தலித் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மனுத்தாக்கல்

தமிழக அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் தலித் அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு 2009ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உள்ஒதுக்கீட்டை ரத்து செய்திட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இராஜசேகர் சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

உள்ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக தொடர் பேராட்டங்களை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப்போதைய மாநிலச் செயலாளர்  என்.வரதராஜன் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோர் உள்ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வழக்கறிஞர் உ.நிர்மலாராணி மூலமாக உயர்நீதிமன்றத்தில் இடைமனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள பஞ்சாப் மாநில உள்ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு வரும் வரை இவ்வழக்கை ஒத்தி வைப்பதாகவும், அதுவரை உள்ஒதுக்கீடு தொடரும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.   இதைத் தொடர்ந்து, உள்ஒதுக்கீட்டிற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்திலல் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் உள்ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் , தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோர் இடைமனு தாக்கல் செய்தனர்.   மதுரையிலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் உள்ஒதுக்கீட்டிற்கு தடை கிடைக்காததால் டாக்டர் கிருஷ்ணசாமி உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பஞ்சாப் மாநில உள்ஒதுக்கீட்டு வழக்கில் உள்ஒதுக்கீட்டிற்கு எதிராக இடைமனு தாக்கல் செய்துள்ளார்.

ஆகவே, சாதி அமைப்பில் கடைக்கோடியில் தள்ளப்பட்டு உள்ள தலித் அருந்ததிய மக்களின் உள்ஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தலைவர் பி.சம்பத் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் உள்ஒதுக்கீட்டிற்காக ஆதரவாக இடைமனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் வழக்கறிஞர்கள் எம்.கிறிஸ்டோபர், பெனோ பென்சிகர் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply