிற்கு ஏற்றாற் போல புதிய ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் உருவாக்கவும், கல்லூரி முதல்வர்கள் காலதாமதமின்றி நியமிக்கவும் வலியுறுத்துவோம். துப்புரவாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் கால முறை ஊதியத்தில் நிரப்பப்படவும் வற்புறுத்துவோம்.

34. ஓய்வூதியர் நலன்

 • ஓய்வு பெற்ற அரசு ஊழியர்/ ஆசிரியர் நலனுக்காக உச்ச, உயர்நீதிமன்றங்கள் வழங்கியுள்ள தீர்ப்புகளை முழுமையாக மாநில அரசு அமலாக்குவதற்கு குரலெழுப்புவோம்.
 • குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் என உயர்த்திட வலியுறுத்துவோம்.
 • தமிழக அரசு ஓய்வூதியர் குடும்ப நல நிதியின் இறப்பு பயனை ரூ 3 லட்சமாக உயர்த்திடவும், குடும்ப பாதுகாப்பு திட்டத்தை குடும்ப ஓய்வூதியருக்கும் விரிவுபடுத்தவும் வலியுறுத்துவோம்.
 • “தொகுப்பு ஓய்வூதியப் பயனை” 2003-க்கு முந்தைய அளவான 40 சதவிகிதம் ஆக உயர்த்தவும், வட்டியை 4 சதவிகிதம் ஆக குறைக்கவும், ஓய்வூதிய கம்யூட்டேசன் பிடித்தத்தை 120 மாதங்களாகக் குறைக்கவும் வற்புறுத்துவோம்.

35. மீனவர் நலன்

 • புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் மீன்வள மசோதா, மீன்பிடித் தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் வகையிலும், சிறுதொழில் மீனவர்களை கடல் தொழிலில் இருந்து வெளியேற்றும் வகையிலும் உள்ளன. மேலும் உவர்நீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. எனவே இம்மசோதாவை புதிதாக பொறுப்பேற்க உள்ள மாநில அரசு நிராகரிக்க வற்புறுத்துவோம்.
 • இயற்கை பேரிடரின் பாதிப்புகளும் அதிகரித்துள்ள நிலையில் வருடம் தோறும் வழங்கப்படும் மழைக்கால இழப்பீட்டு நிதியை உயர்த்தி ரூ. 10,000/- வழங்கிட வலியுறுத்துவோம்.
 • தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து வகையான இரட்டை மடி, சுருக்குமடி மீன்பிடி கலன், வலைகள் மீதான தடையை உறுதி செய்து மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க பாடுபடுவோம்.
 • மீனவர் கூட்டுறவு அமைப்புகள் தன்னிச்சையான அமைப்பாக செயல்படவும், மீன் கொள்முதல் ஏற்றுமதி உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபடும் வகையில் பொருளாதார, சட்டரீதியாக அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றிடவும் வலியுறுத்துவோம்.

உள்நாட்டு மீனவர்கள்

 • ஏரி, குளங்களில் பாரம்பரிய உள்நாட்டு மீனவர்களுக்கே முதல் உரிமை. டெண்டர் முறைகளை கைவிட்டு, கூட்டுறவு அமைப்புகள் மூலம் வளத்தை பகிர, மாற்று ஏற்பாடுகள் செய்து தர வலியுறுத்துவோம்.
 • பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை கீழ் இயங்கும் அணைகள் அனைத்திலும் தனியார் டெண்டர்களை ரத்துசெய்துவிட்டு, கூட்டுறவு அமைப்புகள் மூலம் மீன்பிடித்தல், விற்பனையை முறைப்படுத்த வற்புறுத்துவோம்.

கடலோர பிரச்சனைகள்

 • அணுமின் நிலையங்கள், அனல்மின் நிலையம், பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகைள், மூலப் பொருட்களை இறக்குமதி செய்ய, தயாரித்த பொருட்களை ஏற்றுமதி செய்ய பெரும் துறைமுகங்கள் என கடற்கரை எங்கும் தொழிற் வளர்ச்சிக்கான கட்டுமானப்பணிகள் நிறைந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை இத்தகைய வளர்ச்சியின் ஒட்டு மொத்த பாதிப்புகளை கண்டறிய ஒருங்கிணைந்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை இதுவரை ஆளும் அரசுகள் வெளியிடவில்லை. இவ்வறிக்கையை வெளியிட்டு பாதிப்பின் அளவுகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்துவோம்.
 • சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கடற்கரையோரங்களில் பெருகிவரும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் அதிகரித்து வருவதை முறைப்படுத்திட வற்புறுத்துவோம்.
 • பெரும் தொழில் நிறுவனங்களின் வேட்டைக் காடாக கடற்கரை மண்டலம் மாறியுள்ளதால் அந்நிலத்தில் இருந்து மக்கள் அந்நியப்படுவதும் அதிகரித்துள்ளன. எனவே மக்கள் பொதுவிசாரனையில் அனுமதி இல்லாத எந்த புதிய நிறுவனமும் அனுமதிக்கப்படாமலிருப்பதை வற்புறுத்துவோம்.
 • கடலோர விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் வருவதால் அந்நிலங்களை நம்பி இருந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் ஆகியோர் உதிரி தொழிலாளர்களாக புலம்பெயரும் அவலம் நடந்து வருகிறது. அத்தொழிற்சாலைகளில் இவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பை உருவாக்க பாடுபடுவோம்.

36. வேலைவாய்ப்பு

 • அனைத்து அரசுத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பிட குரலெழுப்புவோம். அதற்கு முன்னோட்டமாக காலிப்பணியிடங்கள் பற்றிய புள்ளிவிபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட வற்புறுத்துவோம்.
 • டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அமைப்புகளில் நேர்மையாகவும், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுவதையும் வலியுறுத்துவோம்.
 • அமர்த்தப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்கள், ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வற்புறுத்துவோம். நிரந்தர தன்மை கொண்ட பணியிடங்களில் ஒப்பந்தம் மற்றும் மதிப்பூதியம், தொகுப்பூதியம் முறை முற்றாக ஒழித்து நிரந்தர பணியிடமாக மாற்றிட வலியுறுத்துவோம்.
 • அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளிலும் ஊழல், மற்றும் பரிந்துரைகள் அற்ற தகுதி மற்றும் இடஓதுக்கீட்டின் அடிப்படையில் முறையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் வேலை நியமனங்கள் நடைபெற நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.
 • வேலை இல்லாத  இளைஞர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ. 5,000/- வழங்கிட பாடுபடுவோம்.
 • தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டுக்கான சட்ட திருத்தம் கொண்டுவர வலியுறுத்துவோம்.
 • புதிய நவீன சூழலுக்கு ஏற்றார்போல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க வல்லுனர்கள் குழு அமைத்து திட்டங்கள் தீட்டப்படவும், அரசின் மூலதனத்தில் புதிய நவீன தொழிற்சாலைகள் உருவாக்கி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வற்புறுத்துவோம்.
 • உள்ளூர் வளங்கள் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கவும், அதற்கான பயிற்சியும் இளைஞர்களுக்கு அளிப்பதற்கும், இதன்மூலம் உள்ளூர் சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் வலியுறுத்துவேம்.
 • வேலை செய்யும் பெண்களுக்கான அரசு விடுதிகள் எல்லா மாவட்டங்களிலும் முறையாக செயல்பட நடவடிக்கை எடுத்திடவும், பெண் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படவும், அதற்கான நிதி, மாற்று திறன்வளர்ப்பு பயிற்சி சிறப்பு கவனத்துடன் செயல்முறைப்படுத்த வற்புறுத்துவோம்.

37. சமூக சீர்திருத்தத் துறை

 • மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில அளவில் சமூக சீர்திருத்தத் துறை அமைக்கவும், அறிவியல் அடிப்படையிலான பகுத்தறிவு கண்ணோட்டத்தை இத்துறை மூலம் வளர்த்தெடுக்க மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம்.

38. வன்கொடுமைகள் – தீண்டாமை  ஒழிப்பு

 • தமிழகம் முழுவதும் நடந்தேறிவரும் வன்கொடுமைகள் மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடிகள் (வன்கொடுமைகள்) தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் வகையில் அமலாக்கப்பட வேண்டும். எஸ்சி / எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் படி மாநில, மாவட்ட அளவில் விழிக்கண் மற்றும் ஆதி திராவிட நலக்குழுக் கூட்டங்களை முறையாக நடத்திட வற்புறுத்துவோம். வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிதி, நிலம், நிவாரணம் மற்றும் அரசு வேலையை போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தாமதமின்றி வழங்கிட வற்புறுத்துவோம். அனைத்து மாவட்டங்களிலும் வன்கொடுமைத் தடுப்பு  சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திடவும், தீண்டாமை ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு அரசு திட்டமிட்டு செயலாற்றிடவும் வலியுறுத்துவோம். தமிழகத்தில் நிலவுகிற மனித மாண்புக்கு எதிரான, குடிமைச் சமூகத்தின்  உரிமைகளை மறுக்கிற, நூற்றுக்கும் மேற்பட்ட தீண்டாமை வடிவங்களை  முற்றிலும் ஒழிப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முழு வேகத்தில்  அரசு மேற்கொண்டு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென வற்புறுத்துவோம்.
 • ஊராட்சி தலைவர்களுக்கு மாத ஊதியம் வழங்கிடவும், குறிப்பாக, தலித் – பழங்குடி ஊராட்சி தலைவர்களுக்கு மாதம் ரூ. 25,000/- ஊதியம் வழங்கிடவும் வலியுறுத்துவோம்.

தலித் பெண்கள் நலன்

 • தலித் பெண்கள், கும்பல் வல்லுறவு, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, பணியிடங்களில் நடைபெறுகிற பாலியல் வன்முறைகள், துன்புறுத்தல்கள், சீண்டல்களுக்கும் முடிவு கட்ட பாடுபடுவோம்.

பட்டியல் சாதி – பழங்குடியினர் துணைத் திட்டங்கள்

 • மக்கள் தொகையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் பயன்பாடு பற்றி பத்தாண்டு அனுபவத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வலியுறுத்துவோம். இழந்த ஒதுக்கீடுகளை ஈடுகட்டுகிற வகையில் கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் செய்திடவும்,  துணைத் திட்ட அமலாக்கத்திற்கான சட்டம் கொண்டு வரவும் பாடுபடுவோம்.

சாதி மறுப்புத் திருமணங்கள்

 • தமிழகத்தில் அதிர்ச்சி தரத்தக்க அளவில் நிகழ்ந்து வரும் சாதி ஆணவக்கொலைகள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தவும், சாதி ஆணவப் படுகொலைகளைத்  தடுத்திட தனிச் சிறப்புச் சட்டம் இயற்றிடவும் பாடுபடுவோம். சென்னை உயர்நீதிமன்றம் 12.04.2016 அன்று வழங்கிய தீர்ப்பின்படி அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேர தொலைபேசி எண்ணுடன் சிறப்புப் பிரிவுகள் செயல்படுவது உள்ளிட்ட தீர்ப்பின் வழிகாட்டல்கள் அனைத்தையும் செயல்படுத்திட வலியுறுத்துவோம். மணமக்களில் ஒருவர் பட்டியல் சாதியினராக அமைகிற சாதி மறுப்பு திருமண தம்பதியருக்கு ரூபாய் பத்து லட்சமும், மற்ற கலப்பு திருமணத் தம்பதியர்களுக்கு ரூபாய் ஏழு லட்சமும் வழங்கிடவும், அரசுப் பணிகளுக்கான தேர்வுகளிலும் முன்னுரிமை அளித்து வேலை வழங்கிடவும் குரலெழுப்புவோம்.

இட ஒதுக்கீடு

 • ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் குழந்தைக் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆதி திராவிடர் நல விடுதிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட தமிழக மருத்துவக் கல்லூரி இடங்களில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், பிற்பட்டோருக்கு 69சதவிகிதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்திட வேண்டும்.  ஐ.ஐ.டி அனுமதிகளில்- இளங்கலை, முது கலை, ஆய்வுப் பட்டப்படிப்பு  பிரிவுகளில் – பட்டியல் சாதியினர், பட்டியல் சாதி பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் உறுதியாக அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  பட்டியல் சாதியினர், பழங்குடியினர் துணைத் திட்ட நிதியை பயன்படுத்தி சிறப்பு மருத்துவ, பொறியியல் கல்லூரிகளைத் திறக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்புக்குப் பிறகான கல்வி உதவித் தொகை (Post Matric Scholarship) மத்திய அரசின் பங்களிப்பு உரிய காலத்தில் கிடைப்பதை உறுதி செய்து, இதில் ஏற்படும் தாமதம் மாணவரின் கல்வியை பாதிக்கிற நிலைமை அடியோடு மாற்றப்பட தொடர்ந்து பாடுபடுவோம்.
 • மக்கள் தொகை அதிகரிக்கிறபோது, ஒவ்வொரு கணக்கீட்டுக்குப் பிறகும், இடஒதுக்கீடு தானாகவே  அதிகரிக்கும் வகையில்  விதிகள்  மாற்றப்பட வற்புறுத்துவோம்.
 • அருந்ததியர் உள் ஒதுக்கீடு முறையாக எல்லா அரசுத் துறைகள், அரசு நிறுவனங்களிலும் அமலாவதையும், பௌத்தம் தழுவிய பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினருக்கு விரைவில் சான்றிதழ் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வலியுறுத்துவோம்.
 • தலித் கிறித்தவர்களை பட்டியல் சாதியினராக அறிவிக்கவும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்கவும் மத்திய அரசை வலியுறுத்துவோம். தனியார்மயம் இட ஒதுக்கீட்டை அடியோடு பறிக்கிற நிலையில் பொதுத் துறைகளைப் பாதுகாத்து சமூக நீதி உறுதி செய்யப்பட வேண்டும். ஐ.ஐ.டி களில் பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டை முழுமையாகவும், பகுதியாகவும் ஒழிப்பதற்கான மத்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.

மனிதக் கழிவு அகற்றுவோர் விடுதலை

 • மனிதக் கழிவு அகற்றுவோர் பணி அமர்த்தத் தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டத்தை, மத்திய அரசு இயற்றி 8 ஆண்டுகள் கடந்த பின்பும், தமிழக அரசு இன்னும் சட்டத்திற்கான மாநில விதிகளை  உருவாக்காமல் இருக்கிற நிலை மாற்றிட வலியுறுத்துவோம். சாக்கடையில் மனிதர்களை இறக்குவதும், மனிதக் கழிவுகளை மனிதர்களை அகற்ற வைப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்க தொடர்ந்து பாடுபடுவோம்.  சிறப்புச் சட்டம் 2013-ன் படி மாற்றுத் தொழில் வழங்கி மறுவாழ்வை உறுதிப்படுத்திட வற்புறுத்துவோம்.

நிலம், பஞ்சமி நில மீட்பு, பட்டா

 • உறுதியான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் நிலமற்ற தொழிலாளர்களுக்கும், பட்டியல் சாதியினர், பட்டியலின பழங்குடி மக்கள் கையில் நிலம் கிடைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் குறிப்பாக, பஞ்சமி நிலங்களை மீட்டுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாடுபடுவோம்.

தொழில் முனைவோர் நலன்

 • தொழில் பூங்காக்கள், அரசு கொள்முதல், அரசு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட அம்சங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர்க்கு உரிய பங்கு கிடைத்திடுவதை உறுதி செய்ய வேண்டும். வங்கிக் கடன், அரசு மானியங்கள் ஆகியவற்றில் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கு உரிய  பங்கு கிடைத்திட வேண்டும். 

புதிரை வண்ணார்  நலன்

 • புதிரை வண்ணார் என சாதிச் சான்று தடையின்றி வழங்க வேண்டும். அரசு 2009ல் அறிவித்த  புதிரை வண்ணார் நல வாரியத்தை செயல்பட வைக்கவும், புதிரை வண்ணார் நல வாரியத்தில் கிறிஸ்துவ புதிரை வண்ணார்களையும் உறுப்பினராக சேர்க்கவும் அரசாணை வெளியிடப்பட வற்புறுத்துவோம்.

39. பழங்குடியினர் நலன்

 • தமிழ்நாட்டின்  பழங்குடிகளான  புலையன்,  வேட்டைக்காரன், கொண்டாரெட்டி, மலையாளிகள், குறவன், குறுமன்ஸ் பழங்குடியினர், பன்னியாண்டிகள் உள்ளிட்டோருக்கு குடியிருப்பு பகுதி முகாம்களின் வாயிலாக,  குடும்ப அட்டைகள்,  இனச் சான்று அட்டைகள்  வழங்கிட வலியுறுத்துவோம். கோட்டாட்சியர்  மாதம் ஒரு நாள்  சான்றிதழ் முகாம் நடத்தி,  முழுமையாக  அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிடவும் வற்புறுத்துவோம். தமிழகத்தில் வாழும் பழங்குடியினரில் 70 சதவீதத்தினர் நிலமற்றவர்களாவர். அரசு தரிசு நிலங்களில் தலா 2 ஏக்கர் நிலம் இவர்களுக்கு வழங்கிட முன்னுரிமை வழங்கிட பாடுபடுவோம். வன உரிமைச் சட்டம் 2006ன் படி உடனடியாக சிறப்பு முகாம்களை நடத்தி, 6 மாத காலத்துக்குள் நில உடமைப் பட்டா வழங்கிடவேண்டும். 2021ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்திடவும், வீட்டு மனை இல்லாத அனைத்து பழங்குடியின குடும்பங்களுக்கும் உடனடியாக வீட்டு மனைப்பட்டாவுக்கான இடம் தேர்வு செய்து அரசு வழங்கிடவும் வலியுறுத்துவோம். மலைப்பகுதிகளில் வருவாய் துறையின் கீழ் உள்ள அனுபவ நிலங்களுக்கும், வீடுகளுக்கும் பட்டா வழங்கிட தடையாக உள்ள அரசாணை எண் 1168/1989 ஐ ரத்து செய்திட வற்புறுத்துவோம். தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில், மலைவாழ் மக்களது நிலங்களை பிற சமூகத்தினர் வாங்கவோ, விற்கவோ அனுமதி இல்லை என்பதை நடைமுறைச் சட்டமாக்கிட வலியுறுத்துவோம்.

40. சிறுபான்மையினர் நலன்

 • அரசியல் சாசனம் சரத்து 25 உறுதியளித்துள்ள மத மற்றும் மனச் சாட்சி சுதந்திரத்தை பாதுகாப்போம்.  எந்தவொரு மதத்தையும் பின்பற்ற மக்களுக்கு உள்ள உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்துவோம். தமிழகத்தில் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வோம். கல்வி, வேலை வாய்ப்புகளில்  சிறுபான்மையினர் பின் தங்கியுள்ள நிலைமையை ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை காண வழி செய்வோம். மதச் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கான அரசியல் சாசன உரிமையை பாதுகாத்து உறுதி செய்வோம். விசாரணையின்றியும், விசாரணை முடியாமலும் பல ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுவிக்க குரல் கொடுப்போம்.
 • ஏழை சிறுபான்மை மக்களுக்கு வாழிடங்களுக்கு அருகில் இலவச வீட்டு மனை, குடிசை மாற்று வாரிய ஒதுக்கீட்டில் உரிய பங்கு ஆகியவை உறுதி செய்ய பாடுபடுவோம். கிறித்தவ, இஸ்லாமிய மக்களுக்கான அடக்க தலங்களை அவர்களின் மக்கள்தொகையை கணக்கிற் கொண்டு அரசு உருவாக்கித் தர வேண்டுமென வலியுறுத்தப்படும். மதவழி, மொழி வழி சிறுபான்மை மாணவர்கள் பயிலும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முயற்சிகளை மேற்கொள்வோம். மாநில சிறுபான்மை ஆணையத்தை முறையாக செயல்படுத்துவது, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட சிறுபான்மை நலக் குழுக்களை மாதம் தோறும் கூட்டுவது, சிறுபான்மையினர் கல்வி, தொழில், குடியிருப்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஆகியன உறுதி செய்யப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்துவோம்.

41. மாற்றுத்திறனாளிகள் நலன்

 • மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்ச மாத பராமரிப்புத் தொகை ரூ.3,000/-வழங்கிட வற்புறுத்துவோம்.  மருத்துவ ரீதியாகத் தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டிய சிறப்புப்பிரிவினரான முதுகுத்தண்டுவடம், தசைச்சிதைவு, மனவளர்ச்சி பாதித்த கடும் ஊனமுற்றவர்களுக்கு மாத பராமரிப்பு உதவித்தொகை ரூ.5,000/-மாக உயர்த்தி வழங்கிட வலியுறுத்துவோம். மனநலம் பாதித்தவர்கள் உள்ளிட்ட சட்டம் அங்கீகரித்த அனைத்துப் பிரிவினருக்கும் உதவித்தொகை வழங்க வற்புறுத்துவோம்.
 • அனைத்து ஒன்றியங்களிலும் அரசே மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்குச் சிறப்புப்பள்ளியை நேரடியாக நடத்துவதோடு, அனைத்து மாவட்டங்களிலும் காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்குச் சிறப்புப் பள்ளிகள் நிறுவிட வற்புறுத்துவோம். மேலும், மனவளர்ச்சி, பார்வை, செவித்திறன் பாதிப்பு குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்களை மேற்கண்ட பள்ளிகளில் காலமுறை ஊதியத்துடன் பணியமர்த்திட வேண்டும். உண்டு உறைவிட பள்ளிகள் உருவாக்கிட வேண்டும். மேலும் உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிக்கான சட்டப்படியான 5சதவிகிதம் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவதோடு செலவு தொகையையும் தங்கும் இடத்திற்கான செலவையும் அரசே ஏற்றிட வேண்டும். மாற்றுத்திறன் குழந்தைகளின் கல்வி மாநில அரசின் பொறுப்பு என்பதால், சிறப்புக் கல்வி ஒழுங்காற்று சட்டம் இயற்ற வற்புறுத்துவோம்.
 • வேலை நகரங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும். அரசுத்துறைகளில் 4 சதவிகிதம் பணிகளைச் சட்டப்படி முழுமையாக வழங்குவதை உறுதி செய்து ஆண்டு தோறும் அறிக்கை வெளியிடல் வேண்டும்.
 • முதுகு தண்டுவடம், மனநலம், மனவளர்ச்சி, வலிப்புநோய் பாதிப்பு உள்ளிட்ட தொடர் மருத்துவம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு கவனம் அளிக்கத் திட்டம் வகுக்கப்பட வலியுறுத்துவோம். ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மெடிக்கல் கிட், மருந்துகள் கிடைக்கத் திட்டம் வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய அளவில் முடநீக்கியல் பயிற்சி, பேச்சுப்பயிற்சி உள்ளிட்டவைகளுக்குத் தெரப்பிஸ்ட்டுகள் நியமிக்க வேண்டும். அனைத்து வட்டார மருத்துவமனைகளில் முடநீக்கியல்,  மனநலதுறை மருத்துவர்களை நியமிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்த வலியுறுத்துவோம்.
 • 2016 உரிமைகள் சட்டம் அங்கீகரித்துள்ள அனைத்துவகை  மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருவருட காலத்திற்குள் ஊராட்சி, நகராட்சி அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தி, பல்நோக்கு அடையாள சான்று வழங்கி பயன்பாட்டிற்குக் கொண்டு வர உரிய நிதி ஒதுக்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நிலைமை குறித்தத் துல்லியமான தகவல் களஞ்சியம் (Database)உருவாக்கிட வற்புறுத்துவோம்.
 • திருமணத் தம்பதியர் இருவரும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் ரூ.5 லட்சம் திருமண உதவித்தொகை வழங்கிடவும், அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கவும் பாடுபடுவோம். 
 • அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சொந்தவீடு என்ற இலக்கு நிர்ணயித்து வீட்டுமனைபட்டா மற்றும் வீடு வழங்கிடவும், மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குக் குடிசை மாற்று வாரிய வீடுகளில் முன்னுரிமை வழங்கிடவும் குரலெழுப்புவோம். கழிப்பறை இல்லா இல்லங்கள் இல்லை என்பதை அரசு நிதி மூலம் உறுதி செய்ய வற்புறுத்துவோம்.
 • பாசன வசதியுடன் கூடிய இரண்டு ஏக்கர் நிலம் அல்லது 10 லட்சம் குறையாத 50 சதவீத மானியத்தில் உடனான தொழில் கடன் வழங்கிட மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புநிதி நிறுவனத்தை உருவாக்கிடவேண்டும். சிறப்புத்திறன் விளையாட்டுகளை மேம்படுத்த உரிய நிதி ஒதுக்கி மாவட்ட சிறப்பு விளையாட்டு கழகங்களை உருவாக்க வேண்டும். சர்வதேச, தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு பயண, பயிற்சி செலவுகளை அரசு ஏற்க வேண்டும். மாற்றுத்திறனுடையோர் கலைத்திறனை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் மாவட்ட அளவில் பல்திறன் மேம்பாட்டு திட்டங்கள் ஏற்படுத்தவேண்டும்.
 • உள்ளாட்சிகளில் அனைத்து மட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நியமன உறுப்பினரை வார்டு உறுப்பினராக நியமித்திட சிறப்புசட்டம் இயற்றிடவும், சட்ட அதிகாரம் படைத்த மாநில மாற்றுத்திறனாளி ஆணையத்தை உருவாக்கிடவும் வற்புறுத்துவோம்.
 • மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை மேம்பாட்டிற்காக மாநில வருவாய் பட்ஜெட்டில் 10 சதவீதத்திற்கும் குறையாமல் திட்டம் உருவாக்கிட வேண்டும். மாற்றுத்திறன் பெண்கள் குழந்தைகள் மீது அதிகரித்து வரும் பாலியல் தாக்குதல்களைத் தடுக்கவும்,  பாலியல் சமத்துவத்தை வலியுறுத்தவும் சிறப்பு நிதி ஒதுக்கி விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டம் வகுக்க வேண்டும். குற்றம் புரிவோர் மீது கடும் தண்டனை வழங்க நடவடிக்கை வேண்டும். ஆதரவற்ற பெண் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு மாவட்ட தலைநகர்களில் உணவுடன் கூடிய விடுதிகள் திறக்க வற்புறுத்துவோம்.

42. திருநர் நலன்

 • திருநருக்கு பால் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மார்பக அறுவை சிகிச்சையினை காப்பீடு திட்டத்தின் கீழ்  கொண்டுவர வலியுறுத்துவோம். அனைவருக்கும் உறைவிட (வீடு) வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் இடஒதுக்கீடுக்கான அரசாணை.  2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம்  (நால்சா) அளித்த தீர்ப்பை மாநிலத்தில் அமல்படுத்துதல், பாலின பாலியல்பு சிறுபான்மை மக்கள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு வற்புறுத்த வேண்டும். திருநங்கையருக்கென இருக்கும் நலவாரியத்தை மேலும் செம்மைப்படுத்துதல், அதில் திருநம்பிகளுக்கும் இடமளித்து திருநர் நலத்துறை என்று அமைப்பை ஏற்படுத்துதல், வயது முதிர்ந்த திருநங்கையருக்கென வழங்கப்படும் ரூ. 1,000/- உதவித்தொகையை ரூ. 3,000/-மாக உயர்த்தி வழங்கிட வற்புறுத்துவோம். பெயர் மாற்றம் செய்வதில் பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அலைக்கழிக்கப்படும் சிரமத்தை நீக்கி சுலபமாக்க வலியுறுத்துவோம். அரசு பொது மருத்துவமனையில் கட்டாய தனி மருத்துவக் குழு அமைத்து திருநர்களுக்கு மன மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருநங்கை மற்றும் திருநம்பி என இணைத்து ஒரு முழுமையான கணக்கெடுப்பு எண்ணிக்கையை கள ஆய்வுசெய்து அறிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இளம் திருநர் முதல் மூத்த திருநர் வரை அவர்களை பாதுகாக்க திருநர் பாதுகாப்பு காப்பகம் அமைத்து தர வற்புறுத்துவோம்.
 • தனி நல வாரியம் வேண்டும். தத்தெடுப்புகள் எளிமைப்படுத்தப்படுவதுடன் தவறான தத்தெடுப்புகள் தடுக்கப்படும். இட ஒதுக்கீடு அவர்களுக்கு உருவாக்கப்படும். கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் உறுதி செய்யப்பட உரிய நடவடிக்கைகளை வலியுறுத்துவோம்.

43. தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு

 • தமிழகத்தின் காடுகள், ஏரிகள், கடல், ஆறுகள், வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கைச் சூழலை பாதுகாக்க வேண்டியது முக்கிய கடமை.
 • விதிமுறைகளுக்கு முரணாக, பல்லுயிரிகளின் வாழ்விடமாக திகழும் காடுகள் கண்மூடித்தனமாக அழிக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்படுவதும் நிறுத்தப்பட பாடுபடுவோம்.
 • ஆற்றுப்படுகையில் வரைமுறையற்ற வகையில் மணல் அள்ளுவது, அளவுக்கு மீறிய தண்ணீர் சுரண்டல், நீர்நிலைகள் மாசுபடுதல், கடலில் மீன், உயிரி வளங்கள் அழிந்து போகும் வகையில் கழிவுகள் கொட்டப்படுவது போன்ற அனைத்தும் நிறுத்தப்பட்டு இயற்கை வளங்களை பாதுகாக்க வற்புறுத்துவோம்.
 • மிக முக்கியமான நன்னீர் வளம் பாதுகாக்க அதன் சேமிப்பு அமைப்புகளான ஏரிகள், கண்மாய்கள், குளங்களை வருடந்தோறும் மழைக்காலத்திற்கு முன்னர், தூர்வாரி மழைநீர் சேமிப்பதை உறுதி செய்ய பாடுபடுவோம். பல்லுயிர் பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கமாக தாவர மரபணு வளங்களும் பாதுகாக்க வற்புறுத்துவோம்.
 • தமிழகத்தில் தாது மணல் உள்ளிட்ட கடலோர வளங்கள், கனிம வளங்கள், காடுகள், மரங்கள், உயிரினங்கள் அனைத்தும் முறையாக பராமரித்து, பாதுகாத்து, பயன்படுத்துவதன் வழியாக தமிழகத்திற்கு மக்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான நிலையான வளர்ச்சி உறுதி செய்ய வற்புறுத்துவோம்.

44. நாட்டுப்புறக் கலைகள்

 • நாட்டுப்புறக் கலைகளை பாதுகாத்து வளர்த்திட நாட்டுப்புறவியல் பல்கலைக்கழகம் உருவாக்க வற்புறுத்துவோம். நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஓய்வூதியம், இலவச பஸ்பாஸ் வழங்கிட குரெலழுப்புவோம். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க அந்தத் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் வழங்கிட வலியுறுத்துவோம்.

45. தொழில் நுட்பம்

 • தொழில் நுட்பம் குறிப்பாக ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டலைசேசன் வளர்ச்சி பெற்று வரும் நிலையில், ரோபோட்டிக்ஸ் குறித்த பாடத்திட்டம் மற்றும் போதான முறை வளர்ந்து வருகிறது. இதில் கவனம் செலுத்தும் வகையிலான உள்கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்படும். உயர்கல்வி நிறுவனங்களில் குறிப்பாக அண்ணா பல்கலைக் கழகம், உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் இந்த கட்டமைப்பு வசதிகள் உருவாக்க வலியுறுத்தப்படும். தனியார் நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகளை அரசு ஆதரிக்கும், அதன் பயன்பாட்டை பகிர்ந்து கொள்வதற்கு, நியாயமான கட்டண வழிகாட்டுதல் உருவாக்கப்படும். தற்போது இத்தகைய ரோபோட்டிக்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் பயின்ற மாணவர்களுக்கு நமது மாநிலத்தில் வேலைவாய்ப்பு, பயன்படுத்தும் முறை குறைவாக உள்ளது. இவர்களை அரசு உரிய மரியாதையுடன் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவோம்.
 • பாதாளச் சாக்கடை கழிவுகள் அகற்றுதல், கையால் மலம் அள்ளுதல் ஆகிய பணிகளை ஒழிக்கும் விதமாக, கேரள இடது முன்னணி அரசு செய்தது போல், ரோபோக்கள் பயன்படுத்த வலியுறுத்துவோம். கோவிட் 19 நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு சில இடங்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டது. இது போன்ற வேலை செய்வோர் மற்றும் பொது மக்கள் துன்புறும் நிலையை தவிர்க்கும் வகையில் தொழில் நுட்ப கொள்கை உருவாக்க வலியுறுத்துவோம்.
 • ஆட்டோமேசன் மற்றும் ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகள் பணியிடங்களில் ஆட்குறைப்பு வழிவகுப்பதை தடுக்கும் வகையில் சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு தொடர்ந்து வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தொழில் நுட்ப கொள்கை உருவாக்க வற்புறுத்துவோம்.
 • அரசின் நிர்வாக பணிகள் அனைத்தும் கணிணி மயமாக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. அதை விரைவில் முழுமைபடுத்தவும், சேவை மையங்களை, அரசின் நிர்வாக அலுவலகங்களுடன் இணைந்து செயல்பட வலியுறுத்துவோம். இதன் மூலம் மக்களுக்கு தொழில் நுட்பத்தின் பலன் நேரடியாக கிடைத்திட உறுதி செய்யப்படும்.
 • கட்டற்ற மென்பொருள் இயக்கத்துடன் இணைந்து மக்களுக்கு தொழில் நுட்பத்தின் பயன் நேரடியாக சென்றடைய வழிவகைகள் உருவாக்க வற்புறுத்துவோம்.

46. ஊடகம்

 • பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரம் பாதுகாக்க பாடுபடுவோம். பத்திரிகையாளர்களின் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்துவோம். மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பின் விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களுக்கும் பாரபட்சமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வற்புறுத்துவோம். ஊடக ஊழியர் நல வாரியம் அமைக்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய விதிகள் தளர்த்தப்படவும், ஊடக ஊழியர் சேம நல நிதி முறையாக செயல்படுத்தவும் வலியுறுத்துவோம்.

47. விளையாட்டு

 • சிறுவயது முதலே குழந்தைகளிடம் இருக்கும் விளையாட்டு திறன் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சிறப்பு மற்றும் பிரத்தியோக பயிற்சி அளிக்க வலியுறுத்துவோம். இதற்கு அணைத்து கல்வி நிலையங்களில் (பள்ளி முதல் உயர்கல்வி வரை) கவனம் செலுத்த வற்புறுத்துவோம்.
 • ஆண், பெண் அல்லது திருநர் என்ற பாரபட்சம் இல்லாமல் அணைத்து குழந்தைகளுக்கும் வாய்ப்புகள் அளிக்க கல்விநிலையங்களில் விளையாட்டு மாற்று உடற்பயிற்சி கட்டாயமாக்கப்பட வலியுறுத்துவோம்.
 • குறிப்பிட்ட விளையாட்டில் திறன் பெற்றவர்களுக்கு பயிற்சிகள் அரசே நிதியுதவி வழங்கிட வலியுறுத்துவோம். பயிற்சிக்கான கட்டமைப்புகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உருவாக்கிடவும்,  ஏற்கனவே இருக்கும் விளையாட்டு அரங்கங்கள் உலகத்தரத்திற்கு மேம்படுத்திடவும்,  மாவட்டம் வாரியாக விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் விடுதி முதல் அனைத்து வசதிகளும் மேற்கொள்ள வலியுறுத்துவோம். பாரம்பரிய விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட குரலெழுப்புவோம்.
 • குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் நகர்ப்புறங்களிலும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள, அடிப்படை உடற்பயிற்சிக்காக உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கங்கள், மினி ஜிம் (ஆண் பெண், குழந்தைகள் முதியவர்கள் மற்றும் மாற்று பாலினத்தவர் பயன்பாட்டிற்கான), பொது பூங்கா போன்ற திட்டங்கள் நிறைவேற்ற வலியுறுத்துவோம்.
 • கார்ப்பரேட் கம்பெனிகள் விளையாட்டை வியாபாரமயமாக்குவது தடுத்து நிறுத்த வற்புறுத்துவோம். அரசு அனைவரின் உபயோகத்திற்காக தீம் பார்க் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்க வலியுறுத்துவோம்.

48. இணையம் மற்றும் சமூக வலைத்தளம்

 • தமிழகத்தில் இணைய வசதி என்பது தனியார் நிறுவனங்களின் லாப நோக்கிலான சேவையை சார்ந்தே இருக்கின்றன. இதன் விளைவாக இணைய சேவை என்பது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே அணுகக்கூடிய விஷயமாக இருக்கிறது. எனவே, இணையம்  அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட வற்புறுத்துவேம்.
 • படித்த கிராமப்புற இளைஞர்கள், பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு இணைய சேவை இலவசமாகக் கிடைப்பதற்கு கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு அமல்படுத்தியிருக்கும் இலவச இணைய சேவை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட குரெலழுப்புவோம்.
 • அனைத்து மாணவர்களுக்கும் இணைய வைபை இணைப்பு இலவசமாக்கப்பட வற்புறுத்துவோம்.
 • குறைந்தபட்சம் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், பொது நூலகம், பஞ்சாயத்து அலுவலகம் போன்ற இடங்களில் இலவச இணைய சேவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும். அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக பைபர் இணைய இணைப்பு உறுதி செய்ய வற்புறுத்துவோம்.
 • தாராளமயக் கொள்கையை மத்திய அரசு முழுவீச்சில் அமல்படுத்தி வரும் சூழலில், மாநிலத்தின் வரி வருவாயும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், கேரளா மக்கள் முன்னேற்ற திட்டங்களுக்கான நிதியைத் திரட்டுவதற்கு கே.ஐ.ஐ.எப்.பி. போன்ற அமைப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகமும் இந்த வழியைப் பின்பற்றி இலவச இணைய வசதித் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்த வற்புறுத்துவோம்.
 • வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கு கணிணிகள் சலுகை விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வலியுறுத்துவோம்.
 • ஐடி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய நிதியம் உருவாக்கிட வற்புறுத்துவோம்.
 • சமூக ஊடகங்கள் வழியாக நடக்கும் தகவல் திருட்டுக்களைத் தடுக்க தனி பிரிவு, மற்றும் சட்டம் இயற்ற வலியுறுத்துவோம்.
 • சமூக வலைத்தளங்களில் கருத்து சுதந்திரம் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் 19ன்படி அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆனால் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 66ஏ அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66ஏ மற்றும் 74 பிரிவுகளைப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்களைத் தடுக்கவும், கருத்து சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் உள்ளதை தடுக்க தேவையான முறையில் சட்டத் திருத்தங்களை கொணர மத்திய அரசை வலியுறுத்துவதோடு, இச்சட்டத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வற்புறுத்துவோம்.

49. நூலகம்

 • தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்கள் உயர்தொழில்நுட்பத்துடன் கணினிமயமாக்கப்படுவதோடு,  நூலகங்களுக்குத் தேவையான பல்துறை நூல்கள் அவ்வப்போது முறையாக வாங்கிடவும்,  நூல் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை பின்பற்றிடவும் வற்புறுத்துவோம். அனைத்து நூலகங்களும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்க வலியுறுத்துவோம்.

50. பொதுத்துறை பாதுகாப்பு

 • இந்திய பொருளாதாரத்தினுடைய முதுகெலும்பாகவும், இந்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பங்களிப்பை வழங்கி வரும் ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீட்டை (எல்.ஐ.சி. மற்றும் ஜி.ஐ.சி.) தனியாருக்கு தாரை வார்க்க மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளது.  மத்திய அரசின் இந்த அறிவிப்பை ரத்து செய்வதற்கும், காப்பீட்டுக் கழகம், வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து அயராது போராடும்.

Check Also

சிபிஐ(எம்) வேட்பாளர்களின் குற்ற பின்னணி விளம்பரம் !

சிபிஐ(எம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற பின்னணியின் விவரங்கள்! COMMUNISTPARTY-FORMATC-2-16×30-1Download Related