தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சிபிஎம் -சிபிஐ மே.8-ல் கூட்டு ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று(30-4-2013) சந்தித்து உரையாடினர். சந்திப்பின்போது சி.பி.ஐ சார்பில் மாநில செயலாளர் தா.பாண்டியன், மத்திய நிர்வாகக்கழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு, மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.அப்பாதுரை, மு.வீரபாண்டியன், சிபிஐ(எம்) சார்பில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், என்.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சமீபத்தில் மரக்காணத்தில் நடந்த தலித் மக்கள் மீதான தாக்குதலை எதிர்த்து கண்டன இயக்கம் நடத்துவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஏப்ரல் 25 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவில் கலந்து கொள்ள வந்த பாமகவினர், வரும் வழியில் தலித் மக்களை தாக்கியிருக்கின்றனர். குறிப்பாக, மரக்காணத்தை அடுத்த கடயம் தெருவில் உள்ள தலித் குடியிருப்புகள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். இதில் தலித் மக்களின் பல குடிசைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதோடு, பலர் காயமுற்றுள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர்கள் தமிழகத்தில் சாதி கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு சாதி வெறியூட்டி பேசியிருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த இத்தகைய நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர்கள் சாதி வெறியூட்டி பேசிய பேச்சினைத் தொடர்ந்தே தருமபுரியில் 2012, நவம்பர் மாதத்தில் 3 கிராமங்களில் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். சாதி வித்தியாசம் இல்லாமல் தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சனைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டிய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஏழை, எளிய நடுத்தர உழைக்கும் மக்களை சாதி ரீதியில் பிளவுபடுத்தி சாதி மோதலை உருவாக்கும் நோக்கத்துடனேயே தலித் மக்கள் தாக்கப்பட்டனர்.

உழைக்கும் மக்கள் மத்தியிலான ஒற்றுமையைக் காக்க, தலித் மக்களின் மீது நடைபெற்ற தாக்குதலைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 8-5-2013 அன்று மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவெடுத்துள்ளன. இவ்வியக்கத்தை வெற்றி பெறச் செய்திட வேண்டுமென உழைப்பாளி மக்களுக்கு இரண்டு கட்சிகளும் வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply