தமிழ்மொழிக்காக அனைவரும் இணைந்து போராடத் தயாராவோம் – என்.சங்கரய்யா

தமிழர் உரிமை மாநாட்டில் என்.சங்கரய்யா பேச்சு:-

தமிழ் மொழி, இலக்கியம், கலாச்சாரத்தை வளர்க்க மிகப்பரந்த மேடையில் ஒன்று திரள்வோம் என்று விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா கூறினார். தமுஎகச – இந்திய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய தமிழர் உரிமை மாநாட்டில் என்.சங்கரய்யா பேசியது வருமாறு :தியாகி சங்கரலிங்கனார் போராடியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், கை வண்டித் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான உலகநாதன். சங்கலிங்கனார் உயிர் நீத்த அன்று, மதுரையில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். சங்கரலிங்கனார் தியாகத்தை சொல்லும் தீர்மானத்தை 50 ஆயிரம் பேர் பங்கேற்ற கூட்டத்தில் நான் முன்மொழிந்தேன். சங்கரலிங்கனார் விட்டுச்சென்ற பல கடமைகள் நம்முன் உள்ளன. கீழடியில் நடைபெறும் அகழாராய்ச்சி தங்குதடையின்றி நடைபெற வேண்டும். தொன்மை நாகரிகத்தை உலகிற்கு எடுத்து காட்ட வேண்டும். குறுகிய நோக்கங்களுக்காக பாஜக அரசு அதற்கு இடைஞ்சல் செய்யக் கூடாது.

எனவேதான், அகழாராய்ச்சியில் கண்டெடுக்கும் பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை வரவேற்கிறோம். ஆதிச்சநல்லூர் அகழாராய்ச்சியை முடிவுக்கு கொண்டு வர வேண் டும்.நாம் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல. இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவின் அனைத்து தேசிய மொழிகளுக்கும் சம உரிமை, சம மதிப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் பேசினால், அதனை அனைத்து தேசிய மொழிகளிலும் அதேநேரத்தில் மொழிபெயர்த்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தியாவின் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றும் சட்டங்கள், தீர்மானங்கள் அனைத்தும் மத்திய அரசின் செலவில் அனைத்து தேசிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சடிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்ப வேண்டும். அப்போதுதான் சம உரிமை, சம மதிப்பு என்பதை பாதுகாக்க முடியும்.இந்தியாவில் அதிகப்படியான மக்கள் பேசும் மொழி என்பதால் இந்தியை அரசமைப்புச் சட்டத்தில் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதன் அர்த்தம் இந்தியை கட்டாயமாக்குவதல்ல.

மாநிலங்களின் மொழிகள்தான் ஆட்சி மொழியாக, அரசாங்க, நீதிமன்ற, கல்வி மொழியாக இருக்க வேண்டும். அதுதான் தேசிய மொழிகளுக்கு அளிக்கப் படும் சமத்துவம் ஆகும். மொழி சமத்துவத்திற்காக நாம் போராடுகிறோம். தமிழகத்தில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்குவதில் இடதுசாரி இயக்கங்கள், திராவிட கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் போராடின. நான் சட்டமன்றத்தில் இருந்த போது ஆங்கில கலப்பு இல்லாமல் நிலச்சீர்திருத்தம் போன்றவற்றை சட்டமாக கொண்டு வந்து விவாதித்து, உரிய திருத்தங்களுடன் நிறைவேற்றினோம். தமிழ் மொழியை பயிற்றுமொழியாக்குவதிலும் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது.மருத்துவம், பொறியியல், விஞ்ஞான நூல்கள் உலகத்தரத் திற்கு மொழிபெயர்க்கப்பட்டு தாய்மொழியில் கற்பிக்க வேண்டும். அப்போதுதான் நிபுணத்துவம் பெற முடியும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சியை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதுதான் சங்கரலிங்கனார் தியாகத்திற்கு மதிப் பளிப்பதாக இருக்கும்.இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி பேசாத மக்கள் உள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள் விரும்பும் வரை இணை மொழியாக ஆங்கிலம் நீடிக்கும் என்று நேரு கூறினார். அதற்கு மாறாக இந்தி திணிப்பை செய்யக் கூடாது. உலக நாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்று பணியாற்ற ஆங்கிலமே தேவைப்படுகிறது. எனவேதான் மாநிலங்களில் தாய்மொழியோடு ஆங்கிலத்தை கற்பிக்கிறார்கள். எனவேதான் இந்தியாவின் பொருளாதார, ஜனநாயக, சமூக கலாச்சாரம் வளர்ச்சியடைய ஆங்கிலம் துணைமொழியாக நீடிக்க வேண்டும். அதற்கு இந்தியை திணிக்காமல் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் இருந்தாலும், தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலாச்சாரத்திற்கும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து தலைசிறந்த சேவை செய்கின்றன. இதர அமைப்புகளோடு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். தமிழை வளர்க்க, இலக்கியங்களை பெருக்க திராவிட இயக்கங்கள், காங்கிரஸ் இயக்கம் போன்ற அமைப்புகளோடு சேர்ந்து ஒன்றுபட்டு போராட தயாராக உள்ளோம். இதற்கான மிகப்பரந்த மேடை அமைப்போம். பிற்போக்கு கலாச்சார சித்தாந்தத்திலிருந்து மக்களை மீட்க வேண்டுமென்றால், கல்லூரிகளிலும் தமிழ் முழக்கம் எழ வேண்டும்.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...