தமிழ் மாநிலம் உருவான நாள் – அண்டை மாநிலங்கள், அயல் நாடுகளிள் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்குக

நவம்பர் 1, 1956 தமிழ் மாநிலம் உருவான நாள்
அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு தனித்துறை உருவாக்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

நவம்பர் 1, 1956 தமிழ் மாநிலம் உருவாக்கப்பட்ட நாள். தமிழ் மாநிலம் உருவாகி இன்றோடு 62 ஆண்டுகள் நிறைவடைகின்றன. வரலாற்றில் முதன் முறையாக தமிழ் மக்கள் ஒரே அரசு நிர்வாகத்தின் கீழ் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.

விடுதலைக்குப் பின்னர் இந்திய நாட்டில் மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் அமைக்க வேண்டுமென நீண்ட நெடும் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்று மாநிலங்கள் உருவாக காரணமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அந்த வகையில் தமிழ் மாநிலம் உருவாவதற்கான  வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டங்களை நடத்திய பெருமை தமிழக கம்யூனிஸ்ட்டுகளையேச் சாரும்.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகவும், பழம் பெரும் நாகரீகம் கொண்டது தமிழினம் என்ற பெருமை படைத்தது. பலநூறு ஆண்டுகள் நகர்ப்புற, நாகரீக வரலாறு படைத்தது தமிழகம் என்பதை கீழடி ஆய்வுகள் பறைசாற்றிக் கொண்டுள்ளன. தமிழக அரசு, தமிழ் மாநிலம் உருவான இந்த நன்நாளை சிறப்பாக கொண்டாட முன்வர வேண்டும். பெருமைக்குரிய தமிழ் மொழி மத்தியில் ஆட்சி மொழியாக அரங்கேற்றப்பட வேண்டும். தமிழகத்தில் ஆட்சி மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்டும் ஆங்கிலமே கோலோச்சும் நிலைமை உள்ளது. எனவே முழுமையான ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும், உயர்நீதிமன்ற மொழியாகவும் உயர்த்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

“திரைகடலோடி திரவியம் தேடு” என்ற நோக்கோடு அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் பல லட்சம் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள். இவர்கள் ஈட்டுகிற வருமானத்தால் இந்திய நாட்டுக்கு அந்நிய செலாவணி பல ஆயிரம்கோடி ரூபாய் கிடைத்து வருகிறது. ஆனால், அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழ்கிற சுமார் 50 லட்சம் தமிழ் மக்கள் அங்கு சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் இதுகாறும் உரிய ஏற்பாடுகள் எதுவுமில்லை. இதனால் இம்மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த உலகெங்கும் வாழும் மலையாள மக்களது பிரச்சனைகளையும், தேவைகளையும் ஈடுகொடுக்கும் வகையில் “வெளிநாடு வாழ் கேரள நலத்துறை” என்ற துறையினை உருவாக்கி கேரள அரசு இம்மக்களை பாதுகாத்து வருகிறது. இதுபோல் பஞ்சாபியர்களுக்கும் தனித்துறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அடிப்படையில் அண்டை மாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களது பிரச்சனைகளையும், தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் தனித்துறையினை உருவாக்கி தமிழர்களை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்த நன்நாளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...