தமிழ்நாட்டில் கஜா புயல் பாதிக்கப்பட்டோரைப் பாதுகாத்திடும் பணிகளில் கட்சி அணிகள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்!

தமிழ்நாட்டில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்திடும் பணிகளில் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தங்களை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் கஜா புயல் மிக மோசமான அளவில் நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 50 பேர் இதுவரை இறந்துள்ளார்கள். மாநிலத்தில் சுமார் பத்து மாவட்டங்களில், பொது கட்டமைப்பு வசதி மற்றும் தனியார் உடைமைகள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. புயலின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து புலம் பெயர்ந்து, நாகப்பட்டிணம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மாநிலம் முழுதும் சுமார் 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின் விநியோகமும், அத்தியாவசியப் பொருள்கள் விநியோகமும் தடைபட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மாநில அரசாங்கமும், மத்திய அரசாங்கமும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் காப்பாற்றிடவும், நிவாரணம் அளித்திடவும், புனர் வாழ்க்கைக்கான உதவிகளைச் செய்திடவும் உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். மத்திய அரசாங்கம், மாநில அரசுக்குப் போதுமான அளவிற்கு நிதி உதவி அளித்திட வேண்டும்.

கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மக்களைப் பாதுகாத்திடவும், நிவாரணம் அளித்திடவும் நடைபெறும் வேலைகளில் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் முழுமையாகத் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

Check Also

அரசியல் சாசனத்துக்கு விரோதமான குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சேப்பாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

மத்திய பாஜக அரசு அதிரடியாக குடியுரிமை சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. அரசியல் சட்டம் வகுத்தளித்துள்ள மத, சாதி, இன, மொழி, பால் அடிப்படையில் மக்களை பாகுபடுத்தக்கூடாது என்ற அடிப்படை கோட்பாட்டுக்கு விரோதமாக மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்தை திருத்தியுள்ளது.