தலித்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டவர் விரோதப் பாதையில் உச்சநீதிமன்றம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தலித்துகள்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அரசாங்க வேலை வாய்ப்புகளிலும், பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு வழங்குவது அடிப்படை உரிமை அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதனைச் சரிசெய்திடும் விதத்தில் மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வாயம், அரசமைப்புச்சட்டத்தின் 16(4) மற்றும் 16(4-ஏ) ஆகிய பிரிவுகள் ஷரத்துக்களை இயக்கிடும் பிரிவுகள் என்றும், தலித்துகள்/பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசாங்க வேலைகளிலும், பதவி உயர்வுகளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை அல்ல என்றும் வியாக்கியானம் செய்திருக்கிறது. இதன் அடிப்படையில், உச்சநீதிமன்றமானது உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் மாநில அரசு இட ஒதுக்கீடுகள் அளித்திட வேண்டும் என்று பிறப்பித்திருந்த தீர்ப்பை ரத்து செய்திருக்கிறது.

இட ஒதுக்கீடு மற்றும் பதவி உயர்வுகள் வழங்குவது தொடர்பான ஷரத்து, அடிப்படை உரிமையாக இல்லாதிருக்கலாம் என்றபோதிலும், இவை கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய அரசமைப்புச் சட்ட ஷரத்துக்களாகும். இவற்றை இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும்.

அரசமைப்புச்சட்டத்தை உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்திருக்கும் விதம் தலித் விரோத, பழங்குடியினர் விரோத மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விரோத ஒன்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கருதுகிறது. இவ்வாறு வியாக்கியானம் செய்யக்கூடிய விதத்தில் இருக்கும் இடைவெளியைச் சரிசெய்திட மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. அதன் மூலம் அரசமைப்புச்சட்டத்தில் இருக்கின்ற இடைவெளியை உடனடியாக சரி செய்திட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய வியாக்கியானத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்திட சாத்தியமான சட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்திட வேண்டும்.

அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இட ஒதுக்கீடுகள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த ஷரத்துக்களைக் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு உடையவைகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கருதுகிறது.

Check Also

சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசையும், செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனையும் பணியிடை நீக்கம் செய்க!

பெறுநர்உயர்திரு காவல்துறை இயக்குனர் அவர்கள்,தமிழ்நாடு காவல்துறை,மயிலாப்பூர்,சென்னை – 600 004. அன்புடையீர், வணக்கம். பொருள்: பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் ...