தமிழ் மக்களின் வரலாற்று பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும்!

கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட ஆய்வறிக்கையை நேற்று தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் கீழடினுடைய வயது கி.மு. 600 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தமிழக வரலாற்றின் புதிய கால எல்லையை உருவாக்குகிறது. அதாவது தமிழ்மொழி எழுத்துக்கள் தோன்றியது கிறித்து பிறப்பதற்கு முன்பு, 600 ஆண்டுகளுக்கு முன்பு என்பதை விஞ்ஞானப் பூர்வமாக நிறுவுகிறது இந்த ஆய்வறிக்கை. கி.மு 6ம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் எந்தளவுக்கு ஒரு நகர நாகரீகம் இருந்ததோ, அதேபோல தமிழகத்தின் தென்பகுதியில் வைகை நதிக்கரையில் பெரும் நகர நாகரீகம் இருந்ததை இன்றைக்கு அறிவியல் மெய்ப்பிக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகள் தமிழக வரலாறு மற்றும் இந்திய வரலாற்றில் புதிய ஒளிபாய்ச்சுவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் கீழடி ஆய்வை விரிவுபடுத்துவதும், தொடர்வதும் அவசியமாகும்.

குறிப்பாக, மத்திய அரசு கீழடியோடு ஆய்வு துவங்கிய குஜராத் மாநிலம், வாட் நகரில் சர்வதேசிய தரத்திலான அருங்காட்சியம் அமைப்பதாக அறிவித்துள்ளது. அதேபோல, உத்தரபிரதேச மாநிலம், சனோலி என்ற இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக கடந்த வாரம் அறிவித்துள்ளது. ஆனால் கீழடி இவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக தொடர்ச்சியாக ஆய்வுகள் மெய்ப்பித்தாலும், இன்னும் மத்திய அரசு அது சம்பந்தமான எந்தவித பாதுகாப்புக்குமான அறிவிப்பை வெளியிட மறுக்கிறது.

எனவே, உடனடியாக சர்வதேசிய தரத்திலான அருங்காட்சியகம் கீழடியில் அமைக்கவும், கீழடி நிலத்தை பாதுகாக்கவும் மத்திய தொல்லியியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

அதேபோல, கீழடியினுடைய அகழாய்வை இன்னும் விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...