தலித் குடிசைகளுக்கு தீ வைப்பு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள பாச்சாரபாளையம் தலித் குடியிருப்பு பகுதியில் சாதி வெறிக் கும்பல் நடத்திய தாக்குதலில் 8 குடிசைகள் எரிந்துள்ளன, 11 தலித்துகள் காயமடைந்துள்ளனர். எவ்வித முன்விரோதமின்றி சாதி வெறியுடன் நடைபெற்ற தாக்குதல் இது. எரிக்கப்பட்ட 8 குடிசைகளில் 5 குடிசைகளில் உள்ள தலித் இளைஞர்கள் காவல்துறைக்கு தேர்வாகி சமீபத்தில் தான் பணியில் சேர்ந்துள்ளனர். இதர 3 குடிசைகளில் உள்ள தலித் இளைஞர்களும் காவல்துறை பணிக்கு தேர்வாகியுள்ளனர். ஆக பொருளாதாரத்தில் ஓரளவு முன்னுக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ள தலித் குடும்பங்களின் வீடுகள் குறிவைத்து எரிக்கப்பட்டிருப்பதானது தலித்துகளின் குறைந்தபட்ச பொருளாதார முன்னேற்றத்தைக் கூட சாதிய சக்திகள் சகித்துக் கொள்ள தயாரில்லை என்பதை காட்டுகிறது.

தலித்துகள் மீதான சாதிய சக்திகளின் இத்தகைய தீ வைப்பு மற்றும் வன்முறைத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய தாக்குதலை நடத்திய சமூக விரோத சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்யுமாறும் இவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், எரிக்கப்பட்ட குடிசைகளுக்கும் வன்முறை நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முழு நஷ்ட ஈடு வழங்குமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

OBC இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பில் மாதாந்திர ஊதியம் – நில வருவாயை சேர்த்திடும் முயற்சிகளை கைவிட வேண்டும்!

மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்.. மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு  வேலை வாய்ப்பு மற்றும் ...

Leave a Reply