தலித் இளைஞர்கள் மீது தீண்டாமைக் கொடுமை:சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம், வீராச்சிகுளம் ஊராட்சிக்குட்பட்ட கருவானூர் கிராமத்தில் வசிக்கும் குறவன் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்கள் அரவிந்தன் (வயது 20) சின்னகனகம்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஆர்.தினேஷ் இருவரும் பெருமாள்கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தெருக்கூத்தை பார்க்கச் சென்றுள்ளனர். சாதி வெறியர்கள் சிலர் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மயக்கமுற்ற நிலையில் தண்ணீர் கேட்டதற்கு அரவிந்தன் வாயில் சிறுநீர் கழித்துள்ளனர். பிறகு பொதுக்கழிப்பறைக்கு அருகில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். சாதி வெறியர்களின் இந்த வெறிச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சைக்குப் பிறகு வீடு திரும்பிய போது, அரவிந்தன் வீடு சாதி வெறியர்களால் தாக்கப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த வெறிச்செயலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதுடன், வீட்டை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்த போது ஊத்தங்கரை காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவமனையில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட அரவிந்தன் அந்த வாக்குமூலம் தனது இல்லை என்றும், அதில் உள்ள கையெழுத்து தாம் போடவில்லை என்றும் மறுத்ததிற்குப் பிறகு அரவிந்தனிடம் புகாரைப் பெற்றுக் கொண்டு, புதிதாக எப்ஐஆர் போட்டுள்ளது காவல்துறை. மேலும், அரவிந்தன் பொய்ப்புகார் கொடுத்துள்ளார் என காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

மார்ச் 2-ம் தேதி நடந்த சம்பவத்திற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் அரவிந்தனின் வீடு தாக்கப்பட்டுள்ளது. தற்பொழுதுதான் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேற்கண்ட காவல்துறையினரின் அனைத்து நடவடிக்கைகளும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவே தெரிய வருகிறது. இதற்கு முன்னரும் கூட ராஜஸ்தான் மாநில பெண்கள் நால்வர் தலைமைக் காவலர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திலும், காது கேளாத, வாய்ப்பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட போதும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் உண்மையை மூடி மறைக்கும் வகையிலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டது. உயர்நீதிமன்றம் ஒவ்வொரு நிலையிலும் தலையிட்டே நடவடிக்கை எடுக்க வைத்தது. கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினரின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பாகவும், நியாயமற்ற முறையிலும் இருப்பது தொடர்கிறது.

எனவே, அரவிந்தன், தினேஷ் மீதான வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டுமெனவும், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் மீதும், வீட்டை தாக்கியவர்கள் மீதும் சட்டபபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வது ஏன்? முதலமைச்சர் விளக்க வேண்டும்.

சு.வெங்கடேசன் எம் பி மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென்மாவட்டங்களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக ...